பாசிச மோடி ஆட்சியை மண்ணை கவ்வ வைத்த விவசாயிகள் !
சாதித்தது எப்படி? நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
மோடி ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற பல போராட்டங்கள் இறுதிவரை நிலைக்காமல் சிதைந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம். பாராளுமன்றம் உட்பட எவரையும் மதிக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து தன்விருப்பப்படி மோடியால் கொண்டுவரப்பட்ட  மக்கள் விரோத சட்டங்கள் ஓநாய்கள் போல் மக்களின் இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கின்றன.
நீதிமன்றங்கள் உட்பட அரசின் அத்துணை நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் உட்புகுத்தப்பட்டு இந்துராஷ்டிரமாக மாற்றப்படுவதற்கான இடைவழியில் இந்தியா நிற்கிறது. மக்களுக்கோ கடுமையான எதிர்காலம்தான் கண்களில் தெரிகிறது.
இத்தகைய சூழலில்தான் விவசாயிகள் போராட்டம் வெற்றியை சாதித்து, மோடி ஆட்சியை நடுங்க வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பிரதான ஊடகங்கள் முதல், தேசிய செய்திதாள்கள், உள்ளூர் ஊடகங்கள், உள்ளூர் செய்தித்தாள்கள் வரை கள்ள மெளனத்தின் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கனவு காண்கின்றன.
இந்த ஓராண்டு போராட்டத்தின் போது, 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். பல விவசாயிகள் பா.ஜ.க. காவி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எத்தனையோ அடக்குமுறைகளையும் மத்திய மாநில அரசுகளின் போலீசு குண்டர்களின் கொலைவெறி தாக்குதலையும் எதிர்கொண்டே அஞ்சாமல் களத்தில் உறுதியாக நின்று இத்தகைய வெற்றியை சாதித்துள்ளனர் விவசாயிகள். இது வெடி வெடித்து கொண்டாட வேண்டிய வெற்றி! நமது மகிழ்ச்சியை உரக்க கத்தி ஊரெல்லாம் கேட்க திருவிழாவாக கொண்டாட வேண்டிய, போற்றப்பட வேண்டிய வெற்றி!
படிக்க :
டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
அந்த போராட்ட வெற்றியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
ஒரு போராட்டத்தின் போக்கை மூன்று வகை பிரதான காரணிகள் தீர்மானிக்கின்றன.
1.இந்த மூன்றிலும் மிக முக்கியமான பிரதானமானது ஒரு இயக்கம் தனது பிரச்சனைகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் விளக்கும் அதேவேளை அந்த செய்தியை நாடெங்கும் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்கவும், பயன்படுத்தவுமான அதன் திறமை. அதன்மூலம் போராட்டத்திற்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அதன் நியாயத்தன்மையை மக்கள் புரிந்து கொள்ளுமளவு செய்தாலே போதும்.
2.அடுத்தது, யாரை எதிர்த்து போராடப்போகிறோம் என்பதில் ஒளிவுமறைவின்றி வெள்ளிடை நீர் போல தெளிவாக இருப்பது. அந்த தெளிவை இயக்கத்தின் அனைவரையும் உணரவைப்பது. போராட்டத்தின் போது எதிரியின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வளர்த்துக் கொள்வதிலான முன்முயற்சி. ஒரு அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வெற்றியை சாதிப்பது என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான போராட்ட வழிமுறைகளைக் காட்டிலும் மிக மிக வித்தியாசமானது. ஏனெனில், அரசாங்கம் என்பது தன்னிடத்தில் வரம்பற்ற அதிகாரத்தையும் அமல்படுத்துவதற்கான நிறுவனங்களையும் கொண்டவை.
3. மூன்றாவதாக, தனது உறுதியான ஆதரவாளர் தளத்தை தாண்டி பொதுவெளியில் மக்களது ஆதரவை பெற்று போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியது ஒரு இயக்கத்தின் வெற்றிக்கு மிக மிக அவசியமானது.
