ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 2

முதல் பாகம்  படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது கூடவே  ஜனநாயகம் என்றால் என்ன என்கிற கேள்வியும் உடன் எழுகிறது?

தங்களது நிலத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தைப் பிரயோகித்ததற்காக தாங்கள் வேட்டையாடப்படுவதாக ஜார்கண்ட் முண்டா பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த தொடரின் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியை படிக்க இங்கே அழுத்தவும்

***

ரியானா மற்றும் மகாராஷ்ட்டிராவைத் தொடர்ந்து நவம்பர் 30 -இல் தொடங்கி ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்திற்கு நாங்கள் பயணமானோம். மாநிலத் தலைநகரான ராஞ்சியிலிருந்து ஒரு மணி நேர பயண தூரம் கொண்ட குந்த்தி மாவட்டத்திலுள்ள ஆதிவாசி கிராமங்களில் பத்தல்கடி இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்த விவாதங்களை மேற்கொண்டுள்ளன. பத்தல்கடி என்பது அடிக்கல் நாட்டுவதைக் குறிப்பதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை குந்த்தி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நிறுவுவதற்கான இயக்கம் 2017 -இல் தொடங்கப்பட்டது. இந்திய அரசமைப்பின் ஐந்தாவது அட்டவணை ஆதிவாசி பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் விவரத்தை அந்தக் கற்பலகைகள் மேற்கோள் காட்டுகின்றன.

ஆதிவாசிகளின் கோரிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதிவு செய்தது ஜார்கண்ட் காவல்துறை :

ஜூன் 2017 மற்றும் ஜூலை 2018-க்கு இடையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஸ்க்ரால் இணையதளம் ஆய்வு செய்த போது, பொது ஒழுங்கை சீர்குலைத்ததாக 11,200 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

14 முதல் தகவல் அறிக்கைகளில் உள்ள குற்றச்சாட்டுகளில் 10,000 பேர் மீது இந்திய தன்டணைச் சட்டம், பிரிவு 121A இன் கீழ் தேசத் துரோக வழக்கு என்பது முக்கிய அம்சமாகும். அரசின் மீது அதிருப்பதி கொள்கிற எந்த ஒரு நபரையும் வாழ்நாள் சிறைவைக்க இந்தச் சட்டப் பிரிவு வழி வகை செய்கிறது.

இந்த 10,000 ஆதிவாசிகள் குந்த்தி மக்கள் தொகையில் 2 சதவிகிதத்தினர் ஆவர். பத்தல்கடி ஆதரவாளர்கள் மீது 19 முதல் தகவல் அறிக்கைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தேசத் துரோக வழக்கின் கீழ் வருபவர்கள் மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை.

19 முதல் தகவல் அறிக்கைகளில் 132 பேரின் பெயர்கள் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளன. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் 43 பேர் கிராமத் தலைவர்கள். மற்றவர்கள் அடையாளம் தெரியாதவர்கள். இதனால் தங்களையும் இந்த வழக்குகளில் சேர்த்து விடுவார்களோ என கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.

குந்த்தி மாவட்டம் இரண்டு வரலாற்று நாயகர்களுக்கு பெயர் போனது. ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்து 1900 -இல் தனது 25-வது வயதில் படுகொலை செய்யப்பட்ட பிர்சா முண்டா என்பவர் ஒருவர்.

1928 ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லக் காரணமாக இருந்த, அனைவரையும் கவர்ந்த ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா மற்றொருவர். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது அரசமைப்புச் சபையில் ஆதிவாசிகளுக்காக குரல் கொடுத்தவர் இவர்.

தங்களது நிலத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் தாங்கள் வேட்டையாடப் படுவதாகக் கூறுகின்றனர் ஆதிவாசிகள்.

இந்த கட்டுரைக்காக நாங்கள் நேர்காணல் கண்ட பத்து பேர் இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தண்டனை அனுபவித்தவர்கள்.

