பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

0

பிரதமரின் கிசான் சம்மன் திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜக அரசால் விவசாயிகளின் வாக்குகளை கவர்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மூன்று தவணையாக ஆண்டிற்கு ரூ.6000 நேரடியாக ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியது. இதன்மூலம் ஏழை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும் என்றார்கள். ஆனால், உண்மையில் விவசாயத் துறையின் மீதான மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிச தாக்குதல்களை மூடிமறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஜும்லா திட்டம்தான் இது.

***

“பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்திலிருந்து (PM-KISAN) தற்போது 11 வது தவணை வரை, மத்திய அரசால் வழங்கப்படும் நிதியானது 67 சதவீதம் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை” என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் (RTI) ஓர் சமூக ஆர்வலரின் கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிதி குறைக்கப்பட்டிருப்பதை புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளது மத்திய வேளாண் அமைச்சம். இந்த திட்டமானது, தொடங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் 11.84 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளை நேரடியாக இணைத்துக்கொண்டது. ஆனால் தற்போது 11-வது தவணையில் (ஜூன் மாதம் 2022 ஆம் ஆண்டில்) அந்த எண்ணிக்கை 3.67 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!


அதாவது நாடுமுழுவதும் முதல் தவணையில் 11.84 கோடியாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஆறாவது தவணையில் குறைக்கத் தொடங்கியது மத்திய அரசு. ஏழாவது தவணையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 9.30 கோடி விவசாயிகளையும், எட்டாவது தவணையில் மேலும் குறைக்கப்பட்டு 8.59 கோடி விவசாயிகளையும், ஒன்பதாவது தவணையில் மேலும் குறைக்கப்பட்டு 7.66 கோடி விவசாயிகளையும் பத்தாவது தவணையில் மேலும் குறைக்கப்பட்டு 6.34 கோடி விவசாயிகளையும் கொண்டிருந்தது. அப்படி படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 11-வது தவணையில் 3.67 கோடி விவசாயிகளை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த புள்ளிவிவரம் மாநில வாரியாக… முதல் தவணையின்போது, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், அசாம், இமாச்சலப்பிரதேசம், ஜம்மூ & காஷ்மீர், கேரளா, ஒடிசா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் முறையே 55.68 இலட்சம், 83 இலட்சம், 37 இலட்சம், 28.79 இலட்சம், 9.86 இலட்சம், 12.07 இலட்சம், 36.99 இலட்சம், 39.02 இலட்சம், 46 இலட்சம் என இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது முறையே, 28.2 இலட்சம், 7 இலட்சம், 2 இலட்சம், 2.54 இலட்சம், 5.43 இலட்சம், 5.61 இலட்சம், 24.23 இலட்சம், 7.05 இலட்சம், 23 இலட்சம் என குறைக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் குஜராத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 63.13 இலட்சம் இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை, தற்போது (தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கூட) 28.41 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹரியானா, மகாராஷ்ரா ஆகிய மாநிலங்களில் முதல் தவணையில் முறையே 19.73 இலட்சம், 1.09 கோடி என இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது முறையே 11.59 இலட்சம், 37.51 இலட்சம் என குறைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் கர்நாடகாவில் முதல் தவணையில் 55.61 இலட்சம் இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது 2.58 இலட்சமாக குறைப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் அதிகம் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் முதல் தவணையில் 23.34 இலட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது 11.31 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேகலாயா, மத்தியப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் முதல் தவணையில் முறையே 1.95 இலட்சம், 88.64 இலட்சம், 16,513 என இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது 627, 12053, 2065 என குறைக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யாநாத் அரசு ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையில் 2.6 கோடி இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல் தவணையில் 45.63 இலட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை ஆறாவது தவணையிலிருந்து ஒரு நபருக்கு கூட நிதி வழங்கப்படவில்லை.


படிக்க: உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!


இதைப்பற்றி அகில இந்தியா விவசாய சங்கத் தலைவர் அசோக் தவாலே, “இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. 2022-ல் இந்த தகவலின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை ஏன் இவ்வளவு குறைவு என்பது பற்றியான எந்தவிதமான விளக்கமும் இதில் இல்லை. இந்தத் திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. இது விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க கொண்டுவரப்பட்ட ஜும்லாவாகும்” என்று கூறினார்.

ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை இத்திட்டம் மேம்படுத்தும் என்று வாய்ச்சவடால் அடித்தது பாஜக அரசு. ஆனால், வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க