ஞ்சாப், ஹரியானா, உ.பி மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக, சட்டத்தில் ஒரு புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம் என்று திமிர்த்தனமாகக் கூறிய மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது.

மேலும் ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருதிலேயே கவனம் செலுத்தியதால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டு விவசாயிகளின் இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளித்தது.

அவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றாததால், மோடி அரசைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் எட்டு மாதங்கள் கழித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிப்பதற்காக மோடி அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

இக்குழு தொடர்பாக மத்திய வேளாண்மை அமைச்சகம், ஜூலை 18 ஆம் தேதி அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலையை மேலும் சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவது குறித்து ஆராய 26 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இக்குழுவில் பங்கேற்க விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது; 3 இடங்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பானது இக்குழுவை நிராகரித்தது மட்டுமின்றி, தங்கள் சார்பாக எந்தப் பிரதிநிதிகளையும் பரிந்துரைக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் நிறைந்த இக்குழுவின் நிகழ்ச்சிநிரலில் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

***

மூன்று வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்த கன்வந்த் பாட்டீல், கிருஷ்ணவீர் சவுத்ரி, பிரமோத் குமார் சவுத்ரி, கனி பிரகாஷ் மற்றும் சையத் பாஷா படேல் ஆகியோர் விவசாய சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில், இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக உடன் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள். கிருஷ்ணவீர் சவுத்ரி பாஜகவின் தலைவராக உள்ளார்; சையத் பாஷா படேல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ; பிரமோத் குமார் சௌத்ரி ஆர்.எஸ்.எஸ்-இன் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்; கன்வந்த் பாட்டீல் சுதந்திர பாரத் பஷ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் வழக்கறிஞர்; கனி பிரகாஷ் விவசாயிகளின் இயக்கத்தை எதிர்த்ததில் முன்னோடியாக இருந்தவர்.

மேலும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் மற்ற உறுப்பினர்களும் அரசின் விசுவாசிகளே. முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் உருவாக்கியவர் இவரே. நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் மூன்று வேளாண் சட்டங்களின் முக்கிய வழக்கறிஞராக இருந்தவர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக இருந்தனர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஆதரிப்பவர்களைக் கொண்ட இக்குழுவானது விவசாயிகளின் கூற்றுப்படி, தங்களுடைய முதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவது பற்றி விவாதிக்கவில்லை. மாறாக, நான்கு துணைக் குழுக்களை அமைத்துள்ளது. ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம், விவசாயிகளிடம் நுண்ணுயிர் பாசனத்தை மையப்படுத்துவது, பயிரிடும் முறை மற்றும் பயிர்களைப் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்ய இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம் என்றால், கனிம உரங்கள் உட்பட எந்தவித இடுபொருள்களும் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்வது. அதாவது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது நாள்தோறும் ஏறிக்கொண்டே போகிறது. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியிலிருந்து எந்த இடுபொருளும் வாங்கவேண்டியதில்லை. மாட்டு மூத்திரம், சாணி போன்றவற்றையே உரங்களாகப் பயன்படுத்திக் கொள்வது. அதே போல் நுண்ணுயிர் பாசனம் என்றால், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்வது.

இனி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் உள்ளிட்டு பல்வேறு இடுபொருட்களையும் வழங்குவதை ஒழித்துக் கட்டுவதே ஜீரோ பட்ஜெட் விவசாயம். சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதாரவிலையைப் பற்றி விவாதிப்பதாகச் சொல்லி அமைக்கப்பட்ட இக்குழு, விவசாயத் துறையை அரசானது முற்றிலுமாக கைக்கழுவி விட்டு, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ரத்துசெய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை இக்குழுவின் மூலம் வேறுவடிவத்தில் அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம் என்று விவசாயிகள் இதனை அம்பலப்படுத்தி உள்ளார்கள்.

***

குறைந்தபட்ச ஆதாரவிலைக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பின்புலத்தை ஆராய்வது, குழுவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது, மோடி அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆராய்வது போன்ற செயல்பாடுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளதையே காட்டுகின்றன.

மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், விவசாயிகளாகிய நாம் மட்டும் தனித்துநின்று போராடினால் போதாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும் மற்றும் பிற வர்க்கங்களின் கோரிக்கைக்காகவும் போராட வேண்டும் என்பதை உணர்ந்து தங்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதில் முன்னேறி வருகின்றனர் விவசாயிகள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து 2022 மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக பங்கேற்றுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 24 நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெய் ஜவான் ஜெய் கிசான் (வாழ்க இராணுவவீரர், வாழ்க விவசாயி) என்ற முழக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க : மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

ஆகஸ்ட் 8 அன்று மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பானது, மின்சாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களோடு இணைந்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

உபி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க பிரச்சாரம் செய்தது விவசாயிகள் சங்கங்களின் முக்கிய நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை முறியடிக்காமல் நாம் வாழ முடியாது; பிற வர்க்கங்களுடன் ஒன்றிணைந்து போராடும்போதே அக்கும்பலை முறியடிக்க முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

சரியான திசைவழியில் முன்னேறிச் செல்கிறார்கள் விவசாயிகள். இந்த திசையில் அவர்கள் தொடர்ச்சியாக முன்னேறி செல்வதும், பிற பகுதி விவசாயிகளும் மற்றும் பாசிசக் கும்பலின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பிற வர்க்கங்களும் அவர்களுடன் ஒன்றிணைவதும் பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் போக்காகும்.


அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க