கார்ப்பரேட்டுகளிடம் இந்திய விவசாயத்தை தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டில்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க அனைத்து வகையான இழிமுயற்சிகளையும் எடுத்து வருகிறது சங்க பரிவாரக் கும்பல். அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக போராட்டக்களத்தில் மதரீதியான படுகொலை ஒன்றை நிகழ்த்தி சிங்கு எல்லைப் போராட்டக்களத்தை பிரச்சினைக்குரியதாக மாற்றியுள்ளது.
டில்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடி வரும் களத்திற்கு அருகே கடந்த அக்டோபர் 15-ம் தேதி, 35 வயதுமிக்க ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் போலீசு பேரிகேடில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
கொலைசெய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம் சீமா கலன் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி லக்பீர் சிங் என்பது முதல்கட்டமாகத் தெரியவந்தது. இந்தப் படுகொலைக்கு, “நிஹாங்க்” எனும் சீக்கிய அடிப்படைவாதக் கும்பல் பொறுப்பேற்றிருக்கிறது.
படிக்க :
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !
லக்பீர் சிங் சீக்கியர்களின் புனித நூலை இழிவுபடுத்தியதாகவும், அதற்குத் தண்டனையாக லக்பீர்சிங்கின் கைகளை வெட்டி, அவரை கொலை செய்து சிங்கு எல்லையில் போட்டதாகவும் கூறியிருக்கிறது நிஹாங்க் கும்பல். இது தொடர்பாக நிஹாங்க் அமைப்பைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்துள்ளது போலீசு.
லக்பீர் சிங்கிற்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தனது சொந்தச் செலவுக்கே பணம் கையில் வைத்திருக்காத லக்பீர்சிங் எப்படி டெல்லி எல்லைக்குச் சென்றார் என்பது புரியாத புதிர் என்று சீமா கலன் கிராமத்தின் சர்பஞ்ச் ஆவன் குமாரும், லக்பீர் சிங்கின் உறவினரான சுக்சைன் சிங்கும் தெரிவிக்கின்றனர்.
சிங்கு எல்லையில் படுகொலை செய்யப்பட்ட லக்பீர்
மேலும் லக்பீர் சிங்கின் உறவினர் சுக்சைன்சிங் கூறுகையில், நிஹாங்குகளின் அடையாள ஆடை அவரிடம் இல்லவே இல்லை. ஆனால், இறந்த நிலையில் அவர் அந்த ஆடைதான் அணிந்திருந்தார். மேலும், அவர் மதத் துவேசம் செய்யக் கூடியவரும் அல்ல. இதில் ஏதோ சதி நடந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
இந்தக் கொடூரப் படுகொலையை ஒன்றிய அரசும் ஊடகங்களும் விவசாயிகளின் போராட்டத்தோடு இணைக்கப் பார்க்கின்றன. இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.
பாரதிய கிஷான் யூனியன் – விவசாய சங்கத்தின் தலைவரான ராகேஷ் திகாயத் இது குறித்துக் கூறுகையில், நிஹாங்க்குகள் இதனை மதம் தொடர்பான விவகாரம் என்று கூறியிருக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் வரக் கூடாது என்று அவர்களிடம் நாங்கள் பேசி வருகிறோம். அவர்களது நடவடிக்கைகளையும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்புப்படுத்த நினைக்கிறது அரசு. அரசாங்கங்களால் இந்த சதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றிருக்கும் நிஹாங்க் அமைப்பின் தலைவரான பாபா அமன்சிங் கடந்த ஜூன் மாத இறுதியில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தோமரை சந்தித்தது கடந்த அக்டோபர் 19-ம் தேதி அம்பலமானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிஷான் ஏக்தா மோர்ச்சா அமைப்பு, செய்தியோடு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைவரும், விவசாயப் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே நிஹாங்க் அமைப்பின் தலைவர் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேசுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளில் இவர் இடம்பெறவில்லை. பின்னர் தனியாகச் சந்தித்து இவர் என்ன பேச்சுவார்ர்த்தையில் ஈடுபட்டிருக்க முடியும். இந்தக் கிரிமினல் கும்பலின் தலைவர், பாஜக மாநிலத் தலைவரிடமிருந்து ஒரு இலட்சம் வாங்கியதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகேஷ் திகாயத் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், இந்தப் படுகொலைக்குப் பின்னர், நிஹாங்க் எனும் கிரிமினல் கும்பலை போராட்டக்களத்தில் இருந்து வெளியேறுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்மால் போராட்டக்களத்தில் இருந்து வெளியேற முடியாது என பேசியிருக்கிறது இந்த நிஹாங்க் கும்பல்.
கொலை செய்யப்பட்ட லக்பீர் சிங், சமய நம்பிக்கை மிக்கவர் என்றும் அவர் புனித நூலை அவமதிக்க வாய்ப்பே இல்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது, சிங்கு எல்லையில் லக்பீர் சிங் கொல்லப்பட்டது, விவசாயிகள் போராட்டத்தை வன்முறைக் களமாக சித்தரித்து அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த ஜுன் மாதத்தில் பாஜக அமைச்சரை நிஹாங்க் அமைப்புத் தலைவர் சந்தித்ததானது, இதனை உறுதி செய்கிறது.
படிக்க :
அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து இனவெறி, சாதிவெறி, மொழிவெறி, மதவெறி அடிப்படைவாத அமைப்புகளும் மக்கள் விரோதமானவையே. அவை பணத்துக்காகவும், பதவிக்காகவும் தங்களை விற்றுக் கொள்ள தயாராக இருக்கும் கிரிமினல் கும்பல்களாகவே இருந்திருக்கிறது.
தமிழகத்தின் சீமான், மணியரசன் கும்பல் அதற்கு எடுப்பான உதாரணம். இத்தகைய கும்பல்களைத்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல் தங்களது சித்தாந்தங்களை மறைமுகமாகப் பரப்பவும், எதிர்ப்பை மழுங்கடிக்கவும், எதிர்த் தரப்பில் குழப்பங்கள் ஏற்படுத்தவும், ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதை அம்பலப்படுத்துவதும், அதற்கு எதிரான விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்பதும் தான் நம் முன் உள்ள கடமையாகும்.


கர்ணன்
செய்தி ஆதாரம் :
indianexpress, gaurilankeshnews

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க