மோடி ஆணவத்துடன் நள்ளிரவில் அறிவித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற கேள்வியே யூகமான கேள்வி என்கிறது பிரதமர் அலுவலகம்.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளது மோடி அலுவலகம்.  பிரதமர் அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு அந்த அலுவலகம் அளித்திருக்கும் பொறுப்பான பதில் ‘யூகமான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது’.

இந்திய வரலாற்றில் இழிபுகழ் கொண்ட மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால், மக்கள் வங்கிகள் முன் மணிக்கணக்கில் நின்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மாத காலம், வங்கிகளில் மக்கள் வரிசையில் நிற்பதும், அவர்களுக்கு நேர்ந்த இன்னல்களும் இறப்புகளும் ஊடகங்களில் செய்திகளாகின.  சமூக ஊடகங்களில் இறப்பு சம்பவங்கள் வீடியோவாக பகிரப்பட்டு வைரலாகின. ஆனால், மோடி அரசு இது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பசப்பியது.

பணமதிப்பு நீக்கத்தால் எத்தனை பேர் இறந்தார்கள் என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் மூவரும், ஒரு வாடிக்கையாளரும் இறந்தார்கள்’ என புளுகினார்.

படிக்க:
பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்
இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்ததையாவது அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார். ஆனால், பிரதமர் மோடியின் அலுவலகம் அதையும்கூட விழுங்கிவிட்டது, யூகங்களின் அடிப்படையில் கேள்வி கேட்பதாக தெரிவித்துள்ளது.

ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் நீரஜ் சர்மா, பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த மத்திய பொது தகவல் அதிகாரியிடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எத்தனை பேர் இறந்தார்கள் என 2017 அக்டோபர் 28-ம் தேதி கேட்டிருந்தார்.  அரசின் கணக்கின்படி எத்தனை பேர் இறந்தார்கள், கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர், விவரங்களையும் கேட்டிருந்தார் அவர்.

இதற்கு பதிலாக இந்த விசயம் எடுத்துக்கொள்ளப்பட்டது, விரைவில் பதிலளிப்போம் என தெரிவிக்கப்பட்டது.  எந்த தகவலும் அளிக்கப்படாத நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக இந்தக் கேள்விகளை மத்திய தகவல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

தகவல் ஆணையத்தில் நடந்த விசாரணையின் போது, பிரதமர் அலுவலகம் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளிக்கும்படி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார். தகவல் அறிவிக்காத அதிகாரிக்கு அபராதம் விதிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.  ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தாம் விவரங்களைக் கேட்டதாகவும் அதற்கு பிரதமர் அலுவலக அதிகாரி பதிலளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இறுதியாக, பிரதமர் அலுவலகத்தில் தகவல் தொடர்பு செயலாளராக உள்ள பிரவீன் குமார், ஆர்.டி.ஐ. கேள்விகளில் ‘தெளிவு இல்லை’ என்றும் ‘யூகத்தின் அடிப்படையில்’ இந்தக் கேள்விகள் இருக்கின்றன என்றும் பணமதிப்பிழப்பால் நேர்ந்த மரணங்கள் குறித்து எந்த ஆவணங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்.டி.ஐ. தலைவர் சுதிர் பார்கவா.

ஆர்.டி.ஐ. சட்டத்தின் 2 (எஃப்) பிரிவின்படி யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என சட்டப்படியான பதிலை அளித்துள்ளார் மோடி அலுவலக அதிகாரி.

அனைத்து ஊடகங்களாலும் பணமதிப்பழிப்பு மரணங்கள் குறித்த செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், தான் ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை ஆணவத்துடன் வெளிப்படுத்தும் மோடியின் கீழ் இயங்கும் பிரதமர் அலுவலகம், ‘இந்தக் கேள்வி யூகத்தின் அடிப்படையிலானது’ என்கிறது.  அரசு மக்களுக்காக இயங்கவில்லை என்பதை நேரடியாகவே சொல்கிறது பிரதமர் அலுவலகம்!


கலைமதி
நன்றி: த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க