விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குழாய் கிணறுகளில் மின் மீட்டர்கள் பொருத்துவதை எதிர்த்து மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதிய கிசான் சங்கத்தின் கீழ் (Bharatiya Kisan Union) அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

இந்தப் போராட்டம் வேகமாகப் பரவி வருவதாகவும், விரைவில் உத்தரப் பிரதேசம் முழுவதும் பற்றிப் படரும் என்றும் அங்கு போராடுகின்ற விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற யோசனைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு யார் வழங்குகிறார்கள் என்று கேள்வியும் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பலர், பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டர்களை பிடுங்கி உடன் எடுத்து வந்தனர். அவற்றை பத்திரமாக தங்கள் அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுமாறு மின் பகிர்மான கழக அதிகாரிகளிடமே ஒப்படைத்து விட்டனர்.

இது குறித்துப் பேட்டி அளித்த பாரதிய கிசான் சங்க தலைவர் நரேஷ் திகாயத், “அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தற்போது சாலையின் ஒரு பக்கத்தை மட்டுமே மறித்துள்ளோம். ஆனால், அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தைத் தீவிர படுத்த உள்ளோம்” என்று கூறினார்.

“ஏற்கனவே முறையாக மின் வினியோகம் செய்யப்படுவதில்லை. மீட்டர்கள் பொருத்தப்பட்டால் மின் கட்டணம் பல மடங்கு உயரும். யோகி அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் தற்போதோ மீட்டர்களைப் பொருத்துகிறது. குழாய் கிணறுகளில் மீட்டர்கள் பொருத்துவதை விவசாயிகள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள்” என்று பிஜ்னோரை சேர்ந்த அன்கித் தோமர் என்ற விவசாயிகள் தலைவர் கூறினார்.


படிக்க: காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !


இதற்கு முன்னர் ரூ.2000-க்கு மிகாமல் இருந்த மின்‌ கட்டணம் தற்போது ரூ.10,000-ஆக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த கரும்பு அரவை பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது.

இது குறித்துப் பேசிய மின்வாரியத் துறை அதிகாரிகள், தாங்கள் உத்தரப் பிரதேச மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுகளையே பின்பற்றுவதாகவும் அதிக பளுவினால் மின்மாற்றிகள் (transformers) சேதமடையாமல் தடுப்பதற்காகவுமே மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன என்று கூறினர். மேலும், மீட்டர்களைப் பிடுங்கி எடுத்தால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச அரசாங்கம், வெறும் அளவைக்காக மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்படுவதாகக் கூறியிருந்தது. ஆனால் விவசாயிகளோ அதை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அரசாங்கம் எப்படி ஏமாற்றும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க