ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 4

முதல் பாகம்  படிக்க

ஜார்க்கண்ட் – பெயர் குறிப்பிடாத 10,000 ஆதிவாசிகள் மீதான தேசத்துரோக வழக்குகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
ஆதிவாசி நைய் மன்ச் என்ற கிராம அமைப்பினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் இந்திய அரசியலமைப்பின் செதுக்கல்களுடன் கூடிய ஒற்றைக் கல்.

ஜார்க்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் ஆதிவாசிகள் மீது போடப்பட்ட கொத்துக் கொத்தான தேசத்துரோக வழக்குகளை எதிர்த்து, ரிட் மனு மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிவாசி நைய் மன்ச் என்று புதிதாக அமைக்கப்பட்ட கிராம அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுனில் விஸ்வகர்மா ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த மனுவில், வழக்குகளை சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்க்ரோல்.இன் அறிவித்தபடி, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மாவட்ட காவல்துறையினர் தாக்கல் செய்த 14 முதல் தகவல் அறிக்கைகளில் பதல்கடி இயக்கத்தில் பங்கேற்ற 10,000 ஆதிவாசிகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஸ்க்ரோல்.இன் (Scroll.in) பார்த்ததைவிட அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் இருக்கும் பட்சத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும்.

ரிட் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜார்கண்ட் அரசாங்கம் மற்றும் காவல்துறைக்கு ரிட் மனு பிரதிகளை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணை நிலுவையில் உள்ளது.

பதல்கடி இயக்கம் கல்வெட்டுகள் நடுவதைக் குறிக்கிறது, 2017 ஆம் ஆண்டில் ஆதிவாசி கிராமங்கள் இந்திய அரசியலமைப்பில் பழங்குடி சுயாட்சி தொடர்பான விதிகளை ஒற்றைக் கல் பலகைகள் மூலம் விளக்கின. ஆதிவாசிகளைத் தவறாக வழிநடத்துவதற்கும், அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுவதற்கும் இயக்கத்தின் தலைவர்கள் அரசியலமைப்பு குறித்து “தவறான விளக்கத்தை” பரப்புவதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், கற்களில் பொறிக்கப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் விளக்கத்தில் என்ன தவறு என்பதை விசாரணை அதிகாரிகள் நிறுவத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
“பிரிவு 124 (A) இன் கீழான குற்றம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க:
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

இந்தப் பிரச்சனை ஆதிவாசி சமூகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் ஐந்தாவது அட்டவணை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றாலும், பயிற்சியில் உள்ள ‘கற்றுக்குட்டி’ காவல் அதிகாரிகளின் சுய விருப்பதின்பேரிலேயே வழக்கு புனையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகள் “பழங்குடி வழக்கம், விதி மற்றும் கலாச்சாரம்” தொடர்பானவை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது, ஆனால் விசாரணை அதிகாரிகள் இந்த அம்சங்களை கவனிக்கவில்லை அல்லது ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடி சமூகங்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை அவர்கள் ஆராயவில்லை.

ஒற்றைக் கல் பலகைகள் அமைப்பது ஆதிவாசி வழக்கத்தின் “பயன்பாடு மற்றும் முக்கியத்துவம்” குறித்து விசாரிக்காமல் பதல்கடியில் பங்கேற்பது ஒரு குற்றமாக போலீசார் முத்திரை குத்தியுள்ளனர்.

வழக்கு நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் பழங்குடி மக்கள்.

குந்த்தியின் மக்கள் தொகையில் 70% பேர் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்று ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் “பெயர் தெரியாத” நபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் யாரையும் எந்த நேரத்திலும் பொய்யாக இதில் சிக்க வைக்க முடியும்.

அருகிலுள்ள கிராமங்களில் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜூன் 9 ஆம் தேதி பாண்ட்ரா கிராமத்தில் ஆதிவாசி நியாய மஞ்ச் அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், ஜார்கண்ட் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்களில் கூறப்பட்டுள்ளபடி, குந்த்தியில் தேசத்துரோக வழக்குகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளுக்கு நீதி கோருவதாகும்.

இந்த நிருபர் நவம்பர் தொடக்கத்தில் ஒரு நாளில் பாந்த்ரா கிராமத்தில் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்தார், அவர்கள் வழக்கு நிதிக்காக கிராம மக்களிடமிருந்து நன்கொடைகளை சேகரிக்கும் முயற்சியைத் தொடங்கினர்.

