நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!

ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதற்காக..

நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!

(வினோத் குமார் சந்த் என்பவர் எழுதிய இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர் யாரென்று தெரியவில்லையென்றாலும் அவரது மதிப்பீடு துல்லியமாக இருக்கிறது என்பதால்.. தமிழில்: ஆர். விஜயசங்கர்)

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பின்வரும் காரணங்களுக்காக நினைக்கப் படுவார்:

சக நீதிபதிகளுடன்  சேர்ந்து ராமர் கோவில் தீர்ப்பை எழுதிவிட்டு அதன் கீழ் கையொப்பமிடும் துணிச்சல் இல்லாதவர் என்பதற்காக;

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறிய பின்னர் பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதையோ உறுதி செய்யாதவர் என்பதற்காக;

சண்டிகர் நகர மேயர் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியைக் குற்றவாளி என்று சொல்லிவிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதற்காக;

மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்ட ஷிண்டே/ஃபத்னாவிஸ்/அஜித் பவார் அரசையும் அதற்குத் துணை போன ஆளுநரின் செயல்களையும் சட்டவிரோதமானவை என்று கூறிவிட்டு, அதைக் குறித்து ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்காமல், சட்டவிரோதமாகத் தொடரும் சபாநாயகரிடம் பொறுப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, அவர் சட்டவிரோதமான முடிவுகளை எடுக்க அனுமதித்து விட்டு, அந்த அரசு மீதமிருக்கும் பதவிக் காலம் முழுவதிலும் தொடர அனுமதித்தவர் என்பதற்காக;

ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடருமாறு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கூறாமல், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ‘வல்லுனர்களைக்’  கொண்ட ஒரு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையில் ஹிண்டன்பர்க்கையும் ஒரு தரப்பாக ஆக்காமல், அந்த ‘வல்லுநர்’ குழுவின் இறுதி அறிக்கையை தெய்வ வாக்காகக் கருதி அதானி நிறுவனத்திற்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கியதற்காக;

காஷ்மீர் தொடர்பான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது அரசியலமைப்புச் சட்டப் படி செல்லுமா என்கிற வழக்கை இழுத்தடித்து, அந்த விவகாரத்தில் சட்டப்படி கலந்தாலோசித்திருக்க வேண்டிய ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்கிற உண்மையைப் புறக்கணித்துவிட்டு, ரத்து செய்த முடிவு சரிதான் என்று முடிவு செய்ததற்காக; அவருடைய இந்தச் செயல் குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்தாலோசித்து அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டுமென்று முடிவெடுத்தார் என்கிற ஒரு விசித்திரமான நிலைக்கு இட்டுச் சென்றதற்காக;

உமர் காலித்  பணக்காரராகவோ அல்லது வலிமை மிக்கவராகவோ இல்லையென்பதாலும், அவர் முஸ்லிமாக இருக்கிறார் என்பதாலும் அவருக்கு பிணையை மறுத்து சிறையில் தொடர்ந்து இருக்கச் செய்ததற்காக;

பீமா கொரேகான் வழக்கு முற்றிலும் போலியானது, போலீஸும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினிகளில் புகுத்திய  ஆதாரங்களின் அடிப்படையில் புனையப்பட்டது என்பதைக் காட்டும் நம்பத் தகுந்த தடயவியல் ஆதாரங்கள் இருந்த போதிலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதையும், பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் மரணத்தையும், சமீபத்தில் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மரணத்தையும் அனுமதித்தமைக்காக.

பணி ஓய்வு பெறும் நேரத்தில் இவைதான் அவர் விட்டுச் செல்லும் பாரம்பரியங்கள்.

ஆம், அவர் ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு கண்களைத் திறந்திருக்கும் நீதி தேவதையின் சிலையை இறுதியில் திறந்து வைத்திருக்கிறார்.

ஆயினும், ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கள் மற்றும் உணர்விற்கு அவர் மரியாதை அளிக்கவில்லை.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அவர்களே, நீங்கள் இவை அனைத்திற்காகவும், ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டீர்கள் என்பதற்காகவும் நீங்கள் நினைக்கப் படுவீர்கள்!

மேற்கூறிய அனைத்தும் வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டன. அதை மாற்ற முடியாது. அது பாலத்தினடியில் ஓடிவிட்ட நீர் போலத்தான்.

பின் குறிப்பு: நீங்கள் ஒரு தனிப்பட்ட சடங்கில் புகைப்படக்காரர்கள் புடைசூழ பிரதமருடன் சேர்ந்து பூஜை செய்தீர்கள் என்பதற்காகவும் நினைக்கப் படுவீர்கள்.


ஆர். விஜயசங்கர்
24.10.2024

disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க