படிக்க:
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
♦ தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

பிர்சா முண்டா : எனது பெயர் பிர்சா முண்டா. உண்மை பிர்சா முண்டா அல்ல.  (சிரித்துக் கொண்டே)

ஒரு நகைச்சுவையை தெறிக்கவிட்டு தனது பற்கள் தெரிய சிரித்தபடியே அங்கு வருகிறார் வெண்மையான கண்களையுடைய 79 வயதான, பாண்ட்ரா கிராமத் தலைவர். இவரது மண் குடிசைக்கு வெளியே எங்களைக் கண்டதும் இவர் தனது தோளிலிருந்த தண்ணீர்க் குடங்களை தரையிலே வைத்து விட்டு, தன்மீதான தேசத் துரோக வழக்கு பற்றி விவரிக்க அங்கு வந்து உட்காருகிறார். பக்கத்து வீடுகளிலிருந்து நெகிழி நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு ஒரு மரத்தடியில் வட்ட வடிவமாக போடப்பட்டன. ஆண்கள் அடங்கிய ஒரு சிறு குழுவினர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

ஜார்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் தேசத் துரோகத்திற்காக பதிவு செய்யப்பட்ட 43 கிராம நாட்டாமைகளில் பாந்த்ரா கிராமத்தின் தலைவரான பிர்சா முண்டாவும் ஒருவர்.

சுப்ரியா சர்மா : உங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது என்பது உங்களுக்கு எபபொழுது தெரிய வந்தது?

பிர்சா முண்டா : ஓராண்டுக்கு முன்பு. கிராமத் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். என் மீதும் வழக்கு உள்ளதாக சிலர் சொன்னார்கள்.

அவர் மீது ஒரு வழக்கல்ல, மூன்று வழக்கு என்பதை ஸ்க்ரால் உறுதி செய்தது. முதல் வழக்கு 2017-இல், மற்ற இரண்டும் 2018-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் தேசத் துரோகக் குற்றச்சாட்டும் அடங்கி உள்ளது.

சுப்ரியா சர்மா : தேசத் துரோகம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளீர்களா?

பிர்சா முண்டா : இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இது புரட்சிகர காலத்திய தங்கள் தலைவரின்  பெயரைத் தேடிச் செல்வதற்காக அல்ல. தங்களது மூதாதையரான பிர்சா முண்டாவின் மரபுகளை நீர்த்துப் போகச் செய்வதால் எழுந்த அச்சத்தின் விளைவே இந்த பத்தல்கடி இயக்கம்.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய தங்களது மூதாதையரான பிர்சா முண்டா இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிவாசிகளின் நில உரிமையைக் காக்க “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை நீர்த்துப் போக பாராதிய ஜனதா கட்சி 2016 -இல் மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் பத்தல்கடி இயக்கத்திற்கான அடிப்படையாகும், என்பதை 20 வயதைக் கடந்த ஒரு இளைஞன் விவரிக்கிறார். தற்செயலாக அவரது பெயரும் பிர்சா முண்டா என அமைந்து விட்டது.

பிர்சா முண்டா, இளையர் : சோட்டநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்களுக்கு எதிராக அக்டோபர் 2016 -இல் ராஞ்சியில் நடைபெறவிருந்த பேரணியில் பங்கேற்க நாங்கள் சென்று கொண்டிருந்த போது, காவல்துறை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு ஆதிவாசி கொல்லப்பட்டதாக அறிந்தோம். எங்களது உரிமைகளைக் கேட்க ஒரு பேரணிகூட நடத்தமுடியாத இந்த ஜனநாயகத்தில்; நாங்கள் கிராமங்களிலேயே இருந்து இந்திய அரசமைப்பின் ஐந்தாவது அட்டவணை வழங்கி உள்ள உரிமைகளை அறிவிப்பதே சிறந்ததென்று கருதினோம்.

மார் 3, 2017 அன்று பாந்த்ரா கிராமத்தில் இந்திய அரசமைப்பு செதுக்கப்பட்ட பச்சை நிறத்திலான கல்வெட்டு நிறுவப்பட்டது.

சாம்தி கிராமத்தைச் சேர்ந்த மங்கள் முண்டாவும், பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த மாகி துட்டியும் பத்தல்கடி இயக்கத்திற்கான உந்துவிசையை விவரிக்கின்றனர்.