கொள்கையளவில் பிரச்சனையின் முக்கியத்துவம் என்பது ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமான பங்கினை கொண்டிருக்கிறது. ஆனால், நாட்டின் ஊடகங்கள், போலீசுத்துறை போன்ற அனைத்து அதிகார உறுப்புகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்கள் மீது மோடி அரசு கொடுந்தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது, நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை உடைத்தெறிவதற்கான, அல்லது புறம்தள்ளுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி, வளர்ப்பதில் அடங்கியிருக்கிறது.
இதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது விவசாயிகள் போராட்டம்.
கட்டுமான கள வேலைகள்:
சொந்த தலைமை கட்டமைப்புடன் இருந்த பல்வேறு அமைப்புகளிலிருந்த விவசாயிகள், இயக்கம் தொடங்கியவுடன் நம்பிக்கையோடு கூட்டாக ஒன்றிணைந்து போராட்டத்திற்கு தேவையான அணிகளை திரட்டிக்கொண்டனர். இந்த ஒத்தக்கருத்துடைய  கூட்டுத்தலைமை பெற்ற வெற்றிதான் நமக்கு அளித்திருக்கும் முதல் பாடம். இந்த நடைமுறையே மோடி அரசால் யார் மீதும் குறிப்பாக இலக்கு வைக்க முடியாதவாறு செய்தது.
அணிதிரட்டுதல், போராடுதல் ஆகியவற்றுக்கு முன்னதாகச் செய்ய வேண்டிய அவசியமான வேலை கற்பித்தல். எல்லோருக்கும் போராட்டம், கோரிக்கைகளை பற்றிப் புரியவைத்து தெளிவாக்குவது. இது அடிப்படையான ஆதரவாளர்களுக்கு, பிரச்சனைகளை புரிந்து கொள்வதையும், எதிராளிகளின் தந்திரங்களை அறிந்து கொள்வதையும் உறுதிசெய்து  இயக்கத்தை தடம்புரளாமல் காப்பாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்தது.
இந்த போராட்டத்தின் மூகமாக வெளிப்பட்ட ராகேஷ் திகாய்த் மீது குறிவைத்து இழித்தும், பழித்தும் ஏராளமான அவதூறுகள் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும். போராட்டத்தின் பல்வேறு காலக்கட்டங்களில் சில முடிவுகளை திகாயத் தன்னிச்சையாக எடுத்திருப்பதாக செய்தி  வெளியிட்டு போராட்டத்தில் குழப்பம் செய்ய ஊடகங்கள் முயன்றன. ஆனால், களத்தில் நின்ற விவசாயிகளுக்கு அனைத்து சங்கங்களின் ஒருமித்த ஆணை மற்றும் கூட்டு தலைமை அமைப்பின் வடிவத்தை பற்றிய தெளிவிருந்ததால் இந்த பிரச்சாரத்திற்கு பலியாகாமல் போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.
கூட்டு தலைமை மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தீவிர ஆதரவாளர்கள் என்ற கட்டுமானம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் ஒரு இயக்கம் தனது செய்திகளை ஆதரவாளர்கள் மட்டத்தை தாண்டி பொதுமக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டியது அவசியமாக இருந்தது.
ஊடகம்:
எதிரியின் தலைநகரை சுற்றி பெருமளவு எண்ணிக்கையில் வீரர்களை முகாமிடச் செய்வதன் மூலம் முற்றுகை செய்து முடக்குவது என்ற அம்சத்தை கடந்த கால இராணுவ நடவடிக்கைகளின் வரலாற்றிலிருந்து பெற்று விவசாயிகளை பெருமளவில் அணிதிரட்டி டெல்லியின் எல்லைப்புறங்களில் முகாமிட முடிவெடுக்கப்பட்டது.
ஊடகங்களின் கவனத்தை தங்கள் பக்கம் வைத்திருக்க இடைஇடையே பேரணிகள் மற்றும் பந்த் போன்ற வடிவங்களை அறிவித்து அரங்கேற்றினர். பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், விவசாயிகள் எதை சொல்ல விரும்புகிறார்களோ அதை – எப்படி சொல்ல விரும்புகிறார்களோ அப்படியே – நாடு முழுதும் பரப்பப்பட வேண்டும் என்பதில் உறுதியோடிருந்தனர். அரசு ஆதரவு ஊடகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் தங்களது செய்திகள் மக்களை ஓரளவுக்காவது சென்றடைய வைக்க முடியும் என்றாலும் போராட்டக்காரர்களின் இப்படிபட்ட தொடர்பினை அந்த ஊடகங்கள் தவறாக இயக்கத்திற்கு எதிராகவே பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை புரிந்தே வைத்திருந்தனர்.
