விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தொழில்துறை மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக பதிலளிக்கக் கோரி டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.
தொழிற்துறை மீதும் பொதுமக்கள் மீதும் இவ்வளவு ‘அக்கறை’ செலுத்தும் தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 7 மாதங்களாக 300-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்து அரசின் அடக்குமுறைகளையும் RSS, BJP காலிகளின் அட்டூழியத்தையும் தாக்குதல்களையும் தாக்குப்பிடித்துப் போராடிவரும் விவசாயிகள் மீது எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.
படிக்க :
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தியும், விவசாயிகளை இடைதரகர்கள் என்றும் நிலம் படைத்த ஆண்டைகளின் அடிமைகள் என்றும் கொச்சைப்படுத்தியும் வரும் RSS – BJP இழிபிறவிகளும்  மனித குல விரோதிகளும் தரும் புகார்கள் நடவடிக்கைக்குரியதாக மாறுகின்றன. தேசிய மனித உரிமை ஆணையமும் அதற்கு கேள்வி கேட்டு ஓலை அனுப்புகிறது.
விவசாயிகளின் முதல் நாள் போராட்டம் முதல் இன்றுவரை சுமார்  700 விவசாயிகள் இறந்துள்ளனர். போலீசின் இரக்கமற்ற கொடூர தாக்குதல்கள் நடைபெற்றன. சங்க பரிவாரக் கும்பல் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதல் தொடுத்தது. அப்போதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த மனித உரிமைகள் ஆணையத்திற்கு இப்போது மட்டும் எப்படியோ முழிப்புத் தட்டிவிட்டது.
“சுமார் 9000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்துகள் முடங்கியுள்ளது. நோயாளிகள் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.” என நீலிக்கண்ணீர் வடிக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
அதே நேரத்தில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் தொழிற்துறை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என பொருளாதார வளர்ச்சிக் கழகத்திடமும், பொது மக்களின் வாழ்வாதாரம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தரும்படி டெல்லி பல்கலைக் கழகம், டெல்லி சமூக சேவை அமைப்புகளிடமும் கோரியுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.
இதிலிருந்தே ஆணையத்தின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள முடியும். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தொழில்துறை இழப்பு ஏற்பட்டிருப்பதாக சித்தரித்து, கையாலாகாத மோடி அரசின் ஆட்சியில் நிலவும் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினையை மூடி மறைத்து அதன் பழியை விவசாயிகள் போராட்டத்தின் போடுவதுதான் இதன் நோக்கம். போராடும் விவசாய வர்க்கத்திற்கு எதிராக இதர உழைக்கும் வர்க்கப் பிரிவினரை கொம்பு சீவி விட்டு மோதவிடுவது. இதன் மூலம் விவசாயிகளை வழக்குகளில் சிக்க வைத்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல விடாமல் தடுப்பது என்ற சதியை அரங்கேற்றவே இது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கொள்கிறது, என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில்கள் பாதிக்கப்பட்டதற்கு, பாசிச மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பும் ஜி.எஸ்.டி-யும் தான் காரணம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், விவசாயப் போராட்டங்கள் தான் காரணம் என்று கூசாமல் பொய் சொல்ல முயலுகிறது தேசிய மனித உரிமை ஆணையம். பொய்யையும் புரட்டையும் சொல்லி எப்படியாவது விவசாயிகளின் போராட்டத்தை முடக்கி வேளாண் சட்டத்தை நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கம் என்பது புலனாகிறது.
மேலும், இன்றைய தேதியில் மக்கள் தொகையில் 72% பேர் ஊரக பகுதியில் வசிக்கிறார்கள் என்று மக்கள் கணக்கெடுப்புத் துறை கூறுகிறது. இவர்கள் வேறு யாரும் இல்லை அனைவரும் விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழிலைச் செய்பவர்களும் தான். விவசாயத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 72% விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. இதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறையின் பங்களிப்பானது மிகவும் சரிந்து வருகிறது.
விவசாய அழிவும் இதை தொடந்து பொருளாதார வீழ்ச்சியும் ஊரக பகுதியிலிருந்து நகரங்களுக்கு விவசாயிகள் வீசியெறியப்பட்டு அத்துக் கூலிகளாக வாழ்கின்றனர். மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தைத் தொடர முடியாத நிலையில் நகர்புறங்களின் சேரிகளிலும், ரோட்டு ஓரங்களிலும் அல்லல் படுகின்றனர்.
இந்த நிலை மேலும் நீடிக்கக் கூடாது என்பதற்காகவும் இருப்பதையும் இழக்காமல் இருப்பதற்காகவும் தான் பாசிச மோடி அரசு கொண்டுவரும் மூன்று வேளாண் சட்டங்களை பெரும் இழப்புகளையும் தாண்டி கடுமையாக எதிர்த்துப் போராடுகின்றனர் என்பதை உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் உணர வேண்டும். மேலும், இவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் விவசாயிகளோடு ஒட்டு மொத்த மக்களும் ஒன்றுப்பட்டு போராடுவது மூலமே விவசாயத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.
படிக்க :
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
மேலும், புதிய தாராளவாதக் கொள்கையானது நாட்டின் சுயமான பொருளாதாரக் கூட்டமைப்பை சிதைத்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் சர்வதேச நிதி மூலதனத்தோடு நேரடியாக பிணைக்கப்பட்டுவிட்டது. இதனால் உலகளவில் ஏற்பட்ட கட்டமைப்பு நெருக்கடி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதன் விளைவுதான் தொழில்துறையும், விவசாயத்தையும் பாதிக்குள்ளாக்கியுள்ளது.
இன்று தொழிற்துறை முதலீடு என்பது 14 சதவிதத்திலிருந்து 10 சதவிதமாக குறைந்துள்ளது. இதுதான் தொழிற்துறையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கமே கூறுகிறது. ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அதனை விவசாயிகளின் போராட்டங்களின் மீது குற்றமாக சுமத்துகிறது.

கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவை செய்வதில் மோடி அரசை மிஞ்சிவிடும் போலத் தெரிகிறது, இந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம்.


கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க