உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட லாரி மோதியதில் அப்பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். உறவினர்கள் இருவர் மரணம்.

0
unnao-rape-victim-accident-raebareli

ரண்டாண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங் செனெகர் மற்றும் அவரது கூட்டாளிகள் உன்னாவ்-வில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். அதனைத் தொடர்ந்து அப்பெண் புகாரளித்ததன் அடிப்படையில் செனெகர் கைது செய்யப்பட்டார்.

unnao-kuldip-singh-sengar
பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங் செனெகர்

அன்றிலிருந்து பாஜக குண்டர்களிடமிருந்து தொடர்ச்சியான தாக்குதல்களையும் மிரட்டல்களையும் சந்தித்து வந்தார் அப்பெண். தற்போது கடந்த ஞாயிறு (28-07-2019) அன்று மதியம் 2 மணியளவில், அவர் சென்ற வாகனத்தின் மீது வாகன எண் மறைக்கப்பட்ட லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவரது உறவினர்கள் இருவர் மரணமடைந்தார். அப்பெண்ணும், அவரது வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செனெகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் தொடர்ச்சியாக அப்பெண்ணை குல்தீப்சிங் செனெகரும் அவரது சகோதரர் அதுலும் புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டே செனெகரும் அதுலும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும்,  தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டிவந்தார் செனெகர்.

பின்னர் அப்பெண்ணின் தந்தை மீது பொய்க் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது போலீசு. கைது செய்யப்பட்ட பின்னர் போலீசு கொட்டடியில் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் அப்பெண்ணின் தந்தை.

படிக்க:
♦ உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !
♦ ‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

அதோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாய் இருந்த அவரது உறவினர்கள் மீதும் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியது போலீசு. இந்நிலையில் அமேதி சிறையில் இருக்கும் தனது மாமாவைப் பார்க்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞரோடு காரில் ஃபதேபூரிலிருந்து அமேதி செல்லும் சாலையில் கடந்த ஞாயிரன்று மதியம் இரண்டு மணியளவில் சென்று கொண்டிருக்கையில் லாரி ஒன்று அவர்களது வாகனத்தின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண்ணின் உறவினர்கள் இருவரும்  உயிரிழந்தனர். கடுமையான காயமடைந்த மற்ற அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பெண்ணும் வழக்கறிஞரும் இன்னமும் அபாயகரமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

unnao-rape-victim-accident-raebareli
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, மோதிய பதிவு எண் மறைக்கப்பட்ட லாரி.

இதுகுறித்து போலீசு கூறுகையில், அவர்கள் வாகனத்தை இடித்த லாரியின் எண் கருப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் மோதி விட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுனர் கைது செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில் தொடர்ச்சியாக தங்களது குடும்பத்திற்கு மிரட்டல் வந்து கொண்டிருந்ததாகவும், தற்போது தங்களது குடும்பத்தாரை மொத்தமாக கொன்றுவிடவே இந்த திட்டமிட்ட வாகன மோதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட போலீசும் அந்த நாள் அவருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேட்டியளித்த போலீசு எஸ்.பி. வெர்மா, பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டவர்கள் பணிக்கு வராதது குறித்து விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், விசாரணை முடிந்ததும் தக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர்தான், சிறையில் இருக்கும் செனெகரை அப்பகுதி பாஜக எம்.பி -யான சாக்சி மகராஜ் சென்று சந்தித்து தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தார் எனில் சிறையில் இருக்கும் ஒரு கிரிமினலுக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்து கொள்ளமுடியும். இந்த செல்வாக்கின் காரணமாகத்தான் இந்தியாவே கவனத்தில் கொண்டுள்ள ஒரு மோசமான பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை எவ்வித தயக்கமும் இன்றி போலீசைக் கொண்டு கொட்டடிக் கொலை செய்ய முடிந்துள்ளது.

வாகன எண் மறைக்கப்பட்ட லாரி, பாதுகாப்புப் பணிக்கு வராத போலீசு பாதுகாவலர்கள், செனெகரின் செல்வாக்கு, சாக்சி மகராஜின் சமீபத்திய சந்திப்பு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கையில் இந்த வாகன மோதல் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது.

கேடிச் சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் போலி மோதல் கொலைச் ‘சாதனைகள்’ படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற வாகன மோதல்கள் எல்லாம் சர்வசாதாரணம் அல்லவா ?


நந்தன்

செய்தி ஆதாரம் :  த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க