தேசிய ஊடகங்களின் செய்தி ஆதிக்கத்தை ஓரங்கட்ட தங்களுடைய யூடியூப் சேனல்கள் மற்றும் தங்களுக்கென சொந்தமாக “ட்ராலி டைம்ஸ்” என்ற செய்திதாளையும் ஏற்படுத்திக் கொண்டனர். மோடி அரசுடன் தாங்கள் ஒரு அறிக்கை போரில் இருப்பதை போராட்டக்காரர்கள் புரிந்து கொண்டனர். அதற்கேற்றவாறு தங்களது செய்திகளின் வரம்பினையும் அமைத்துக் கொண்டனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திதாள் மூலமாக தங்களது செய்திகளை பரவ செய்வதின் வழியாக அயல்நாட்டு முக்கியஸ்தர்கள் மற்றும் இந்திய அறிவுத்துறையினரின் ஆதரவு குரல்களையும் பெற்றனர்.
அணிதிரட்டல் அமைப்பாக்குதல்
ஒரே நாள் பேரணிகளை அதிக எண்ணிக்கையில் மக்களை பங்கேற்க செய்து நடத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் அதே அளவு அதிகமான மக்களை (பெண்கள் உட்பட) கூட்டி வைத்து பல மாதங்கள் கடந்து ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவது என்பது – அதிலும் நடுங்கவைக்கும் உயிரை வதைக்கும் கொடுங்குளிர்காலம்,  எரித்து சாம்பலாக்கும் கோடைகாலம், முடக்கிப்போடும் மழைகாலம் ஆகியவற்றைக் கடந்து என்பது – ஒரு சாதாரண சாதனையல்ல. இரவில் போராட்ட இடங்களில் பாதுகாப்பாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்ததன் மூலம் பல அசம்பாவித சம்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் இரவில் முகாமை எரிக்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆளையும் பிடித்துள்ளனர். இதுமாதிரி ஏராளமான நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுத்துறையினர் அங்கே தங்கியிருந்து அனுபவமாக எழுதியுள்ளனர். இம்மாதிரியான இயக்கத்தை மாதங்கள் கடந்து ஒரு ஆண்டு வரை நடத்துவது என்றால் அதற்கு மிகப்பெரிய திட்டமிடல் மற்றும் நிறுவனத் திறன் அமைப்பின் வலு இருந்திருக்க வேண்டும் என்ற ஆச்சரியம் எல்லோருக்கும் வந்துள்ளது. போராட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆறு மாதங்களுக்கு தயாராக வந்திருக்கிறோம் என்று சொன்னபோது அதை நம்பியவர்கள் கொஞ்சம் பேராகத்தான் இருக்க முடியும்.
அந்த பகுதிக்கு புறநகர்கள், கிராமங்களிலிருந்து சிலசமயங்களில் பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கலந்து கொள்ள வரும் பல நூறு ஆயிரம் விவசாயிகளுக்கு குளிரை தாங்குமளவு ஆடைகள் – தங்கி தூங்க இட படுக்கை வசதி – உணவு – குளிக்க குடிக்க நீர் வசதி – மின்வசதி – துணிகளை துவைத்து உலர்த்த வசதி – மருத்துவ சேவை – இயற்கை உபாதைகளுக்கான இடங்கள் – நூலகங்கள் மற்றும் மக்களை தொடர்ந்து ஈடுபாட்டுடன் மற்றும் எழுச்சியோடு வைத்திருப்பதற்கு தொடர்ச்சியான கலைநிகழ்ச்சிகள்.
