ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முண்டாரி மொழி பேசும் முண்டா பழங்குடி மக்கள் இன்றும் நம்மோடு வாழுகின்ற வட இந்தியத் திராவிடர்கள். கி.பி 250 முதல் 575 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தின் போதே முண்டா பழங்குடி மக்கள் சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்ததாக “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவர்களுடைய வரலாறு சுமார் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அண்டை நாடான வங்காள தேசத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட இப்பழங்குடியினரின் மக்கள் தொகை சுமார் 22 இலட்சம்.

இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என இந்துக்களுக்கு இவர்கள் இன்றும்கூட உத்தரவு பிறப்பித்து வருவது, அவர்கள் திராவிட முன்னோடிகள்தான் என்பதை பறைசாற்றுகிறது. அதே போல இராமாயணம், பகவத் கீதை மற்றும் மகாபாரதத்திற்கு எதிராகப் பேசியும் வருகின்றனர்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் பிர்சா முண்டா.

இவர்களது வாழ்வாதாரம் காடுகளையும், மலைகளையும் அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய பிர்சா முண்டா என்கிற பழங்குடித் தலைவரை ஆங்கிலேய அரசாங்கம் 1900 -ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைத்தது. தனது 24 வயதில் சிறையிலேயே அவர் மாண்டு போனார். அவரது போராட்டத்தின் விளைவாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்டதுதான் “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908”. இன்றுவரை அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்ததால்தான் அம்மக்கள், இன்றும் பிர்சா முண்டாவை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30 -இல் தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய மாநிலத்தில் ஒரே நாளில் நடத்த வேண்டியத் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். மாவோயிஸ்ட் பிரச்சனை  மட்டுமல்ல தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முண்டா பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த மக்களின் போராட்டமும் அவர்கள் மீது பா.ஜ.க அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்கு முறைகளும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்தக் கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் சுப்ரியா சர்மா தலைமையிலான ஸ்க்ரால் இணைய பத்திரிக்கையாளர் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று, “மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தித் தொகுப்பை தமிழாக்கம் செய்து இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். படியுங்கள்…

படிக்க:
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
♦ டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

பகுதி 1

மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு சில ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் நாடாகக் காட்டிக் கொண்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினரின் ஆட்சி இங்கு நடக்கும்; இந்த ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையிலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான பாதுகாப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியங்களுக்கான ஒப்பீட்டளவிலான சுயாட்சி, இவை அனைத்தும் ஒரு சுதந்திரமான நீதித்துறையால் பாதுகாக்கப்படும்; பத்திரிக்கைத் துறை அதற்கு ஏற்ப துணை நிற்கும் என நம்பப்பட்டது.

ஆனால், கடந்த எழுபதாண்டுகளில், இந்திய ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் செயல்படவில்லை. 1970 -களில், இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்து மக்களின் சிவில் உரிமைகளை நசுக்கியது. மாநிலங்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதற்கு இது வழிவகுத்ததாக அரசியல் – வரலாற்றாசிரியர்கள் கருதினர். இத்தகைய அதிகாரங்கள் இதற்கு முந்தி இருந்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு,​​ ஜனநாயகத்தை ஒன்றுமில்லாததாக்கி வருகிறது என பலரும் விமர்சிக்கின்றனர். மோடி இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அதீத நடவடிக்கை எடுத்தது.

மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இந்தியா இந்துக்களின் தேசம் என்கிற; இந்தியாவை மாற்றியமைப்பதற்கான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கருத்தியலுக்கு வழிவகை செய்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களை திருப்திப்படுத்துவதற்கானவை எனப் பார்க்கிறது மோடி அரசாங்கம்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ளத் தவறி விட்டன. பிரதான செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் மோடியின் தேசியவாதக் கண்ணாடியை அணிந்து கொண்டுவிட்டன. முக்கிய தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசாங்க பிரச்சார சேனல்களாக செயல்படுகின்றன.

காஷ்மீரின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, மொபைல் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் கூட விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏழு மில்லியன் மக்கள் வெளி உலகத்தோடு உள்ள தொடர்பை இழந்து நிற்கின்றனர்.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறதா?