மங்கள் முண்டா : சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பெரிய கம்பெனிகளுக்கு நிலத்தை அளிக்கப் போவதாக பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டோம். கிரேட்டர் ராஞ்சி என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்க இங்கிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சுக்ரு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மகி துட்டி : வலுக்கட்டாயமாக, கிராம சமைபயின் ஒப்புதலைப் பெறாமல்…

மங்கள் முண்டா : கற்பலகைகளை நிறுவுவது எங்களது மூதாதையர் பின்பற்றிய பழைய மரபு. பிறப்பு முதல் இறப்பு வரையிலான விவரங்களை கற்களில் குறித்து வைப்பது வழக்கம். அதனால் இந்திய அரசியல் சட்டம், ஐந்தாவது அட்டவணை வழங்கி உள்ள எங்களது உரிமைகளை கற்களைக் கொண்டு ஏன் வெளிப்படுத்தக் கூடாது என நினைத்தோம்?

2012 ஆம் ஆண்டு மாவட்டத் தலைநகரங்களில் நகர்ப்புற ஆதிவாசி அறிவுத்துறையினர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் தங்களில் ஒரு சிலர் கலந்து கொள்ளாதவரை இந்திய அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியது என்கின்றனர் பாந்த்ரா கிராமவாசிகள். ஷிப்பிங் கார்பரேசன் ஆப் இந்தியா என்கிற நிறுவனத்தில மேலாளராகப் பணியாற்றும் விஜய் குமார் என்பவர் தலைமையிலான அறிவுத் துறையினர் 1938 -இல் ஜெய்பால் சிங் முண்டா உருவாக்கிய ஆதிவாசி மகாசபா என்கிற அமைப்புக்கு புத்துயிர் கொடுத்தனர். பத்தல்கடி இயக்கத்தின் மூளையாக இவர்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காவல் துறை. அரசமைப்பை கற்பலகைகளில் பதிப்பது தங்களது முடிவுதானேயன்றி தங்களது தலைவர்களது யோசனையல்ல என்கின்றனர் பாந்த்ரா கிராம மக்கள்.

சம்பர் துட்தி : ஒரு மரப்பலகை நீண்ட நாள் தாங்காது அல்லது மங்கி விடும். ஆனால் கல் நீண்ட நாள் நீடிக்கும். கற்களில் எழுதிய பிறகு சட்ட வல்லுநர்களையும் தலைவர்களையும் கலந்தாலோசித்த போது இது சிறந்த முறை என்றனர்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
♦ தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

பாந்த்ராவின் கல்வெட்டு என்ன சொல்கிறது?

இந்திய அரசமைப்பின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட சொற்களில் அவை பிரதிபலிக்கின்றன.

  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 13(3)(a)இன்படி, மரபு அல்லது பாரம்பரியம்தான் சட்டத்தின் உந்து சக்தி, அதுவே அரசமைப்பின் பலம்.
  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(5)இன்படி, பட்டியல் மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் (scheduled districts or areas) வெளி ஆட்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான நபர்கள் நடமாடவோ, குடியிருக்கவோ, நிலைபெறவோ மற்றும் சுற்றி வரவோ அனுமதி கிடையாது.
  • பட்டியல் பகுதிகளில் வெளி ஆட்கள் வணிகம் செய்வதை, வர்த்தகம் அல்லது வேறு வகையிலான வேலை வாய்ப்புகளில் ஈடுடுவதை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(6) தடை செய்கிறது.
  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 244(1)(b), பாரா 5(1) இன்கீழ் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்தால் இயற்றப்படும் எந்த ஒரு சட்டமும் பட்டியல் பகுதிகளுக்கு பொருந்தாது.

மேற்கண்ட வாசகங்கள் இந்திய அரசியல் சட்டத்தின் நேரடிப் பிரதிகள் அல்ல என்றாலும் குந்த்தி ஆதிவாசிகள் அதற்கு மேற்கண்டவாறு விளக்கம் தருகின்றனர் என்பது தெரிகிறது.