***

ஜார்க்கண்டில் 10,000 ஆதிவாசிகளுக்கு எதிரான தேசத் துரோக வழக்குகள் இந்திய ஜனநாயகம் பற்றி வெளிப்படுத்துகின்றன. பதல்கடி இயக்கத்தின் மையமாக உள்ள குந்த்தி மாவட்டத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் தயாமனி பார்லாவுடன் ஒரு நேர்காணல்.

ராஞ்சியில் தனது கணவருடன் இயங்கும் தேநீர் கடையில் தயாமனி பார்லா.

முந்தைய பகுதியில், பதல்கடி இயக்கத்தில் பங்கேற்றதற்காக குந்த்தி மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் மீது ஜார்க்கண்ட் அரசு தொடுத்துள்ள தேசத்துரோக வழக்கு குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்தோம். இந்தப் பகுதியில், பத்தல்கடி இயக்கத்தின ஒரு அம்சமான தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பு குறித்து நாம் மிக நெருக்கமாக இங்க ஆராய்வோம்.

2017-ம் ஆண்டில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து ஒரு மணிநேரம் தொலைவில் உள்ள குந்த்தி மாவட்டத்தில் உள்ள கிராம சந்திப்புகளில் வர்ணம் பூசப்பட்ட பச்சை நிற ஒற்றைக் கல்பலகைகள் உருவாகத் தொடங்கின. பழங்குடி சுயாட்சி தொடர்பான இந்திய அரசியலமைப்பின் விதிகள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன என ஆதிவாசிகள் விளக்கமளித்தனர். காலனிய காலத்திலிருந்து தொடரும் ஆதிவாசிகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஆதிவாசிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து பழங்குடி மக்களின் உரிமையைப் பாதுகாக்கவே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பதல்கடி என்று அழைக்கப்படும் இந்த இயக்கம், அதாவது, கற்களை இடுவது, முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையில் ஒற்றைக் கல் நிறுவும் பழமை வாய்ந்த முண்டா ஆதிவாசி பாரம்பரியத்தை இந்த இயக்கம் ஈர்த்தது. 1990-களின் பிற்பகுதியில், ஆதிவாசி பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சுயாட்சி வழங்கும் பஞ்சாயத்து (விரிவாக்கம்) திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கான சட்டங்களும் இதேபோல் கற்களில் பொறிக்கப்பட்டன.

படிக்க:
மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !
நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

ஆயினும், பதல்கடியில் இருப்பது குஜராத்தில் உள்ள சதிபதி வழிபாட்டின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது, இது இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி அங்கீகரித்தபடி, ஆதிவாசிகள் இந்தியாவின் உரிமையாளர்கள் என்று கூறுகிறது. 1930 -களில் குஜராத்தின் பழங்குடிப் பகுதிகளில் எழுந்த சதிபதி இயக்கத்தின் தடங்களைக் கொண்டுள்ளது இந்த பத்தல்கடி இயக்கம். இதைப் பின்பற்றுபவர்கள் அரசாங்க சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பயன்படுத்த மறுத்து தேர்தல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். குஜராத்தில் அரசு நிர்வாகம் பெரும்பாலும் பழங்குடி மக்களைப் புறக்கணித்ததாகவேத் தெரிகிறது. உரிமைகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்ட ஆதிவாசி இயக்கங்களைப் போலல்லாமல், சதிபதி பின்பற்றுபவர்கள் மாநிலத்தின் செயல்களிலிருந்து விலகி இருக்க விரும்பினரேயன்றி மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் வகையில் செயல்படவில்லை.

ஜார்கண்டில் உள்ள பதல்கடி இயக்கத்தின் தலைவர்களை குஜராத்தின் சதிபதி முறை எவ்வாறு பாதித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பழங்குடி மக்களின் சுயாட்சிக்கான அரசியலமைப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்கள் சதிபதியின் சில யோசனைகளை தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம்.