தொடர்பு சாதனங்கள்:
தங்களது செய்திகளை தங்களுக்குள் முகாம்களுக்கிடையே பரிமாறிக்கொள்ள தொடர்பு சாதனங்கள் தேவை. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திறன் கொண்ட நிபுணர்கள் தேவை. இவை உள்ளிட்டு செய்தி ஊடகங்களை பராமரிப்பதும் அடக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை தேவைகளையும் பூர்த்திசெய்ய நிதி – பணம் மிக மிக அவசியம்.
இயக்கத் தலைமைகள் இவற்றை தளவாட ரீதியாகவும், பணரீதியாகவும் தொடர்ந்து தக்கவைக்க தவறினால் அந்த இயக்கம் மிக எளிதாக நீர்த்துப் போய்விடும். இதை உணர்ந்து நிதியை பற்றாக்குறை இல்லாமல் உறுதிசெய்ய விவசாயிகளிடமிருந்து ஆதரவாளர்கள் முற்போக்காளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடைகளை உறுதிசெய்தனர் மற்றும் போராட்ட இடங்களுக்கு தேவையானவற்றை முகாம்களுக்கு உடனுக்குடன் கொண்டு வருவதற்கான உறுதியான விநியோக வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
நங்கூரம் போட்டு அசையாமல் நின்ற கோரிக்கை
இந்த நாட்டின் தலைநகரைச் சுற்றி போராட்டக்காரர்கள் ஆரம்பத்தில் முகாமிட்டு தங்கத் துவங்கிய போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது உள்ளிட்ட மோசடி வித்தைகள் மூலம் எளிதாக கலைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் மோடி அரசு இருந்தது. ஆனால், போராட்டத்தலைவர்கள் எவ்வித சமரசத்திற்கும் தயாரில்லை என்பதை தங்களது செய்கைகள் மூலம் மோடிக்கு உணர்த்தினர்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதெல்லாம் அரசினால் தரப்பட்ட உணவு குடிநீர் எல்லாவற்றையும் தொடவும் மறுத்தனர். தாங்கள் எடுத்துபோன உணவையே உண்டனர். தங்கள்வசம் வைத்திருந்த நீரை குடித்தனர். அதேபோலத்தான் புதிய விவசாய சட்டங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுதுமாக திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களது கோரிக்கையிலும் சமரசத்துக்கிடமின்றி உறுதியாக நின்றனர்.
ஒருபுறம் ஊடகவியலாளர்கள் இது மோசமான தந்திரம் என்றும் வெறும் பிடிவாதம் என்றும் விவசாயிகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டனர். இன்னொருபுறம் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மையையே தரக்கூடியது என்ற மோடி அரசுக்கு ஆதரவாக இடைவிடாத பிரச்சாரம். இவற்றையெல்லாம் முறியடிக்க போராடும் விவசாயிகளுக்கு முன்னால் இருந்த சாத்தியமான ஒரே உத்தியாக இதுதான் இருந்தது.
படிக்க :
டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை
டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
அரசு தரப்பில் இந்த சட்டங்களில் நன்மை பயக்கும் அம்சங்களும் இருப்பதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொண்டிருந்தால் போராட்ட அமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு போயிருக்கும் என்பதே விவசாயிகளின் கண்ணோட்டமாக இருந்திருக்கிறது. அவ்வாறு மட்டும் நடந்திருந்தால் ஒவ்வொரு பிரிவையும் விருப்பப்படி ஆட்டுவிப்பது மோடி – அமித்ஷாவுக்கு மிக எளிதான ஒன்றாகியிருக்கும். அதனால்தான் இதை அனுமதிக்கவே முடியாது. இவை விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களே; இவற்றை முழுமையாக திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி கொண்டே பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள சம்மதித்து வந்தனர்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஏன் ஒத்துழைத்தார்கள்? என்ற கேள்வி சாதாரணமாக வரக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது. தங்களுடைய செயல்பாடுகள் எல்லாவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் அதேவேளை பொதுமக்கள் கருத்தும் தங்களுக்கு எதிர்நிலையில் போய்விடக் கூடாது என்பதில் விவசாயிகள் கவனமாக இருந்தார்கள். இவ்வாறு நடக்கும் அரசுடனான போரில் பொதுமக்கள் கருத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பதில் முன்னேற்றத்தை சாதித்துக் கொண்டே அதை வைத்து அரசையும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி தங்களது கோரிக்கையான விவசாய சட்டங்களை முழுதுமாக திரும்பப் பெற்றுக்கொள்வதை அரசை ஏற்கச்செய்ய வேண்டும் என்பதை சாதித்தார்கள்.
