உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !

ள்ளூரில் செல்வாக்குமிக்க எம்.எல்.ஏ.வான பாஜகவைச் சேர்ந்த குல்தீப் சிங் செங்காரிடம் வேலை கேட்டுப் போனார் 17 வயது இளம் பெண். அவரை குல்தீப் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கினார்.

தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அந்தப் பெண்ணும், அவருடைய குடும்பத்தினரும் காவல் நிலையம் சென்றனர். அங்கு வழக்கு பதியக்கூட மறுக்கப்பட்டது. பல மிரட்டல்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் ஆளான அந்தப் பெண்ணும் அவரது குடும்பமும் உ.பி. முதலமைச்சர் முன் தற்கொலைக்கு முயற்சித்தார்கள். இது தேசிய ஊடகங்களின் கவனத்தைத் திருப்பியது. வேறு வழியில்லாமல் ஆளும் பாஜக அரசு, தனது எம்.எல்.ஏ -வை கைது செய்தது.

unnao-kuldip-singh-sengar
பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங்

ஆனாலும் அரசியல் செல்வாக்கு மிக்க பாஜக எம்.எல்.ஏ.-வும் அவரது படையும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் வெறிகொண்டு துரத்தியது. பெண்ணின் தந்தை பொய்க்குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகி, காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். பெண்ணின் நெருங்கிய உறவினர் பொய் வழக்கில் கைதானார்.

தினந்தோறும் மிரட்டலை சந்தித்த அந்தக் குடும்பம் பாதுகாப்புக் கேட்டது. இந்துக்களை பாதுகாக்கும் ரட்சகனாக தன்னை அறிவித்துக்கொள்ளும் ஆதித்யநாத், ஒரு ‘இந்து’ குடும்பத்தை பாதுகாக்கத் தயாராக இல்லை. மனித உரிமை அமைப்புகளின் தலையீட்டினால் பெயருக்கு ஒரு காவலரை நிறுத்தியது.

இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாகிவிட்ட அந்தப் பெண்ணை தீர்த்துக்கட்டும் பொருட்டு, கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் சென்றுகொண்டிருந்த காரை லாரி மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார்.

விபத்து நடந்தபோது, இது தற்செயலான விபத்து என உ.பி. போலீசு முந்திக்கொண்டு சொன்னது. அடுத்தடுத்த நாட்களில் இது திட்டுமிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல பாஜக எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்த விபத்து என தெரியவந்தது.

படிக்க:
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

பொது சமூகத்தின் கவனம் பெற்றதன் காரணமாக இந்த வழக்கில் தலையிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ -க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வார காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால், மேலும் ஒரு வார கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 45 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு தனித்தனியாக மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு வழங்காத ஆதித்யநாத் அரசுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பெண்ணின் குடும்பத்துக்கு அந்தத் தொகையை அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Unnao rape survivor injured in accidentலாரி மோதியதில் இரண்டு உறவினர்களை இழந்த அந்தப் பெண்ணும் அவருடன் சென்ற வழக்கறிஞரும் இன்னமும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

ஒரு எளிய பெண்ணின் மீது பாஜக எம்.எல்.ஏ. நடத்திய அதிகார தாக்குதலை எந்த வகையிலும் கண்டிக்காத பாஜக மேலிடம், தொடர்ந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், உ.பி. அமைச்சர் பிரதாப் சிங்கின் மருமகன் அருண் சிங்கிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை லாரி ஏற்றிக்கொல்ல முயற்சித்த வழக்கில் தொடர்பிருப்பதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

காவிகள் அமைக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதற்கு உன்னாவ் வழக்கு ஓர் உதாரணம். வல்லுறவுகளையும் வன்கொடுமைகளை நியாயப்படுத்தும் மனுநீதியை கொள்கையாகக் கொண்டவர்களின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?


கலைமதி
நன்றி : டெல்கிராப் இந்தியா, ஹாஃபிங்டன் போஸ்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க