உதாரணமாக, பட்டியல் பகுதிகளில் அதாவது ஆதிவாசிகள் பெருமளவில் இருக்கின்ற பகுதிகளில் அந்நியர்கள் நேரடியாக நுழைவதை அரசியல் சட்டப் பிரிவு 19(5) தடை செய்யவில்லை. மாறாக, பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் வெளியாட்கள் சுதந்திரமாக பிரவேசிக்க, வசிக்க, வர்த்தகம் மற்றும் தொழில் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களைக் கொண்ட வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதைத்தான் அரசியல் சட்டப் பிரிவு 19(5) சொல்கிறது.

பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்து பிறகு பட்டியல் பகுதிகள் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் இயற்றும் சட்டங்கள் செல்லாது என மாநில ஆளுநர் அறிவிப்பதற்கு அரசியல் சட்டப் பிரிவு 244(1) அனுமதி அளிக்கிறது. பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்த பிறகு மாநில ஆளுநர் அறிவித்தால் மட்டுமே பொதுவான சட்டங்களை பட்டியல் பகுதிகளில் பிரயோகிக்க முடியும் என குந்த்தி ஆதிவாசிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேற்கண்ட அரசியல் சட்டப் பிரிவுகளை இந்திய நீதி மன்றங்கள் விரிவாக ஆய்வு செய்து, பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் சுயாட்சித் தன்மையை பாதுகாக்கவே அரசமைப்பு முற்படுகிறது என்பதை புகழ் பெற்ற 1997 சமந்தா தீர்ப்பு மற்றும் இதர பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.

ஆனால் கல்வெட்டுகள் அமைப்பதை, ஒரு குறுகிய நோக்கில் அணுகுகிறது ஜார்கண்ட மாநில அரசு. பல கிராமங்கள் பாந்த்ராவைத் தொடர்கின்ற சூழலில், ஆதிவாசிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதிலாக அவர்கள் மீது வழக்குகளைத் தொடுத்து வருகிறது.

பாந்த்ராவுக்கு அருகிலேயே உள்ள கான்கி கிராமத்தில், காவல்துறைக்கும் ஆதிவாசிகளுக்குமிடையில் ஏற்பட்ட உரசலைத் தொடர்ந்து, ஜூன் 22, 2017 அன்று பல முதல் தகவல் அறிக்கைகள் முதல் முறையாக ஒரு கொத்தாக பதிவு செய்யப்பட்டன.

மங்கல் முண்டா (இடது) சாம்தி கிராமத்தில் வசிப்பவர், சும்பர் சிங் துட்டி (வலது) பாந்த்ரா கிராமத்தில் வசித்து வருகிறார்.

மாகி துட்டி : கிராமத்தைப் பாதுகாக்க உயரமான மூங்கில் தடுப்புத் தளங்களை கிராம வாசிகள் கட்டமைக்கின்றனர். பிற்பகலில் வந்த காவலர்கள் அது குறித்து கேள்விகளை எழுப்பினர். மாலையில் மற்றொரு போலீஸ் அணி தங்களது பலத்தைக் காட்டிக் கொண்டு வந்ததோடு மூன்று ஆதிவாசிகளைத் தாக்குகிறது. இது குறித்து சிலர் எச்சரிக்கை மணியை ஒலிக்க, அருகாமை கிராமங்களிலிருந்து மக்கள் அவ்விடத்தில் கூடுகின்றனர். வழக்கமாக கிராம சபை காலையில்தான் கூடும் என்பதால் காவலர்கள் அங்கேயே தங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால், காவல்துறை தரப்பு கருத்து வேறாக உள்ளது. சமூக விரோத சக்திகள் சிலர் சாலைகளைத் தடுத்து அவ்வழியாக சரலைக் கற்கள் மற்றும் கஞ்சா பயிரிடுவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து வரி வசூலிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், கான்கி கிராமத்திற்கு காவல்துறை சென்றதாக ஜூன் 25, 2017 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கிறது. மாலையில் பெரும்படையுடன் சென்ற காவல்துறை, மூங்கில் தடுப்புத் தளங்களை உடைத்தெறிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கழிகள் மற்றும் மரபு ஆயுதங்களைக் கொண்டு காவல் துறையினரைத் தாக்குகின்றனர்.