ஆனால் பதல்கடி மீது அரசாங்கம் பெரிதும் தாக்குதல் நடத்திய போது, அதன் தலைவர்களில் பலரைக் கைதுசெய்து, ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி, அதன் மூலம் கல் போடும் விழாக்களை நிறுத்தி வைத்தாலும், குஜராத்தைச் சேர்ந்த சதிபதி தலைவர்களை இது மிகவும் ஈர்த்ததாகத் தெரிகிறது.

அக்டோபர் 14-15 தேதிகளில், குந்த்தி மாவட்டத்தின், குட்டிகடா கிராமத்தில் விஸ்வ சாந்தி சம்மேளனத்தின் கீழ் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த சதிபதி தலைவர்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பதல்கடி நிகழ்வுகள் மீதான ஒடுக்குமுறையைப் போலல்லாமல், காவல்துறை இந்தக் கூட்டத்தை சீர்குலைக்கவில்லை.

‘ஏ.சி.பாரத் சர்க்கார்’ சின்னங்களுடன் சுவரொட்டிகள் குழுவின் ஒரு பகுதியாக சதிபதி தலைவர் குன்வர் கேசரி சினின் புகைப்படம்.

சில வாரங்கள் கழித்து, மேற்கண்ட கூட்டத்தின் தடயங்கள் குட்டிகாடா கிராமத்தில் இன்னும் காணப்பட்டன. சதிபதி தலைவர் குன்வர் கேசரி சின் நிறுவிய ஆதிவாசி மாநிலம் என்று அழைக்கப்படும் “ஏசி பாரத் சர்க்கார்” என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட லேமினேட்டட் சுவரொட்டிகள் மண் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்தன. ஆதிவாசி ஆண்களும் பெண்களும் வெள்ளை நிற உடையணிந்து வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் விஸ்வ சாந்தியைப் பின்பற்றுபவர்கள் என்று ஒரு இளைஞர் கூறினார்.

அவர் கோடிட்டுக் காட்டிய கருத்துக்கள் சதிபதியின் கொள்கைகளில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆதிவாசிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட அரசுக்கு வெளியே உள்ளவர்கள், இந்திய நீதிபரிபாலன முறைக்கு அப்பாற்பட்டவர்கள், இயற்கையான மக்கள் ஆவர்.

அவர்களும் பதல்கடியைப் பின்பற்றுபவர்களா என்று கேட்டதற்கு, அந்த இளைஞர் விஸ்வ சாந்திக்கு பத்தல்கடி இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தினார். “இந்திய அரசியலமைப்பு ஆதிவாசிகளுக்கு பொருந்தாது, இதற்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை,” என்று அவர் அறிவித்தார். அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்றால், நில வருவாய் விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? “ஆதிவாசி அல்லாத இந்திய மக்கள் அதாவது உங்கள் அமைப்பு கூட எங்களை ஏ.சி.பாரத் மக்கள் என அங்கீகரிக்கிறது” என்று அவர் கூறினார்.

சதிபதி முறையைப் பின்பற்றுபவர்கள் கூறும் நில வருவாய் புத்தகங்கள் மற்றும் முத்திரைகள் ஒரு ஆதிவாசி அரசின் இருப்பை நிலைநிறுத்துகின்றன.

பா.ஜ.க அரசாங்கம், பத்தல்கடி இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த இயக்கத்தை சீர்குலைக்க முயல்வதாக ஜார்கண்ட்டில் உள்ள பல ஆதிவாசி தலைவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதிவாசிகளை தேர்தலிலிருந்து விலகி இருக்கச் செய்வதன் மூலம் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் சவாலான இந்த இயக்கம் உயிர்ப்பற்ற முறையில் அதன் வீரியத்தை இழப்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக மே மாதம், குந்த்தியில் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய ஆதிவாசிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் பா.ஜ.க 1,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இங்கே குறிப்பிடலாம்.