உறுதிபடுத்திக் கொள்ள நிபந்தனைகள்
எல்லாவற்றையும் தாண்டி இந்த போராட்டம் வெற்றிபெற முக்கிய காரணம் தடைகளை மீறி ஒரு ஆண்டு காலம் நீடித்ததுதான். தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக இந்த நீண்டகாலத்தை கடந்திருக்காவிட்டால் விவசாயிகளது கோரிக்கைகளை மோடி அரசு எளிதாக புறந்தள்ளியிருக்கும். இந்த நாடும் இப்படி ஒரு போராட்டமே நடந்திருக்கவில்லை என மறந்துவிட்டு கடந்து போயிருக்கும். தொடர்ந்து நீண்ட காலத்திற்கு தலைநகரின் எல்லையில் தங்களின் இருப்பை உறுதிசெய்து கொண்டிருந்ததுதான் நாட்டு மக்களின் மனதில், விவசாயிகளின் வாழ்க்கை அவலங்களையும் கோரிக்கை நியாயங்களையும் உயிருடன் வைத்திருக்க முடிந்தது.
அதுமட்டுமல்லாமல் தாங்கள் வெற்றி பெறவேண்டுமானால் குறிப்பிட்ட அளவு தொடர்ச்சியான பார்வையாளர்களை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால் தங்களது கோரிக்கையையும் அதிலிருக்கும் நியாயத்தையும் தொடர்ச்சியாக திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் வெறுமனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து வீதிப் போராட்டத்தைக் கைவிடாமல் இருந்தது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏற்கெனவே நமக்கு வரலாறு காட்டியிருப்பது போல உச்சநீதிமன்றம், ஒன்று அரசுக்கு ஆதரவான முடிவெடுத்து விவசாயிகள் சட்டத்தை ஏற்றுக்கொள்ள உத்தரவிடும் அல்லது நடுநிலையாக ஒரு சமரச முடிவு என்ற பெயரில் மறைமுகமாக அரசுக்கு ஆதரவாக விவசாயிகளை போராட்டத்தை நிறுத்திக் கொள்ள உத்தரவிடும். இந்த நடவடிக்கையில் இணைவதன் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு பணிய வேண்டும். இல்லையேல் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத வகையில் பொதுமக்களின் கருத்து விவசாயிகளுக்கு எதிராக எளிதாக திரும்பிவிடும் அபாயநிலையும் இருந்தது.
உச்சநீதிமன்றம் என்ன செய்யும் என்பது பற்றிய விவசாயிகளின் மதிப்பீடு துல்லியமானது என நிரூபணம் ஆனது. நீதிமன்றம் தலையிட்டபோது, அது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்தது மற்றும் பிரச்சினையை ஆராய ஒரு குழுவை முன்மொழிந்தது. அத்தகைய குழுவில் நியமிக்கப்பட்ட அனைவரும் விவசாய சட்டங்களின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? தவிர்க்க முடியாமல் அரசாங்கம் விரும்பும் சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டு சமரசத்தை எட்டபோவதாக பிரச்சாரம் செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்து விட்டிருப்பார்கள்.
பெரிய தவறுக்காக தூண்டில் போட்டு காத்திருந்த மோடி அரசு :
இதுபோன்ற ஒரு இயக்கத்தில் போராடுபவர்கள் ஏதாவது ஒரு பெரிய தவறு செய்வதற்காக  அரசும் அதிகார வர்க்கத்தினரும் காத்திருப்பார்கள். அப்படி தவறு செய்தால் அதை கையிலெடுத்துக்கொண்டு போராடுபவர்களை போராட்டத்திலிருந்து விலக செய்துவிடலாம் என்பதற்காக. மிருகத்தனமான சக்தி, பணத் தூண்டுதல்கள் அல்லது ஒரு பெரிய எதிர் சக்திக்கு எதிரான மறைமுக உத்திகள் போன்ற கருவிகள் எதுவும் விவசாயிகளிடம் இல்லை. அவர்களிடம் இருந்தது, தங்களது நேர்மையான கோரிக்கை மற்றும் இந்த நாட்டு மக்கள் மீதான உண்மையான பற்று.
