மாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆப்பிள் சீசன் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை தந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தரமான ஆப்பிள்கள் 1 கிலோ ரூ.100 – ரூ.150-க்கு விலை கிடைத்த நிலையில் தற்போது ரூ.30 – ரூ.70 வரை தான் விலை கிடைக்கிறது. இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு அதானி குழுமம்தான் காரணம்.கார்ப்பரேட் கைகளில் விவசாய உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவை செல்லும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம்.
கடந்த ஆகஸ்டு 24-ம் தேதியன்று, மிக உயர்தர ஆப்பிள் விலை 1 கிலோ ரூ.72-ஆகவும், மிகவும் கடைசி தர ஆப்பிள் 1 கிலோ ரூ.12-ஆகவும், கடந்த ஆகஸ்டு 29-ம் தேதிவரை விலையை நிர்ணயித்தது, ஆப்பிள் வர்த்தகம் செய்யும் அதானி அக்ரி ஃப்ரெஷ் நிறுவனம்.
இந்த புதிய விலை கடந்த ஆண்டு அதானி குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்ட உயர்தர ஆப்பிள்களுக்கான 1 கிலோ ரூ.88 விட ரூ.16 குறைவு. இந்த விலை காரணமாக, மண்டி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
படிக்க :
இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
“எங்கள் மாநிலத்தில் சிம்லா மாவட்டத்தில் ரிவலி, சைன்ஜ் ஆகிய கிராமங்களில் அதானியின் குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. அவற்றின் மூலம், விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் ஆப்பிள்கள் பதப்படுத்தப்பட்டு சீசன் நாட்களில் அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்டுகிறது அதானி குழுமம்” என்று இமாச்சல பிரதேசத்தின் முற்போக்கு ஆப்பிள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் லோகேந்திர சிங் பிஷ்ட்கான் கூறினார்.
“சீசன் இல்லாத நாட்களில், குளிர்பதன நிறுவனங்கள் ஆப்பிள்களை வாங்கும்போது சராசரியாக 1 கிலோவிற்கு ரூ.50-க்கும் மேல் கொடுப்பதில்லை என்று சிம்லா மாவட்டத்தில் தோட்டக்கலை அதிகாரி குஷால் சிங் மேத்தா கூறினார்.
பூச்சிக்கொல்லி, உரங்களின் செலவு மட்டுமல்ல, பேக்கேஜிங் செலவும் கடந்த ஆண்டை விட 30 சதவிதம் அதிகரித்துள்ளது. “கடந்த ஆண்டு ஒவ்வொரு அட்டைப்பெட்டியும் ரூ.55 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.70-ஆக உள்ளது. அட்டைப்பெட்டிக்குள் பழங்களை வைக்கும் ஆப்பிள் தட்டுக்கள் ரூ.4.50-வில் இருந்தது தற்போது ரூ.6-ஆக உயர்ந்துள்ளது.” என்று ஆப்பிள் விவசாயி சேத்தா கூறுகிறார்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வருவாய் ஆதாரமாகவும், மக்களின் கனிசமான தொழிலாகவும் இருப்பது ஆப்பிள் சாகுபடிதான். இம்மாநிலத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் ஆப்பிள் தோட்டங்கள் உள்ளன. ஆப்பிள் சாகுபடியிலிருந்து வருடாந்திரம் ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யப்படுகிறது. தற்போது குளிர்பதனக் கிடங்குகள், ஆப்பிள்களின் 20 லட்சம் பெட்டிகளை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி பதப்படுத்தி, சீசன் நாட்களில் அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்டுகின்றனர் என்பதே அம்மாநில ஆப்பிள் விவசாயிகளின் வேதனையாக உள்ளது.
“இம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள், தங்களுக்கு சொந்தமாக குளிர்பதனக் கிடங்குகள் வைத்திருக்கவில்லை என்பதால், இலாபத்தை வேறு யோரோ அனுபவிக்கிறார்கள்” என்று சிம்லா மாவட்ட தோட்டக்கலை அதிகாரி மேத்தா கூறினார்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அரசு நடத்தும் குளிர்பதனக் கிடங்குகள் மிகவும் குறைவு. அவை பெரும்பாலும் அதிக திறனுடையதாக இருப்பதில்லை. எனவே, ஆப்பிள் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் தங்கள் ஆப்பிள்களை உடனே விற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.
விவசாயிகளின் வருமானத்தை அரசு பெருக்க முயற்சிக்குமானால், குறைந்தபட்சமாக 5 லட்சம் ஆப்பிள் பெட்டிகளை உற்பத்தி செய்யப்படும் இடத்தில் 2,000-3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கை அமைக்க வேண்டும்.
“குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க, அதானிக்கு அரசு மானிய விலையில் நிலங்களை வழங்கியதுபோல், ஏன் கூட்டுறவு சங்கங்களை அமைத்து ஆப்பிள் விவசாயிகளுக்கு, குளிர்பதனக் கிடங்குகளை அமைத்துக் கொள்ள மானிய நிலத்தை வழங்கக் கூடாது“ என்று இமாச்சல பிரதேச ஆப்பிள் வளர்ப்போர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேஷ் தண்டா கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றியும் ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.
பண்ணை பொருளாதார நிபுணர் சுச்சா சிங் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில், “இந்திய அரசு விவசாயிகளின் நலனை மேம்படுத்த உண்மையான அக்கறை கொண்டிருந்தால், கூட்டுறவு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்று பரிந்துரைக்கிறார்.
ஆப்பிள் விவசாயத்தில், அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை ஒழித்துக்கட்டாவிட்டால், இமாச்சல பிரதேசத்தின் ஆப்பிள் விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சந்துரு
செய்தி ஆதாரம் : gaonconnection, The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க