இந்த நிகழ்வுகளால் கலக்கமடைந்தவர் ஆதிவாசி தலைவர்களில் ஒருவரான தயாமனி பார்லா. இவர் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். பல பத்தாண்டுகளாக, பழங்குடியினரை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களில் பார்லா முன்னணியில் உள்ளார். உலகளாவிய கூட்டு நிறுவனமான ஆர்செலர்-மிட்டலின் எஃகு திட்டம் (Steel Project) அமைப்பதை எதிர்த்து வெற்றிகரமான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உடனேயே அவர் 2012-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்க:
வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி
♦ எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

2014-ம் ஆண்டு, குந்த்தி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பார்லா போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி தலைமையிலான பிராந்தியக் கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் இந்த ஆண்டு, தற்போது நடைபெறும் குந்த்தி தொகுதியில் இருந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆதிவாசிகள் தேர்தல் செயல்முறையிலிருந்து விலகி இருப்பது மற்றும் பதல்கடி இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த ஆபத்துகள் பற்றி ஸ்க்ரால்.இன் (scroll.in)-க்கு அளித்த பேட்டியில் தனது அச்ச உணர்வை பார்லா வெளிப்படுத்தினார். கடினப் போராட்டத்தின மூலம் பெற்ற அரசியல் அமைப்பு உரிமைகள் இன்று மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளன என்கிறார் அவர்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு சபையில் பழங்குடி சமூகங்கள் சார்பாக பங்கேற்ற குந்த்தியில் பிறந்த மக்களைக் கவர்ந்த தலைவர் ஜெய்பால் சிங் முண்டா அவர்கள் தலையீட்டின் பேரிலேயே ஆதிவாசிகளின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டன; ஜெய்பால் சிங் முண்டா அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்காது என்கிறார் பார்லா.

அரசியலமைப்பு சபையின் விவாதங்களின் போது ஜெய்பால் சிங் முண்டா அவர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாகவே மிகவும் பயனுள்ள ஐந்தாவது அட்டவணை இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்க அரசியலமைப்பு சபையை நெட்டித் தள்ளியது. பதல்கடி கல்வெட்டுகளில் உள்ள விளக்கங்கள் அவரது புரிதலை பிரதிபலிப்பவை.

***

பார்லாவுடனான நேர்காணல், ராஞ்சியில் தனது கணவருடன் அவர் நடத்தும் தேநீர் கடையில் எடுக்கப்பட்டவை.

குந்த்தி மாவட்டத்தில் இருந்து தற்போதுதான் திரும்பினோம். அங்கு 10,000-க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரசியலமைப்பின் ஒரு பகுதியை கல்லில் எழுதுவது அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் தேசத்துரோக செயலாக எப்படி இருக்கும்? இது பதல்கடி ஆதிவாசி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். சட்டத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க கல் வெட்டுகளைப் பயன்படுத்துவதற்கான யோசனை கூட புதியதல்ல. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சமூக ஆர்வலருமான பி.டி. சர்மா 1990-களில் கற்களில் திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்து விரிவாக்கத்தின் விதிகளை எழுத கிராமங்களை ஊக்குவித்தார்.

இயக்கம் பற்றி நீங்கள் எப்போது முதலில் அறிந்தீர்கள்?

பதல்கடி தொடங்கியபோது, ‘பதல்கடி நிகழ்கிறது, பதல்கடி நிகழ்கிறது’ என்று கேள்விப்பட்டோம். ஆனால் செய்தித்தாள்களில் அதைப் பற்றிய செய்திகள் வந்த பின்னரே, அது உண்மையில் நிகழ்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால், அதை வளர்ச்சிக்கான எதிர்ப்பு, அரசாங்க எதிர்ப்பு என்று செய்தித்தாள்கள் சித்தரித்தன. அது நடந்த கிராமங்களுக்கு நான் சென்றபோது, பாந்த்ராவைப் போலவே, ஊடக அறிக்கையும் தவறானது மற்றும் ஒரு பக்கச்சார்பானது என்பதை உணர்ந்தேன். இயக்கத்தை கேவலப்படுத்தும் முயற்சியாகவே இது இருந்தது.

இந்திய அரசியலமைப்பு செதுக்கப்பட்ட கல் வெட்டு. இதற்குப் பின்னால் அமைந்திருப்பது ஒரு தூய்மை இந்தியா விளம்பரம். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட மோசமான கழிப்பறைகள் தங்களுக்கு சிறிதும் பயன் அளிக்கவில்லை.

பதல்கடியை கிறிஸ்தவ மிஷனரிகள் நிதியுதவி செய்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், கிறிஸ்தவர்களின் அதிக மக்கள் தொகை கொண்ட குந்த்தி மாவட்டத்தில் உள்ள டோர்பா வட்டாரத்தில் எந்த பதல்கடி விழாக்களையும் காணவில்லை என்ற உண்மையை அவர் விளக்கினார்.

