தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா, தலைமையேற்று வழிநடத்திய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில், அவருக்குப் பிறகு ஜூமா என்பவர் கட்சியிலும் ஆட்சியிலும் கோலோச்சினார். பாலியல் வன்கொடுமைகள், ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட இந்த மக்கள் விரோத, சமூகவிரோத பேர்வழிதான் கட்சித் தலைவராகவும், அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அதிபராகவும் 2018 வரை வலம் வந்தார்.
இப்படிப்பட்ட ஊழல், மோசடி பேர்வழிகள்தான் கட்சியின் தலைவனாகவும், அதிபராகவும் வந்து தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை ஏகாதிபத்திய உள்நாட்டு பெருமுதலாளித்துவ பேர்வழிகள்தான் தீர்மானிக்கின்றனர். ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு ஊறு விளைவிக்கும் உண்மையான தேச விடுதலைப் போராளிகளை அவர்களின் அமைப்புகளை அனுமதிப்பது இல்லை. அப்படியே அவர்கள் வளர்ந்தாலும் அவற்றை ஒழிக்காமல் விடுவதில்லை.
படிக்க :
தென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா !
ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்
அதே வேளையில், சுரண்டலுக்கு ஏதுவாக ஒரு அடிவருடி கட்சியை உருவாக்கி தருவார்கள். இப்படிதான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) என்ற வெள்ளையன் உருவாக்கி இங்கிருக்கும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கும்பலிடம் ஒப்படைத்தது.
நள்ளிரவில் போலி சுதந்திரத்தை அக்கட்சியின் கையில் வழங்கி விட்டு மொத்த இந்திய நாட்டையும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒட்டச் சுரண்டி ஒட்டாண்டியாக்குவதற்கு இங்குள்ள தரகு முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் அதிகாரத்தை வழங்கி, தானும் சேர்ந்து கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பையும் உத்திரவாதப்படுத்திக் கொண்டது பிரிட்டிஷ் அரசு.
இப்படி தொடர்ந்து கொள்ளையடிப்பதற்கான உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதானே ஆட்சியை கை மாற்றிக் கொடுத்தான் வெள்ளையன்.
குப்தா சகோதரர்கள்
ஊழலிலும், லஞ்ச – லாவண்யங்களிலும் திளைத்து விளங்கும் இதுபோன்ற கைத்தடிகளையே ஆட்சியில் அமரவைத்து உயர்த்திப்பிடித்து அழகு பார்ப்பது ஆளும் வர்க்கங்களின் வழியாகும். அப்படி அழகு பார்க்கப்பட்டவர்களில் ஜூமா-வும் ஒருவர்.
ஊரைக் கொள்ளையடித்து உலையில்போடும் இப்படிப்பட்ட ‘உத்தமர்களுக்கு’ ஊற்றுக் கண்ணாக இருப்பவர்கள் குப்தா சகோதர்கள் போன்ற பெரு முதலாளிகளே. பெரும் முதலாளிகளாக இருந்து கொண்டு தமது கொள்ளைக்குச் சாதகமான சட்டங்களையும், சலுகை பறிப்புகளையும் ஜூமாவை வைத்து நிறைவேற்றினர் குப்தா சகோதரர்கள்.
அனைத்துத் துறைகளிலும் குப்தா சகோதரர்களின் சுரண்டலுக்கு ஏதுவான நம்பகமான பேர்வழிகளையே முக்கியப் பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் அமர்த்தினார் ஜூமா. ஊரைக் கொள்ளையடித்ததுபோக கருவூலத்தையே நேரடியாகக் கையாளும் அளவிற்கு உயர்ந்தது, குப்தா சகோதரர்களின் கை.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் அம்பானி, அதானியும் பிரதமர் மோடியும் நினைவுக்கு வருவது நியாயம் தான். ஜூமாவின் பகிரங்க நடவடிக்கைகளின் மீது மக்களின் அதிருப்தி அதிகமான நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த  சிரில் சாமசோபாவை அதிபராக்கினர் ஆளும் வர்க்கத்தினர்.
இதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனைக்கு ஆளானார் ஜூமா. ஊழல் வழக்கில் ஜெயா மீது விசாரணையைத் துவங்கிய உடனேயே அதிமுக அடிமைகள் வீதியில் திரண்டு வன்முறையில் இறங்கியதைப் போல ஜூமாவின் கைக்கூலிகள் – எடுபிடிகள் வன்முறையில் இறங்கினர்.
தென்ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்களால், குப்தாக்கள் போன்ற ஆளும் வர்க்கங்களின் கொடூரமான சுரண்டலால் விளைந்த வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சீரழிவு, ஊழல் முறைகேடு, பெருந்தொற்று பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்காதது போன்றவைகளால் பெருவாரியான மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
பசிக்கும், பட்டினிக்கும் பாதிப்புக்கும் உள்ளான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் இம்மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் குப்தாக்களின் அதிகார வெறியும், ஆதிக்க வெறியும் பெரும்பங்காற்றியது. . இதை அறிந்த தென்ஆப்பிரிக்க மக்கள் இவர்களின் சூப்பர் மால்களையும், உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளையும் சூறையாடினர். பெருமுதலாளிவர்க்க குப்தாக்களின் மீதான கோபம் அங்கு வாழ்ந்து வந்த இதர அப்பாவி இந்தியர்கள் மீதும் திரும்பியது.
ஜூமா சிறைக்குச் செல்லும் விவகாரம் தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.
குப்தா சகோதரர்கள் போன்ற ஆளும் வர்க்க கும்பல்கள் செய்த தவறுகளுக்கு , தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் வாழ்வையே மரணக்குழியில் தள்ளிவிட்டுள்ளனர்.
ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் சீரழிவிற்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது ஜூமாவைப் போன்ற மோடிக்கள் மட்டுமல்ல. குப்தாக்களைப் போன்ற அதானி, அம்பானிகளின் லாபவெறிக் கொள்ளையே காரணமாகும்.
தென் ஆப்பிரிக்காவிற்கு குப்தாக்கள் ! இந்தியாவுக்கோ அதானி, அம்பானி, கும்பல்கள் ! குப்தாக்களை ஒடவிட்டவர்கள் தென் ஆப்பிரிக்க மக்கள் ! அதானி, அம்பானி கும்பல்களை நாம் ஓடவிடுவது எப்போது ?
வினவு செய்திப் பிரிவு
கதிரவன்