போராட்டக்காரர்களைச் சுற்றி அகழி வெட்டியது, தடுப்பரண்கள் கட்டியது, போலீசுத்துறை, இராணுவம் ஆகியவற்றைக் கொண்டு தடுப்புச் சுவர் அமைத்தது ஆகிய நடவடிக்கைகளிலிருந்து மோடி அரசு விவசாயிகளைப் போன்று சாதாரண நிலையில் மக்களின் மீதான பற்றுடன் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஜனவரி 26-ம் தேதியன்று செங்கோட்டையில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளை இழிவுபடுத்திப் போராட்டத்தை முடக்கிட முயன்றது மோடி அரசு. விவசாயி தலைவர் ராகேஷ் திகாய்த், எந்த நிலையிலும் போராட்டம் தொடரும்; கேவலப்படுத்தும் பிரச்சாரங்களால் எங்களை முடக்கிவிட முடியாது என்று உருக்கமான உரையை ஆற்றி போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தினார்.
காலிஸ்தான் ஆதரவு அல்லது வெளிநாட்டு சக்திகளின் வேலை என்று முத்திரை குத்துவதன் மூலம் இயக்கத்தை சட்டவிரோதமாக்குவதற்கு மோடி அரசும் அதன் ஆதரவாளர்களும் தங்களால் இயன்றவரை முயற்சித்தார்கள். ஆனாலும், போராட்டக்காரர்களையும் போராட்டத்தின் நியாயத்தையும் சிறிதும் அசைக்க முடியவில்லை. நாளாக நாளாக மக்களின் ஆதரவு பெருகவே செய்தது. ஏனெனில், சமூகத்தில் உள்ள உள்ளூர் பெரியவர்கள் தங்கள் நேரடி சமூகங்களுக்குள் மாலை தேநீர் மற்றும் ஹக்காவுக்கான இடைவேளைகளில் அவர்களின் வாய்மொழியில் இயக்கத்தின் காரணங்களை மீண்டும் வலியுறுத்தினர். இது வாட்ஸ்அப் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலம் செய்திகள் சமூகத்தில் பரவியதை போன்ற வலிமையை பெற்றிருந்தது. மேலும், இது அனைத்து எதிர்கால இயக்கங்களுக்கும் ஒரு பாடமாக உள்ளது.
மாநில அரசுகளின் பலத்தைப் பயன்படுத்தி போராட்டத்தை கலைக்க மோடி அரசாங்கம் பல முறை முயற்சித்தது. எனினும் இந்த கேவலமான தந்திரங்கள் எதுவும் விவசாயிகளிடம் செல்லுபடியாகவில்லை என்பது தெளிவாகிவிட்டது. போராட்டத்தின் தலைவர்கள் விவசாயிகளாக இருந்ததால், வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை ஏவிவிட்டு எதிர்கட்சி தலைவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் ஆகியோரை வழிக்கு கொண்டுவரும் மோடியின் மோசடியான முயற்சிகள் எதையும் விவசாயிகளிடமும் தலைவர்களிடமும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஏனெனில், அவர்களின் வருமானம் விவசாய வரம்புக்குள் இருந்தது. இறுதியாக மோடி அரசாங்கத்திடம் முடிவு என்பது அவர்களின் விருப்பத்திற்கெதிராக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
லக்கீம்புரில் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய்மிஷ்ரா பொதுமேடையில் பேசினார். அதை கண்டித்து அமைதியாக பேரணி நடத்திய விவசாயிகள் மீது அவரது மகன் ஆசிஷ் மிஸ்ரா தலைமையில் வேண்டுமென்றே காரை ஏற்றி அந்த இடத்திலேயே நான்கு விவசாயிகளை கொன்றனர். ஆசிஷ்மிஸ்ரா துப்பாக்கியால் விவசாயிகளை நோக்கி சுட்டதும் அம்பலமானது. பட்டபகலில் நடந்த இந்த மாபாதக கொலைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மோடியும் ஆதித்யநாத்தும் பல நாட்கள் வரை செயல்பட மறுத்ததும் மக்கள் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியது.