உள்ளூர் எம்.எல்.ஏ நீலகாந்த் முண்டா மற்றும் உள்ளூர் எம்.பி. கரியா முண்டா இருவரும் அங்கம் விகிக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் பின்னணியில்தான் பதல்கடி இயக்கம் தொடங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்கள் ஏன் தங்கள் சகாக்களிடம் இதை எடுத்துச் செல்லவில்லை? அவர்கள் நினைத்திருந்தால், இந்தச் பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்சனையை பெரிதாக்குவது அரசாங்கத்திற்கு ஏதுவாக இருந்தது.

நீங்கள் பேசும் பிரச்சனை என்ன?

மக்கள் பதல்கடியைத் தொடங்கியபோது, அவர்கள் அதை சரியான வழியில் தொடங்கினர், அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், ஆனால் பின்னர் ஒரு புதிய நாணயத்தை உருவாக்கும் எண்ணத்தைப் போல விசித்திரமான கருத்துக்கள் நுழைந்தன. இந்த யோசனைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

ஆனால், ஆதிவாசிகளின் கூட்டு வலிமையை உடைக்கும் நோக்கத்துடன், இயக்கத்தை கேவலப்படுத்தவும், அப்பாவி மக்களை கைது செய்யவும் அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்தியது. ஆதிவாசிகள் தேசத்துரோகம் செய்கிறார்கள் என்பதை அரசாங்கம் நிரூபிக்க விரும்பியது. இப்பகுதியில் இப்போது நடப்பவை அனைத்தும் வெளிப்படையாகனதாகவும் திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது.

இதை ஏன் சொல்கிறீர்கள்?

கிராமத் தலைவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் சுமத்தி வருகிறது, ஆனால் இந்த இயக்கத்தில் குஜராத் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். குஜராத் தொடர்பு இருப்பதாக அரசாங்கமே கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வேட்டையாடுவதாக அது கூறுகிறது. அப்படியானால், குஜராத்திலுள்ளவர்களை ஏன் அரசாங்கம் கைது செய்யவில்லை? குந்த்தியில் உள்ள அப்பாவி கிராமவாசிகளை மட்டும் வேட்டையாடி சிறையில் அடைப்பது ஏன்?

ஆனால் பதல்கடி இயக்கம் முற்றிலும் உள்ளூர் சார்ந்ததல்லவா?

பதல்கடி குஜராத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்படவில்லை, அது எங்கள் சொந்த மக்களால் தொடங்கப்பட்டது. ஆனால் இயக்கங்களில் ஊடுருவி அது எவ்வாறு உள்ளிருந்தே திசைதிருப்பப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது கடினம். இந்த இயக்கம் தற்போது பெற்றிருக்கின்ற வடிவத்தைப் பார்க்கும் போது மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் கை இருப்பதைக் குறிக்கிறது.

உங்கள் கூற்றுப்படி, பா.ஜ.கவின் கை இருப்பதற்கான அறிகுறிகள் யாவை?

தேர்தல் புறக்கணிப்புக்கான கோரிக்கை. இந்த கோரிக்கையை பாஜக விரும்புகிறது, ஏனெனில் அது அவர்களுக்கு பொருந்தும். சமீபத்தில், விஸ்வ சாந்தி சம்மேளனத்தின் பதாகையின் கீழ் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பதல்கடி இயக்கத்தின் மீதான அடக்குமுறை ஏற்கனவே அதிகமாக ஏவப்பட்டிருந்தாலும் இம்முறை, கூட்டம் நடக்க அரசாங்கம் அனுமதித்தது.

படிக்க:
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
♦ வேதாந்தாவை எதிர்த்துப் போராடிய லிங்கராஜ் ஆசாத் தேசத்துரோக வழக்கில் கைது !

பதல்கடி மீது அரசாங்கம் ஏன் பெரிய அளவில் அடக்குமுறையை ஏவியது என்று நினைக்கிறீர்கள்?

