மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

0

ம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) விவசாயிகள் சங்கம், கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நிறைவடையும்போது விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முழுமையாக மறுத்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஜூலை 3 அன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நடைபெற்ற SKM உடன் தொடர்புடைய அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற தேசிய கூட்டத்தில் விவசாயிகள் இயக்கம் தொடர்பான மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

SKM வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) குழு அமைக்கப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் கூறியுள்ளது. விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கையான MSP மீதான சட்டரீதியான உத்தரவாதத்தை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.


படிக்க : வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!


அரசாங்கத்தின் இந்த “துரோகத்திற்கு” எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முதல் ஜூலை 31-ம் தேதி வரை – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினமான ஜூலை 31 வரை – மாவட்ட அளவில் ‘துரோகத்திற்கு எதிரான போராட்டம், கூட்டங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் என்று SKM தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் முடிவில், ஜூலை 31 அன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சக்கா ஜாம் (சாலை மறியல் போராட்டம்) நடத்தப்படும் என்றும் SKM அறிவித்துள்ளது.

லக்கிம்பூர் கேரி படுகொலை

“தேச விரோத, இளைஞர்கள், விவசாயிகளுக்கு எதிரான”அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக விவசாய அமைப்புகள் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களைத் திரட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

“அக்னிபத் திட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு முழுவதும் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும், இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் அழைக்கப்படுவார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தவன்முறையில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். வரும் சுதந்திர தினத்தன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர தர்ணா நடத்த திட்டமிட்டிருப்பதாக SKM விவசாயிகளின் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


படிக்க : விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!


ஆயிரக்கணக்கான விவசாயிகளின் ஓராண்டுக்களுக்கு மேலான வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக, மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கியது மோடி அரசு. ஆனால், ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

தொடர்ந்து இந்திய விவசாயிகளை வஞ்சித்துவரும் மோடி அரசை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயத்தையும் விவசாயிகளையும் கார்ப்பரேட் கழுகளிடமிருந்து காப்பாற்ற களமிறங்கி போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க