ங்க நகரம் என்று பெயர் பெற்ற ஜோகன்ஸ்பர்க் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமாகும். இது  தங்க மற்றும் வைர வியாபாரத்திற்காக பெயர் பெற்றது. அந்நாட்டின் தங்க உற்பத்தித் துறை, 130 ஆண்டுகளாக மலைகளைக் குடைந்து  சிலரை செல்வந்தர்களாக்கியுள்ளது. மறுபுறமோ இந்நகரத்தின் மையத்தில் யுரேனியம், ஆர்சனிக் போன்ற நச்சுக்கழிவுகள் மலைகளாக குவிக்கப்பட்டுள்ளன. அதன் மாசுக்கள் காற்றில் கலந்து அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இயற்கையையும் சீரழிக்கின்றன.

இம்மலைகளை சுற்றிலும் கிட்டத்தட்ட 15 இலட்சம் தென் ஆப்பிரிக்க மக்கள் வாழ்கின்றனர். அங்கிருக்கும் சாதாரண மக்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும்  நீண்ட நாட்களாகவே இதன் பாதிப்புகள் குறித்து அச்சம்  தெரிவித்து வந்துள்ளனர். அங்கிருக்கும் மக்களுக்கு இந்த நச்சு மாசுக்கள் கடுமையான இருமல் மற்றும் வாந்தி  பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கடுமையான நரம்பியல் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

“இந்த மாசுக்கள் கலந்துள்ள உணவையும் குடிநீரையும்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம்.  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மெதுவாகக் கொல்லும் ஒரு கொலைகாரன்” என்று டபோன்ஸ்விலே குடியிருப்பைச் சேர்ந்த ஸ்நேக் பார்க் பகுதிவாசியும் சமூக ஆர்வலருமான டினி லாமினி கூறினார்.

இந்த நச்சுக்கழிவுகளின் மிரட்டலிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவரது குடியிருப்புக்கு  அருகே சுரங்கத்திலிருந்து வரும் பச்சை நிற நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆடுமாடுகள் குடிக்கின்றன. குழந்தைகள் கூட அதில் குளிக்கின்றனர்.

கதிரியக்க அபாயம் கொண்ட 6,00,000 டன் யுரேனியம் ஜோகன்ஸ்பர்க்கில் கொட்டப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்காவின் வடக்கு – மேற்கு பல்கலைக் கழகம் 2013 -ம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“மாவு போல காற்றில் பறக்கும் யுரேனியத்தைப் போன்ற கொடூரமான ஒரு பொருளை மக்கள் செரிவாக குடியிருக்கும் ஒரு இடத்தில் மலை போல குவித்து வைப்பது மோசடியானது. இது மிகவும் மோசமான திட்டம்” என்று இதன்  சாத்தியமான பாதிப்புகள் குறித்து 20 ஆண்டுகள்  அதில்  வேலை பார்த்த  இகோர் குளோபிக் கூறுகிறார். இதுகுறித்து அரசாங்கத்திடம் முறையிட்ட போதும் எந்த அறிவியல் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை.

அங்கிருக்கும் மண் மற்றும் மக்களது முடிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி முடிவுகளுக்காக காத்திருக்கிறார் அங்கிருக்கும் மக்களிடம் வேலை பார்க்கும் ஊடகவியலாளர் மார்டின் போடட். இது மாசுபாட்டிற்கு எதிராக அந்நகரத்தை விழித்தெழ வைக்கும் என்று நம்புகிறார் அவர்.

மக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட காத்திருக்கும் இந்த நச்சு சூழல் திடீரென்று முளைத்ததல்ல.

130 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் தோண்டு எடுக்கப்படுவது, ஜோகன்ஸ்பர்க்கின் சுற்றுப் பகுதியையே மாற்றியுள்ளது.

2007-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்படும் தங்கத்தின் அளவு 46 விழுக்காடு குறைந்துள்ளது.

சுத்திகரித்து எடுக்கப்படும் ஒவ்வொரு 5 கிராம் தங்கத்திற்கும் 1000 கிலோ கழிவுகள் உருவாகின்றன.

ஜோகன்ஸ்பர்க்கில் மட்டும் கைவிடப்பட்ட 278  கழிவுக் குவியல்கள் உள்ளன.

200 சுரங்க கழிவுக் குவியல்களில் 600 கோடி டன் நச்சுக் கழிவுகள் உள்ளன.

இந்த நச்சுக்கழிவு குவியல்களுக்கு அருகே 15 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

13-14 வயது சிறுவர்களில் 10-13 விழுக்காட்டினருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறது.

55 வயதுக்கும் அதிகமானவர்களில் 17 விழுக்காடு மக்களுக்கு ஆஸ்துமா நோய் உள்ளது.

படிக்க:
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

மேற்சொன்ன புள்ளிவிவரங்களை பார்க்கும்போதே ஒரு பெரும் கேள்வி எழுகிறது. அந்நகரத்தின் பிரச்சினைகள் கண்கூடாகத் தெரியும் போது, ஏன் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை?


நன்றி : aljazeera
தமிழாக்கம்: சுகுமார்