அக்கிராமத்திற்குச் சென்ற பத்தல்கடி இயக்கத் தலைவர்கள் 500 -க்கும் மேற்பட்டோரை மேலும் போராடத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இரவு 8.30 மணி அளவில் காவல்துறை கூடுதல் பொது இயக்குநர் (ADGP) தலைமையில் ஆயுதாங்கிய பெரும்படை ஒன்று ராஞ்சியிலிருந்து வந்ததாகவும், ஆனால் ஆதிவாசிகள் அவர்களை சிறை பிடித்து கேள்விக் கணைகளைத் தொடுத்து பின்னர் காலையில் விடுவித்ததாகவும் அந்த முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

எனினும் தாங்கள் பலாத்காரத்தை பயன்படுத்தவில்லை என மறுக்கிறது காவல்துறை. பெரும் போலீஸ் படை ஒன்றை கிராமவாசிகள் சிறைபிடிப்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்விதான் எமக்கு எழுந்தது?

படிக்க:
வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி
♦ இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பதக்கங்கள் !

மாகி துட்டி : காவல் அதிகாரிகள் அவர்களாகத்தான் கிராமத்தில் தங்கினர். ஒரு நட்பு ரீதியான குறிப்போடுதான் அவர்கள் காலையில் கிராமத்தை விட்டுச் சென்றனர். அவர்களை கிராம மக்கள் சிறை பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இரண்டு நாட்கள் கழித்துதான் கேள்விப்பட்டோம்.

ஜூன் 24, 2017 சம்பவத்தைத் தொடர்ந்து, பட்டியல் பகுதி என்ற பெயரில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தியதாக பத்தல்கடி தலைவர்கள் மீது குற்றம் சுமத்தி மற்றொரு முதல் தகல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் டஜன் கணக்கான கிராமங்களில் கற்பலகைகளை நிறுவி இந்திய அரசமைப்பு குறித்த தவறான புரிதலை ஏற்படுத்துவதோடு, அன்றாட நிர்வாக வேலைகளைத் தடுக்கும் வகையில் அப்பாவி மக்களைத் தூண்டி வருவது, அப்பகுதியில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்குகின்றனர் என்கிறது அந்த முதல் தகவல் அறிக்கை.

சம்பர் துட்டி : நாங்கள் கல்லில் எழுதி உள்ளது அரசமைப்புக்கு குறித்து தவறான விளக்கம் என்றால் எது சரியான புரிதல் என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும். எது சரியான விளக்கம் என நாங்கள் கேட்ட போது அரசு அதிகாரிகள் மௌனம் சாதிக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை பாந்த்ரா வாசிகளுக்கு பேரதிர்ச்சியாய் வந்தது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதே என்பதில் நம்பிக்கையுடன் இருந்ததால், மார்ச் மாதத்தில் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற பத்தல்கடி விழா குறித்து வட்டார அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தனர். (அதன் நகல் ஸ்க்ரால்.இன் வசம் இருக்கிறது).

முதல் தகவல் அறிக்கையின் நகல்.

உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தலைமை தாங்கும் காவல்துறை அதிகாரிகூட விழாவில் கலந்து கொண்டதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், ஜூன் 2017 -இல், அதே அதிகாரிகள் கிராம மக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆரம்ப முதல் தகவல் அறிக்கைகள் இரண்டிலுமே தேசத்துரோக குற்றச்சாட்டு பதியப்படவில்லை, ஆனால் பாந்த்ரா மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், சும்பர் சிங் துட்டி மற்றும் மங்கள் முண்டா உட்பட சிலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தேசத்துரோக குற்றச்சாட்டு முதல் தகவல் அறிக்கையில் பின்னர் சேர்க்கப்பட்டதா அல்லது வேறு வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டில், இருவரும் பத்து மாத சிறைவாசம், முதலில் குந்த்தி மாவட்டத்திலும், பின்னர் 170 கி.மீ தூரத்தில் உள்ள போகாரோவிலும் கழித்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மங்கள் முண்டா : தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகிற அளவுக்கு நாங்கள் என்ன செய்திருக்க முடியும் என்று யோசித்து வருகிறோம். என்ன செயல்கள் தேசத்துரோகச் செயல்கள் ஆகின்றன, அது தற்பொழுதும் எங்களுக்குத் தெரியாது.

சுப்ரியா சர்மா : காவல் அதிகாரியோ அல்லது நீதிபதியோ இதை உங்களுக்கு விளக்கினரா?