2 மறுமொழிகள்

  1. இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூலிக்கு மாரடிக்கிறாற்போல் பணமாக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமே தவிர உண்மையில் ஒரு புல்லையும் புடுங்காது. அம்பானியிடமும் அதானியிடமும் நிதி பெறாத ஒரு
    கட்சி கூட இருக்காதென்பது என் கருத்து. காங்கிரஸ் கட்சிக்கு பணமாக்கலைப்
    பற்றிப் பேச எந்த தகுதியுமில்லை. பணப்பற்றாக்குறை வந்தபோது காங்கிரஸ்
    கட்சியின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் கார்ப்பரேட் வரி பாக்கிகளை வசூலித்தாரா. வருமான வரி ஏய்ப்புகளுக்கு எதிராக ரெய்டுகள் நடத்தினாரா? 2008லேயே ஐரோப்பாவில் எதிர்க்கப்பட்ட தாராளமய தனியார்மயக் கொள்கைகளை காங்கிரசும் காவியும் பிடித்துத் தொங்குவதற்கு காரணம் இந்த தேசத்தையே தனியாருக்கு விற்பதுதான். கோவிலில் சாமிக்குப் படையல் வைக்கும் போது திரை போடுவார்கள். அந்த திரைதான் இந்து முழக்கம். திருட்டு முட்டாள் கழகத்தின் மாயையிலிருந்தே மக்கள் விடுபடவில்லை. பணமாக்கல் சூழ்ச்சியெல்லாம் மக்களுக்குப் புரியுமா என்ன

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க