மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்தபடியே உள்ளன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் (6.5 கோடி) இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என ஊடகங்களில் கசிந்த அந்த ஆய்வறிக்கை சொன்னது.

நாட்டின்  வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்து இதுவரை வெளிவந்த புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளை பகுப்பாய்வு செய்துள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு.

படிக்க:
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

“கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் சந்தை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கவனிக்கத்தக்க நான்கு அம்சங்கள்:

 1. எந்த புள்ளிவிவரத்தை ஆராய்ந்தாலும் 2011-ம் ஆண்டுக்குப் பின், பொதுவாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
 2. இளைஞர்களில் அதிகம் படித்தவர்கள் பணியில்லாமல் இருக்கிறார்கள்.
 3. இந்த காலக்கட்டத்தில் குறைவாக படித்தவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள், வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
 4. ஆண்களைவிட, பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், இதனால் தொழிலாளர் ஆற்றல் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் பணியாற்றும் வயதுள்ள, அதாவது 15-க்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 950.8 மில்லியனாகவும்(95.08 கோடி) 2018-ல் அது 983.1 மில்லியனாகவும் (98.31 கோடி) உயர்ந்துள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் பரவலான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின் படி, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் இதனால் ஏற்பட்டன. தொழிலாளர் ஆற்றல் இழப்பு 15 மில்லியனாகவும் குறைந்தது. நான்காண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி 6.7% சரிந்தது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்பர் ரூ. 500, 1000 நோட்டுக்களை மாற்றும் பொருட்டு 100-க்கும் அதிகமான மக்கள் இறந்தார்கள். அதே ஆண்டு அக்டோபரில் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏற்றுமதி 1.2% குறைந்தது என ரிசர்வ் வங்கியின் இணையதளம் கூறுகிறது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் வங்கிக் கடன் வளர்ச்சி டிசம்பர் 23, 2016-ன் முடிவில் 5.1% வீழ்ச்சி கண்டதாக சொன்னது. கடன் பெறுவதும் தேவையும் குறைந்த நிலையில், இது 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறு தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாக கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பண கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும் பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள்  இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலையை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்
♦ பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

கட்டுமான தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, உணவு நுகர்வு உள்ளடக்கிய பலவற்றில் பணமதிப்பு நீக்கம் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பணத்தாள் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட வேளாண் தொழிற்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது!  விவசாயிகளால் விதைகளை வாங்க முடியவில்லை. தினசரி பரிவர்த்தனைகள் செய்யவேண்டிய நிலையில் இருந்த அவர்கள், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த நிதிநிலை அறிக்கையில் பணமதிப்பு நீக்கம் விவசாயிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதாக வேளாண் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

“லட்சக்கணக்கான விவசாயிகள் போதிய பணத்தை பெறமுடியாமல் குளிர்கால சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் வாங்க முடியாமல் போனது. பெரும் விவசாயிகளும்கூட தங்களுடைய விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதிலும் விதை மற்றும் உரங்களை பெறுவதிலும் பிரச்சினைகளை சந்தித்தனர்” என அந்த அறிக்கை சொன்னது. “இந்தியாவின் 263 மில்லியன் விவசாயிகள் பணத்தாள் பொருளாதாரத்தை நம்பியுள்ளனர்” எனவும் பாராளுமன்ற நிதி நிலை அறிக்கை கூறியது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து பயிர்களின் விலையும் வீழ்ச்சியைக் கண்டது. பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக வீழ்ந்ததால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தெருக்களில் கொட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த பருவத்திலும்கூட, ஒரு முழு ஆண்டே கடந்துவிட்ட பிறகும்கூட விலை நிலவரம் சரிசெய்யப்படவில்லை. அமைப்புசாரா துறை முழுவதுமே வீழ்ச்சி கண்டது.

மாபெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம், மோடி மற்றும் அவர் சார்ந்த பாஜக-வினர் லாபம் பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தன்னுடைய மோசடி அறிவிப்பு குறித்து, தேர்தல் பிரச்சார மேடைகளில் மோடி மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. இத்தனை பேரழிவுகளை நிகழ்த்திவிட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வோம் என்கிறார்கள் பாஜக-வினர்.

ஒருபக்கம் பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளங்களை துடைத்து கொடுப்பது, இன்னொரு பக்கம் மக்களை வாட்டும் பணமதிப்பு நீக்கம் போன்ற சர்வாதிகார அறிவிப்புகள். இவற்றையெல்லாம் மறக்கடிக்க தேசியவாதம், பெரும்பான்மைவாத போதையைத் தூவி வாக்கு கேட்கிறது பாசிச பாஜக.

அனிதா
-அனிதா
செய்தி ஆதாரம் : நியூஸ்18, பிசினஸ் ஸ்டாண்டர்டு, த வயர்

1 மறுமொழி

 1. ஒட்டு மொத்த வன்னியர்களை குற்றம் சுமத்துவது தவறுதான். வன்முறையில் எந்த சமூகத்தினர் ஈடுபட்டாலும் தோழி.அருள்மொழி கடுமையான விமர்சனங்களை பதிவு செய்பவர். யாருக்கும் பயப்பட மாட்டார். இன்னும் ஒரு கூடுதல் தகவலை இங்கு பதிவு செய்யலாம் என்று கருதுகிறன். துரதிர்ஷ்டவசமாக கலவரம் தொடங்கிய போது நான் பத்திரிகையாளனாக அங்கு களப்பணியில் இருந்தேன். கலவரம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இரு கட்சிப் பிரிவுகளுக்கிடையே தான் ஆரம்பித்தது. பானை சின்னத்திற்கு வாக்களித்த சில வன்னியர்களை, பாமக வன்னிபர்கள் கெட்ட வார்த்தைகளால் பேசி ஒரு மண் பானையை எடுத்து ஒருவர் மண்டையில் அடித்தார். மண் பானைக் காக வாக்கு சேகரித்தவர்கள் எண்ணிக்கை பில் குறைவு. இவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தனர். அவர்கள் மேல் நிறைய அடி விழ ஆரம்பித்தது. அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். கட்சியால் ஒன்றுபட்ட தலித் இளைஞ்ர்கள் சிலர் அவர்களைக் காப்பாற்ற வேண்டி அடிக்க வந்தவர்களை வழிமறித்தார்கள். ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தபோது… சண்டை ஜாதி சண்டையாக திரிக்கப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது.. எங்கிருந்தோ திமு திமு என்று மேலும் பலர் ஓடி வந்து கலவரம் செய்தனர். பின் வீடுகளின் ஒடுகளை உடைத்தார்கள்.. பத்திரிகையாளர்களின் மண்டைகளை உடைத்தார்கள். கேமராவை உடைத்தார்கள். எங்களைத் தகவல் சேகரிக்க விடாமல் விரட்டினார்கள்… இரு கட்சிகளைச் சேர்ந்த ஒரே ஜாதிக்காரர் களுக்கு இடையேயாள ஒரு கலவரம் இப்படித்தான் திரிபு ஆனது. யார் மேல் குற்றம்? நீங்களே சொல்லுங்கள் –

  – மருது பாண்டியன் ( பத்திரிகையாளர்)
  உசிலம்பட்டி
  ( தற்போது சென்னையில் வேலை)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க