மங்கள் முண்டா : நாங்கள் எந்த ஒரு நீதிபதி முன்பும் ஆஜர்படுத்தப்படவில்லை.

பாந்த்ராவில் உள்ள விகாஸ் துட்டி மற்றும் பால்கோபிந்த் டிர்கி ஆகியோரின் வீடுகளிலும் காவல்துறையினர் தேடுதல் மற்றும் பறிமுதல் செயல்களை மேற்கொண்டனர். இதற்காக, எர்த்மூவர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்களது வீடுகள் முற்றிலும் தரை மட்டமாக்கப்பட்டன.

ஒரு தேடுதல் நடவடிக்கைக்கு ஏன் இத்தகைய கடுமையான நடவடிக்கை தேவை என்பது உட்பட எட்டு கேள்விகளை பட்டியலிட்ட ஸ்க்ரால் மின்னஞ்சலுக்கு ஜார்க்கண்ட் காவல்துறை பதிலளிக்கவில்லை. தொலைபேசியில் பேசிய குந்த்தியின் காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர், சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

டிர்கியின் இளம் மருமகள், தனது தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த தனிப்பட்ட உடைமைகள் உட்பட அவர்களது உடைமைகள் அனைத்தையும் போலீசார் எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

சிதைக்கப்பட்ட பால்கோபிந்த் டிர்கியின் வீட்டின் கூரை. வீட்டை தரைமட்டமாக்குவதற்கு ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குந்த்தி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளான குந்த்தி, முர்ஹு, ஆர்கி ஆகிய இடங்களில் கிராமங்களுக்கு பதல்கடி இயக்கம் பரவியதால், ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி மேலும் பல வழக்குகளைத் தொடுத்தது காவல்துறை. முதல் தகவல் அறிக்கையின் சில பகுதிகள் இங்கே:

குந்த்தி காவல் நிலையத்தில் பிப்ரவரி 2, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR : 17/18

… குடியரசு தினம் மற்றும் ஆகஸ்ட் 15 போன்ற தேசிய விழாக்களிலும், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் பங்கேற்க வேண்டாம் என ஆதிவாசி கிராமத் தலைவர்கள் இந்திய அரசின் அசோகச் சின்ன முத்திரையுடன் கூடிய உத்தரவுகளை மக்களுக்கு பிறப்பித்து வருகின்றனர். இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த இந்துக்களுக்கு இவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முர்ஹு காவல் நிலையத்தில் பிப்ரவரி 9, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR: 11/18..

…அரசாங்கத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் கடமைகளைச் செய்ய கிராமங்களுக்குச் செல்லும்போது, ஆதிவாசி கிராமத் தலைவர்கள் அரசியலமைப்புக்கு விரோதமான கேள்விகளைக் கேட்கின்றனர். இந்த வழியில், மேற்கூறிய ஆதிவாசி அமைப்பின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிராக ஜனநாயக விரோத, அரசாங்க விரோத மற்றும் தேசவிரோத செயல்கள் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்கள்.

குந்த்தி காவல் நிலையத்தில் மார்ச் 3, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR: 33/18

பதல்கடி இயக்கத்தின் தலைவர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்கள்… அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தவும், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், அரசாங்க மானியங்களை நிராகரிக்கவும் மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்கின்றனர். தேசத்துக்கும் ஜனநாயக அமைப்புக்கும் எதிராக ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றுகின்றனர்.

…ஒரு அங்குல நிலம் கூட அரசுக்குச் சொந்தமில்லை எனவும், நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் ஆதிவாசிகள், எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டவிரோதமானவை என்றும் அரசாங்கத்திற்கு, நிர்வாகத்திற்கு, இராமாயணத்திற்கு, கீதை, மகாபாரதத்திற்கு எதிராக ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பதல்கடியின் தலைவர்கள் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தினர்…

இந்தச் செயல்கள் எப்படி தேசத்துரோகமாகும் என விளக்குமாறு ஸ்க்ரோல்.இன் காவல்துறையிடம் கேட்ட போது போலீசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

(தொடரும்)

தொடரின் மற்ற பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க