ஏனென்றால், மக்கள் தங்கள் உரிமைகள் குறித்து தெளிவு பெற்று வருகிறார்கள்.
1829 கோல் கிளர்ச்சி, 1859 சர்தாரி கிளர்ச்சி, 1890 பிர்சா முண்டாவின் உல்குலன் ஆகிய ஆதிவாசிகளின் முக்கியமான எழுச்சிகள். இவை அனைத்தும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் ஒன்றான குந்த்தி மாவட்டத்திலிருந்து மட்டுமே தோன்றின என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

சுதந்திர இந்தியாவிலும், வளர்ச்சி திட்டங்கள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட கோயல் கரோ திட்டம், நேத்ராஹாட் துப்பாக்கி பயிற்சி முகாம், ஆர்செலர்-மிட்டல் எஃகு ஆலை எதிர்ப்பு இயக்கங்களில் குந்த்தி மாவட்டமே முன்னணியில் உள்ளது. இங்குள்ள மக்கள் ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு அஞ்சியதில்லை; தங்கள் நிலத்திற்கான அரசாங்கம் கொடுத்த இழப்பீட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படித்தான் அவர்கள் தங்களது நிலத்திற்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கிறார்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், ஒரு மாவட்டத்தில் சுமார் 15,000 பேர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரே மாநிலம் ஜார்க்கண்ட். இது எதை விளக்குகிறது?

ஒரு அணுசக்தி திட்டத்திற்கு எதிராகப் போராடிய கூடங்குளம் மக்கள் மீதுதான் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆம், உதயகுமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு கூட, குந்த்தியில் நாம் கண்டது போல 15,000 பேர் மீது அல்ல, மாறாக 8,000 பேர் மீது ஒரே நேரத்தில் தேசத் துரோக வழக்கை தொடுக்க முடிந்தது.

குந்த்தியின் ஆதிவாசி கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்புக்கு உள்ள ஆதரவு என்ன?

பதல்கடி மீது முதலில் பிரச்சனை வெடித்தபோது, நான் ஆர்வமாக இருந்தேன், நான் வளர்ந்த ஒரு பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினேன். நான் பாந்த்ரா கிராமத்திற்குச் சென்றேன், அங்கு நான் சில இளைஞர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மூன்று மணி நேரம் பேசினேன். அவர்கள் தேர்தல்களை ஆதரிக்கவில்லை என்றும் தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினர். மேலும் அவர்கள் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை மேற்கோள் காட்டி தங்கள் கூற்றுக்களை ஆதரித்தனர்.

ஜெய்பால் சிங் முண்டா.

அவர்களின் கவலைகளை நான் புரிந்து கொண்டேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொன்னேன், ஆனால் ஆதிவாசித் தலைவர் ஜெய்பால் சிங் முண்டா அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் (அரசியல் அமைப்புப் பணி 1946 இல் தொடங்கியது), எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்குமா? அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தான், சட்டமன்றத்தில் ஆதிவாசிகள் தொடர்பான விதிகள் குறித்து விவாதிக்க முடிந்தது, அவர்களின் உரிமைகளுக்காக போராட முடிந்தது.

அவர்களுக்கும் இன்னொரு அறிவுறையையும் கூறினேன். ஐந்தாவது அட்டவணையின்படி, ஆதிவாசி பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது, ஏனெனில் அவை பாரம்பரிய ஆதிவாசி ஆட்சி முறைக்கு முடிவு கட்டிவிடும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பஞ்சாயத்துத் தேர்தலை எங்களில் பலர் எதிர்த்தோம். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களாக ஆவதற்கான ஆர்வத்தில் தேர்தலில் குதித்தார்கள், ஆனால் நாங்கள் ஒதுங்கியே இருந்தோம்.

நான் மூன்று விசயங்களை மக்கள் முன் வைத்தேன். முதலாவது, சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பிரதிநிதியை நாங்கள் தேர்ந்தெடுப்பதாகும்.

இரண்டாவது விஷயம், 5,000 பேர் கொண்ட ஒரு பகுதியில், 4,000 பேர் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், வேட்பாளர் ஒருவர் 1,000 நபர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் இப்பகுதிக்கு ஒரு சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆதிவாசிகளின் நிலம், காடுகள், வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த கவலைகளை எழுப்புவதில் அக்கறை இல்லாத ஒரு வஞ்சகராக அவர் இருக்கக்கூடும்.

