மீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, தங்கள் ஆட்சிதான் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியது என பெருமிதத்துடன் பேசினார்.  மோடிக்கு வாக்கு கேட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த மாலன் உள்ளிட்டவர்கள் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு ‘நிறைய’ செய்துள்ளதாக குறிப்பிட்டனர். ஒன்றுமே செய்யாதபோதும் செய்ததாக சொல்லிக்கொள்வதில் இந்துத்துவ கும்பலுக்கு நிகர் அவர்களேதான்.

2012-ம் ஆண்டு, டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த ‘நிர்பயா’ நினைவாக, பெண்கள் பாதுகாப்புக்கு தொடர்பான திட்டங்களுக்கு உருவாக்கப்பட்டது ‘நிர்பயா நிதி’. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதியை மோடி அரசு எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்பதை அறியும்பொருட்டு த வயர் இணையதளம், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து தகவலைப் பெற்றுள்ளது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம்’ என முழங்கிய மோடி, ‘நிர்பயா நிதி’க்கு ரூ. 3600 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அளித்த தகவலில் ஆகஸ்ட் 3, 2018 வரையான காலத்தில் ரூ. 979.70 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொகையில் ரூ. 825 கோடி ஐந்து பெரிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் Emergency Response Support System (ERSS) என்ற திட்டத்துக்கு 2016-17 ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 321.69 கோடிக்கு பதிலாக ரூ. 273.36 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. அதாவது மொத்த தொகையில் 85% மட்டுமே தரப்பட்டுள்ளது.

மீண்டும் 2016-17ஆண்டில் இதே திட்டத்துக்காக ரூ. 217 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. 2017-18 ஆண்டில் இது ரூ. 55.39 கோடியாக குறைத்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கு பெண்களின் அவசரகால உதவிக்கு உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை இதுவரை இரண்டு மாநிலங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளன. ஹிமாச்சல பிரதேசம், நவம்பர் 28-ம் தேதி, 2018 அவசர அழைப்பு எண் 112-ஐ இந்த திட்டத்தின் கீழ் ரூ. 4.20 கோடி செலவில் அறிமுகப்படுத்தியது.  நாகாலாந்து, டிசம்பர் 1, 2018-ம் ஆண்டு ரூ. 4.88 கோடி செலவில் அவசர எண் வசதியை அறிமுகப்படுத்தியது.

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்,  ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மோடியின் வெற்று முழக்கங்களின் பட்டியலில் பெண்களை பாதுகாப்போம்; பெண்களுக்கு கல்வி தருவோம் என்ற முழக்கமும் இணைந்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது.

படிக்க:
♦ பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !
♦ பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !

பாதிக்கப்பட்டோருக்கான மத்திய அரசின் நிதி (Central Victim Compensation Fund -CVCF)-யும் இப்படித்தான் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. 2016-ம் ஆண்டு 29 மாநிலங்களுக்கும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கென ரூ. 200 கோடி நிவாரண நிதி ஒதுக்கியது மத்திய அரசு.  அரசு ஆணைப்படி, உத்தர பிரதேசம் அதிகப்படியாக, ரூ. 28.10 கோடி நிதி பெற்றது. அதற்கு அடுத்த நிலையில், மத்திய பிரதேசமும் மகாராஷ்டிரமும் முறையே ரூ. 21.80 கோடியும் ரூ. 17.65 கோடியும் நிதி பெற்றன.

தேசிய குற்ற ஆவண பணியகத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கை, 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55.2 %-ஆக உயர்ந்துள்ளதைக் கூறியது. கணவர் மட்டும் அவரது குடும்பத்தினரால் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் 33 சதவீதமாக உள்ளதாகவும் அறிக்கை கூறியது.

2016-ம் ஆண்டில் மட்டும் 38,947 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் நான்கு பெண்கள் இந்த குற்றத்துக்கு ஆளாவதாகவும் அறிக்கை சொன்னது.

நிலைமை இவ்வாறு இருக்க, பாதிக்கப்பட்ட பெண்களில் 25% பேருக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு முடிவு செய்தாலுமேகூட, தலா ஒருவருக்கு ரூ. 3 லட்சம் என வைத்துக்கொண்டால் மொத்தமாக ரூ. 292 கோடி தேவை.

ஆனால், இந்தத் திட்டத்தால் எத்தனை பெண்கள் நிவாரணம் பெற்றார்கள் என்ற தகவலை அரசு அளிக்கவில்லை. பத்து விதமான குற்றங்களுக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் நிலையில், யாருக்கு எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக்கூட அரசு சொல்லவில்லை.

அதுபோல, Integrated Emergency Response System (IERMS) திட்டத்தை அமலாக்குவதற்காக 2016-17 ஆண்டில் ரூ. 50 கோடியும் 2017-18 ஆண்டில் ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், மக்களவையில் எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ரயில்வே அமைச்சகம் அளித்த ஆர்.டி.ஐ தகவலில் ரூ.50 கோடி மட்டுமே பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனில், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தாரா? சரி, இந்த நிதியையாவது ரயில்வே துறை பயன்படுத்தியா என்றால் அதுவும் இல்லை. 67 பிரிவுகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக டெண்டர் கோரப்பட்டது மட்டும்தான் இதுவரை இந்த திட்டம் அமலாக்கப்பட்டதன் நிலை.

ஒரு நிறுத்த மையம் (One-Stop Centre) :

2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே இடத்தில் மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல்துறை உதவி உள்ளிட்ட உதவிகளை தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

ஒரே நேரத்தில் நாடு முழுக்க இந்த திட்டம் அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ. 867.74 கோடி ஒதுக்கப்பட்டது. ஆகஸ்டு 2018 வரை இந்த திட்டத்துக்காக ரூ. 109 கோடியை மட்டுமே அரசு விடுவித்துள்ளது.

படிக்க:
♦ மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 718 மையங்களில் 232 மையங்கள் மட்டுமே தற்போது செயல்படுபடுகின்றன. 536 மையங்களுக்கு மட்டும் தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது.  2017-ஆம் ஆண்டு போபாலில் ஒரு மையம் அமைக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது.  இதுநாள் வரை மாநிலத்தின் வேறு எந்த இடத்திலும் மையங்கள் திறக்கப்படவில்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய குற்றங்களை தடுத்தல் :

உள்துறை அமைச்சகம் இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. 2017-18 ஆண்டில் ரூ. 94.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சகத்தின் இணையம் தெரிவிப்பதன்படி, ரூ. 6 கோடி செலவில் 45,000 போலீசு அதிகாரிகள், வழக்கறிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு 2020 மார்ச் வரை பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை மேகாலயாவில் 23 போலீசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரே ஒரு பயிற்சி முகாம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ. 87.12 கோடி மாநிலங்களில் இணைய தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கவும் தடயவியல் ஆலோசகர்களை நியமிக்கவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படியான ஆய்வகங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

ஆவணங்கள், அரசின் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது மோடி தலைமையிலான அரசு, ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கியுள்ளது. உண்மை இப்படியிருக்க, ‘பெண்கள் பாதுகாப்புக்கான அரசு’ என வெற்று முழக்கங்களையும் பிரச்சார கூட்டங்களில் விண்ணை முட்டும் அறிவித்தல்களையும் செய்துகொண்டிருக்கிறார் மோடி.


அனிதா
செய்தி:
த வயர்