படிக்க :
டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
அந்த நேரத்தில், மேற்கு உ.பி.யில் பா.ஜ.க. வாக்குகளை மீண்டும் பெறவேண்டுமென்றாலோ, பஞ்சாபிற்குள் கால் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றாலே அதற்கும் ஒரே வழி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து விவசாயச் சட்டங்களை மொத்தமாக ரத்து செய்வதே என்பதை விவசாயிகள் இயக்கத்தின் ஆதிக்கம் உறுதி செய்தது. கடைசியில் வெல்லப்பட முடியாதவர் என்ற மோடியின் பிம்பம் உடைந்து நொறுங்கியது.
விவசாயிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம், அவர்கள் இயக்கத்தை நீண்டகாலம் தக்கவைத்து, மக்கள் ஆதரவை உயிர்ப்புடன் வைத்திருந்தது, அதே நேரத்தில் மோடியின் அடக்குமுறை யுக்திகள் அம்பலமாகியதன் விளைவாக தங்களையே பலவீனப்படுத்திக் கொண்டது, அதன் மூலம் தொடர்ந்து மக்களின் ஆதரவை இழந்தது. போராட்டங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேர்தல்கள் அடிவானத்தில் உள்ளன என்ற உண்மைதான், மோடி அரசாங்கத்திற்கு நெருக்கடியை தீவிரப்படுத்தியது.
விவசாயிகள் போராட்டம் எதிர்கால இயக்கங்களுக்கு பல படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. அதே வேளையில், அது மோடி அரசுக்கும் பல பாடங்களை கற்பித்திருக்கலாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றிருப்பதானது மோடி அரசுக்கு மக்களின் எதிர்ப்பு பொதுவெளியில் இயக்கங்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் திறக்கப்பட்டுள்ளன. வெல்லவே முடியாது என்ற இந்த மோடி அரசாங்கத்தின் பிம்பம் சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது.
தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. போராடிய அப்பாவி விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைக்கான சாத்தியக் கூறுகளையும் புறக்கணிக்க முடியாது. அந்த எச்சரிக்கை உணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக, அரணாக முற்போக்கு ஜனநாயக திராவிட புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தினர் விளங்க வேண்டும். அடக்குமுறையை எதிர்கொண்டு போராட தயாராக வேண்டும்.
நாடு முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பது இதனைத்தான்!

மணிவேல்
மூலக் கட்டுரை : த வயர்
மூலக் கட்டுரையாளர்கள் : சிவம்சங்கர்சிங், ஆனந்த் வெங்கடநாராயணன்

2 மறுமொழிகள்

 1. மோடி அரசாங்கத்தை வெல்லவே முடியாது என்ற பிம்பம்,
  சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது.
  காரணம்,
  டில்லி விவசாய போராட்டத்தின் போக்கை தீர்மானித்த மூன்று வகை பிரதான காரணிகள்.
  மற்றும்
  ஒத்தக்கருத்துடைய கூட்டுத்தலைமை.
  களத்தின் ஒருமித்த ஆணை, கூட்டு தலைமை ,அதற்கான அமைப்பின் வடிவம் இதைப்பற்றி போராடும் அணிகளுக்கிருந்த தெளிவு. அதை ஊட்டிய பிளவுபடாத உயர்ந்த தியாக தலைமை.
  போராட்டத்தில்,அயல் மற்றும் இந்திய அறிவுத்துறையினரின் ஆதரவு பெற்றது.
  விவசாயிகளின் வாழ்க்கை அவலங்களையும் கோரிக்கை நியாயங்களையும் நாட்டு மக்களின் மனதில்,தணியாமல் உயிர்ப்புடன் வைத்திருந்தது.