மூன்றாவது விருப்பம் என்னவென்றால், ஒரு பகுதியில் உள்ள 5,000 பேர், 5,000 பேர் தேர்தலில் இருந்து விலகுகிறார்கள், யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியில் உள்ள அனைத்து தானியங்களும் ஒரே மாதிரியானவை அல்ல, அவற்றில் கருப்பு மற்றும் வெற்று தானியங்களும் கூட இருக்கக்கூடும் என்று இளைஞர்கள் கூறினார். அடிப்படையில், அவர்கள் மொத்த தேர்தல் புறக்கணிப்பை உறுதி செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். தேர்தல் புறக்கணிப்பின் பயன் என்ன, அது பா.ஜ.கவுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று நான் சொன்னேன்.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் மீது அவர்கள் விரத்தி அடைந்திருப்பதால் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பு மக்களிடம் எதிரொலிக்கிறது என்று நினைக்கிறீர்களா?

1990-களில், பெசா சட்டம், பஞ்சாயத்துகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, குந்த்தி மாவட்டத்தில் மிகப்பெரிய கொண்டாட்ட ஊர்வலம் எடுக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு கிராமத்தில்கூட அச்சட்டம் குறித கல்வெட்டுக்களை வைக்கவில்லை. அப்போது அதன் மீது எந்த முரண்பாடும் இல்லை.

நான் 1995 முதல் மக்கள் இயக்கங்களின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இடப்பெயர்வுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும், பெண்கள் குழுக்கள், இளைஞர் குழுக்களின் ஆர்ப்பாட்டங்களிலும் நான் பங்கேற்றேன். நான் கோயல் கரோ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன். அதில் 256 கிராமங்களை மூழ்கடிக்கும் ஒரு அணையை எதிர்த்ததற்காக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். எங்களில் சிலர் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்தாலும், தேசத்துரோக குற்றச்சாட்டு எதுவும் இல்லை. நாட்டிற்கு மின்சாரம் தயாரிக்க அணை தேவை என்று அரசாங்கம் வாதிட்டது, ஆனால் அது எங்களுக்கு தேச விரோதம் என்று முத்திரை குத்தவில்லை. இன்று, இதுபோன்ற ஒரு திட்டத்தை நாங்கள் எதிர்த்தால், அரசாங்கம் நிச்சயமாக எங்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டைத் தொடுக்கும்.

நேத்ராஹத் துப்பாக்கி சூடு வரம்பிற்கு நிலம் கையகப்படுத்துவதை நாங்கள் எதிர்த்தபோது எங்களுக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டு எதுவும் இல்லை, இது இராணுவத்திற்கும் படையினருக்குமான ஒரு திட்டம் என்று கூட நினைத்தோம். ஆர்சலர்-மிட்டல் எஃகு ஆலைக்கு எதிரான இயக்கத்தை நான் வழிநடத்தினேன். இப்போது அது ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய எஃகு நிறுவனம். இந்த திட்டம் தேசிய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கும் பங்களித்திருக்கும். [புன்னகைக்கிறார்].

எட்டு -10 வழக்குகளில் நான் பெயரிடப்பட்டேன், நான் மூன்று மாதங்கள் சிறைக்குச் சென்றேன். ஆனால் என் மீது எந்தத் தேசத்துரோக குற்றச்சாட்டும் இல்லை.

படிக்க:
CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !
♦ மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !

இந்தியர்களுக்கு எதிராக திடீரென பல தேசத் துரோக வழக்குகள் எப்படி வருகின்றன? இந்த நாட்டு மக்கள் திடீரென தேசத்துரோகிகளாக மாறிவிட்டார்களா?

நீங்கள் எழுப்பும் கேள்வி: மக்கள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்களா? 2014 -க்குப் பிறகு, தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை நீங்கள் பார்க்க முடியும். ஏழைகளுக்காக அல்ல, பணக்காரர்களின் நலன்களுக்காகவே சட்டங்கள் திருத்தப்பட்டுகின்றன. சாதாரண இந்தியர்களின் வருமானம் குறைந்து வருகிறது, அதானியின் வருமானம் அதிகரித்து வருகிறது. 1996 ஆம் ஆண்டில், பெசா சட்டத்தை கல்வெட்டுகளில் எழுதிய போது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பதல்கடி மட்டம் இப்போது ஏன் தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது?