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா காஷ்மீரில் எடுத்துள்ள நடவடிக்கை, அதன் பிறகு அங்கு நடைபெறும் மாற்றங்கள் இந்துப் பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனநாயகத்தை நேசிப்போர் கருதுகின்றனர். இந்து தேசியவாத திட்டத்திற்கான மக்களின் ஆதரவு, 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுத்துள்ளதோடு; இந்திய மாநிலங்கள் பலவற்றில் பா.ஜ.க பெற்றுள்ள செல்வாக்கு என்பது, அடிப்படையில் இந்தியக் குடியரசை மாற்றியமைப்பதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம் அரசியல் எதிரிகளையும், சுதந்திரமான ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, இந்த ஆண்டு இந்தியாவிற்கான சுதந்திர மதிப்பெண்ணில் இரண்டு புள்ளிகளைக் குறைத்துள்ளது.

அதில் ஒன்று பசு வதை தொடர்பாக இஸ்லாமியர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள்; மற்றொன்று ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள். ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் நரேந்திர மோடியின் பிரபலத்தை பாதிக்கவில்லை. உண்மையில், அத்தகைய விமர்சனங்களை திறமையாகப் பயன்படுத்தி தன்னை ஒரு வெகுமக்கள் தலைரவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

2014 பிரச்சாரத்தில், அவர் குஜராத் மாநிலத்தை மாற்றியமைத்த ஒரு திறமையான நிர்வாகியாக காட்டப்பட்டு, அதே போன்ற பொருளாதார லாபங்களை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு வர முடியும் என்று ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டார். அதேசமயம், ஒரு சாதாரண, பின்தங்கிய சாதிப் பின்னணியில் இருந்து அவர் எழுந்த கதை, ஊழல் மோசடிகளால் சூழப்பட்டுள்ள பரம்பரைத் தலைமை கொண்ட காங்கிரசுக்கு அவரை ஒரு மாற்று என்று முன்வைவைத்தவர்கள்கூட மோடியின் கண்காணிப்பில் நடந்த முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையை குறைத்து மதிப்பிட்டனர்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதார நலன்கள் எதுவும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக  வேலையின்மை உயர்ந்தது, முதலீடுகள் மூச்சுத் திணறின. பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி, முத்தலாக் பற்றிய சமூகப் பிரச்சனைகளால் மக்களின் பொருளாதார நலன்கள்  ஒரேயடியாக மூழ்கடிக்கப்பட்டன.

2019 தேர்தலில் தேசியவாதம், சமூக நலன் மற்றும் மோடி வழிபாடு என்பதில் மட்டுமே பா.ஜ.க அதிக கவனம் செலுத்தியது. சமூகத்தைப் பிளவுபடுத்தி பெரும்பான்மை இந்துச் சமூகத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு எடுத்த முயற்சி, ஊடகங்களிடையே பிளவை ஏற்படுத்தி தனக்கு ஆதரவாக செயல்பட வைத்தது மற்றும் கருத்தியல் ரீதியாக மோடியை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்த எதிர்கட்சிகள் ஆகிய காரணங்களால் 2014 தேர்தலில் பெற்ற வெற்றியைவிட 2019 இல் இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை பா.ஜ.கவால் பெற முடிந்தது.

படிக்க:
சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

தற்போது நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்ன?

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனநாயகத்தை நேசிப்போர் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் உள்ளனர். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இந்த அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களா? அல்லது ஜனநாயகம் குறித்த முற்றிலும் மாறுபட்ட வேறு கருத்து ஏதேனும் அவர்களுக்கு இருக்கிறதா? உலகளவில், மோடி போன்ற பிரபலமான தலைவர்களின் வளர்ச்சி மற்றும் பெரும்பான்மைவாதம் பேசுவோரின் அரசாங்கங்களின் எழுச்சி குறித்து ஜனநாயகத்தை நேசிப்போர் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் இந்தியத் தன்மை குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?

தேர்தல்கள் நெருங்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று இந்திய ஜனநாயகம் குறித்த பதில்களைத் தேட முயற்சிக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்டில் இதற்கான விடையைத் தேட முயன்றபோது கிடைத்த விவரங்கள் இதோ.

(தொடரும்)

தொடரின் அடுத்த பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க