  பேச்சுவார்த்தையின்போது,அரசினால் தரப்பட்ட உணவு குடிநீரை தொடவும் மறுத்தது
  அதன் மூலம் போராடும் முகாம்களுக்கு ஆதாரமான பொருட்கள் உடனுக்குடன் வருவதற்கான பரந்த பொதுமக்கள் ஆதரவு பெற்றது
  சட்டப் போராட்டத்தில் மட்டுமே நம்பி வீதிப் போராட்டத்தைக் கைவிடாமல் இருந்தது.
  லக்கீம்புர் உட்பட பட்டபகலில் நடந்த விவசாயிகள் மீதான அரசின் மாபாதக கொலைகள் .
  இதைத்தவிர, மறைமுக (உள் நோக்கங்கள்) கருவிகள் எதுவும் விவசாயிகளிடம் இல்லை.அதனால், அரசின் கேவலப்படுத்தும் சகல பிரச்சாரங்களும் தோற்று போனது.
  இப்படி வெற்றிகரமான விவசாயிகளின் போராட்டத்தை அதன் கட்டமைப்பின் பொறியியலை(Structural Engineering) வாசகர்களுக்கு தெளிவாக்குகிறது இக்கட்டுரை.
  “…இதைத் தொடர்ந்து நாட்டின் பிரதான ஊடகங்கள் முதல், தேசிய செய்திதாள்கள், உள்ளூர் ஊடகங்கள், உள்ளூர் செய்தித்தாள்கள் வரை கள்ள மெளனத்தின் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கனவு காண்கின்றன” எனும் கட்டுரையாளர்,இரு தரப்பு(சங்கி-விவசாயிகள் தரப்பு)கருத்து மோதலை கண்மூடி கடந்துபோகிறார்.
  தமிழ்நாட்டு அர்ணாப், பாண்டே “https://www.youtube.com/watch?v=QgIuHgcEUow” தனது வலைதளப்பேச்சின் திமிரைப்பாருங்கள். ஸ்கீம் என்ற வார்த்தைக்கு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு அந்த கேப்பில் கர்நாடகத்தேர்தலில் ஆட்டைப்போட்டவர் மோடி அதே யுக்திதான் இது. இப்போது பஞ்சாப். குருநானக் பிறந்தநாளில் இதை வாபஸ் வாங்குவது ஏன்..ஆஹா..ஆஹா…எனக்கெக்கலிக்கிறார்.
  மறுபுறம் விவசாயிகளுக்கு நிகராக களத்தில் வருடக்கணக்கில் போராட்டச்செய்திகளை உலகுக்கு சொல்லும் பெண் பத்திரிக்கையாளர்கள்.அவர்கள் உழைப்பும் அறிவும் நாம் தலைவணங்கத்தக்கவை.

  ////https://www.newslaundry.com/2021/11/26/2020/12/14/explained-why-farmers-dont-trust-modi-governments-word-on-farm-laws////https://www.newslaundry.com/2021/11/26/one-year-of-protests-farmers-on-modis-repeal-speech-and-the-media //////

  வருட முழுக்க அவரது பணி அங்கு தொடர்கிறது. தலைச்சிறந்த சர்வதேச ஊடக கல்லூரிகளில் பயின்றவர்கள்.பல உச்ச வாய்ப்புகளை உதறியவர்கள்.
  இவர்களைப்போல் எண்ணிலடங்கா துறைச் சார் நிபுணர்களின் (அரசு எந்திரந்திரத்திற்கு நிகராக)பங்களிப்பை விவசாயிகள் பெற்றது எப்படி?அந்த படிப்பினையும் நாம் கற்க வேண்டும்தானே?

  • நன்றி தோழர்.ஆழமான நோக்குடன் தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.உண்மையிலேயே நீங்கள் குறிப்பிட்ட அம்சங்களை சேர்த்திருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் அதை நான் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது தவறுதான்.இன்னொன்று கட்டுரையின் நீளமும் ஒருகாரணம்.இனிவரும் காலங்களில் ஒரு பொருளை எடுக்கும்போது அதனை சுற்றியுள்ள அம்சங்களை கவனத்தில் எடுத்து நிச்சயமாக சிறப்பான முறையில் முயற்சிக்கிறேன்.உங்கள் விமர்சனம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது மீண்டும் நன்றி!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க