எனவே ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழக்க காரணம் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

நீல்காந்த் முண்டா மற்றும் கரியா முண்டா [இருவரும் பி.ஜே.பி] போன்ற தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அவர்கள் தங்கள் சொந்த மக்கள் மீதான அரசாங்க ஒடுக்குமுறைக்கு எதிராக பேசக்கூட மாட்டார்கள் என்கிற போது நிச்சயமாக மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய மாநில அரசு முயன்றால்; வனச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்றால்; காட்டில் கோடரியைச் எடுத்துச் செல்லும் ஆதிவாசியை சுட வன அதிகாரிகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும். பிறகு நிச்சயமாக மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

பா.ஜ.க அரசாங்கத்தின் செயல்களால்தான் இந்த நம்பிக்கை இழப்பு என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம், சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது. பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதைப் பாருங்கள். 2014 -க்கு முன்பு, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது பொதுவாக நடந்ததில்லை. இன்று, பொதுவான மக்களின் கவலைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு இனி செய்தித்தாள்களில் இடம் கிடைக்காது. என்னைப் போன்ற குறைந்தது 10-15 ஆதிவாசி எழுத்தாளர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர்.

15 ஆண்டுகளாக, எந்த ஊதியமும் பெறாமல் செய்தித்தாள்களில் எழுதினேன். எனக்குப் பணம் தேவை என்று தங்களுக்குத் தெரியும் என்று கருதியே பத்திரிக்கை ஆசிரியர்கள் எனக்கு வேலைகளை வழங்கினர், ஆனால் நான் விரும்பியதெல்லாம் என் மக்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பதற்கான இடம் மட்டுமே என்று நான் சொன்னேன். இன்று, நம்முடைய எழுத்து அரசாங்கத்தை விமர்சிப்பதால் இனி நாம் பேனாவைப் பயன்படுத்த முடியாது. எங்கள் உரைகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. நான் ஒரு தொலைதூர கிராமத்தில் ஒரு உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கலாம், ஆனால் ராஞ்சியில் உள்ள அதிகாரிகள் அதை நேரடியாகக் கேட்கிறார்கள். அவர்கள் என்னை தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு சொல் அல்லது சொற்றொடரைப் கண்டபிடிக்க காத்திருக்கிறார்கள்.

பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், நாம் என்ன உணவை சாப்பிட விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் கூட இழந்துவிட்டோம். இது இந்தியாவின் புதிய வாழ்க்கை.

இன்னும் மக்கள் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

சட்டசபையில் ஒரு குரல் வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன். ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் தனது மக்களின் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க சட்டங்களைத் திருத்த முடியும் என்றால், அதானி மற்றும் அம்பானி தவிர வேறு யாருமல்ல, 40 ஆண்டுகளாக வீதிப் போராளியாக இருந்த என்னைப் போன்ற ஒருவர் தேர்தல்களில் வென்று மல்யுத்தம் செய்து எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாதா?

நீங்கள் சட்ட உரிமைகள் மீது நம்பிக்கை வைத்தால், ஜனநாயகத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியும்?

ஜனநாயகம் என்பது மக்களுக்காக, நம் மக்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். சட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். நரேந்திர மோடியும் அவரது கட்சி ஆட்களும் இந்த நாட்டின் சட்டங்களை மாற்றி, ஜம்மு-காஷ்மீரில் மூன்று முன்னாள் முதலமைச்சர்களை கைது செய்து, 370 வது பிரிவை இரத்து செய்கிறார்கள்.

நாளை, அவர்கள் ஐந்தாவது அட்டவணையை இரத்து செய்ய விரும்புவதாகக் கூறுவார்கள், அதானி மற்றும் அம்பானி திட்டங்களுக்காக எங்கள் நிலத்தை எடுத்துச் செல்லும்போது ஆதிவாசி கிராம சபைகளுடன் பேசத் தேவையில்லை என்பார்கள்.

ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடிக்க மக்கள் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும் என்று ஏன் நீங்கள் நம்புகிறீர்கள்?

அதில் பங்கேற்காமல் நீங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. ஜனநாயகம் சுருங்கி வரும் இடம்தான் நாம் செல்ல வேண்டிய இடம்.

(முற்றும்)

தொடரின் முந்தைய பாகங்கள் :

♦ ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் ! | பகுதி 2
♦ தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் ! | பகுதி 3


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க