மாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள கசவுலி ஒரு மலை நகரம். இங்கிருக்கும் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இடிக்கச் சென்ற பெண் அதிகாரியை ஒரு விருந்தினர் மாளிகையின் அதிபர் சுட்டுக் கொன்றார்.

மே 1, 2018 அன்று காலையில் நகர துணை திட்டமிடலாளர் ஷைல் பால சர்மாவும் அவரது குழுவினரும் கசவ்லி நகரில் உள்ள நாராயணி விருந்தினர் மாளிகையின் அங்கீகாரமற்ற கட்டிடங்களை இடிக்க காலை 11:30 மணிக்குச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பலர் அவர்களில் அரசு அதிகாரிகளும் உண்டு, லாரி ஏற்றிக் கொல்லப்ட்டிருக்கின்றனர். ஆனால் மணல் கொள்ளை தொடர்கிறது.

அவருடன் சென்ற அலுவலர் ஒலிபெருக்கியின் மூலம், நாராயணி விருந்தினர் மாளிகை கட்டிடத்தையும், அதற்கு அருகில் உள்ள ஷிவாலிக் தங்கும் விடுதியின் கட்டிடத்தையும் இடிக்க உள்ளதாகவும் அக்கட்டிடங்களில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறி இடிப்பதற்கு ஒத்துழைக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

நாராயணி விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் விஜய் தாக்கூரும், ஷிவாலிக் தங்கும் விடுதியின் உரிமையாளர் வேத் கார்க்கும் வெளியே வந்து ஷைல் பால சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே தாம் இடிக்க வந்திருப்பதாகவும், பொருட்களை எடுத்துக் கொண்டு உடனடியாக காலி செய்யும்படியும் கூறியுள்ளார் ஷைல் பால சர்மா.

நீதிமன்ற உத்தரவுகளைக் காட்டும்படி கேட்டுள்ளார் ஷிவாலிக் தங்கும் விடுதியின் உரிமையாளர் வேத் கார்க். நீதிமன்றம் இடிப்பதற்கான எல்லையை குறிப்பிடவில்லை என்றும் தாம் உச்சநீதிமன்ற உத்தரவை வெறுமனே வியாக்கியானம் செய்வதைத் தவிர பிரச்சினை ஏதும் செய்ய முற்படவில்லை என்றும் கூறியுள்ளார் வேத் கார்க். அதனை உச்சநீதிமன்றத்தில் போய் வியாக்கியானப்படுத்துமாறும் தம்மை தமது கடமையை நிறைவேற்ற விடுமாறும் ஷைல் பால சர்மா கூறியுள்ளார் .

ஷைல் பால சர்மாவுடன் (இடமிருந்து முதலாவது) வாக்குவாதம் புரியும் விஜய் தாக்கூர் (இடமிருந்து இரண்டாவது) (படம்) நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

பின்னர் நாராயணி விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த ஷைல் பால சர்மாவிடம் வாக்குவாதத்தில் இறங்கியிருக்கிறார் விஜய் தாக்கூர். உச்சநீதிமன்ற ஆணை, நகர திட்டமிடல் துறையின் வழிகாட்டுதல்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சோலன் துணைக் கமிசனரின் வழிகாட்டுதல்கள் என அனைத்தை ஆவணங்களையும் காட்டியுள்ளார் ஷைல் பால சர்மா.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதத்தில் ஷைல் பால சர்மா, விஜய் தாக்கூரிடம், ”இது நீதிமன்ற உத்தரவு, இதில் தனிப்பட்டரீதியில் விளக்கமளிக்க எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவர்களது குழுவினர் அருகில் உள்ல ஷிவாலிக் தங்கும் விடுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு வேத் கார்க், பார்வையிட்ட குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின்னர் அக்குழுவிலிருந்த தாசில்தார் அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்குச் சென்று திரும்பிய ஷைல் பால சர்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் நாராயணி விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் விஜய் தாக்கூர். முதல் தோட்டா பால சர்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அடுத்த குண்டு அவருடன் இருந்த குலாம் சிங் என்பவர் மீது பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து தப்பி ஓட முயற்சித்த பால சர்மாவை நோக்கி மீண்டும் சுட்டுள்ளார் தாக்கூர். மற்றொரு குண்டு பாய்ந்து கீழே விழுந்து இறந்தார் ஷைல் பால சர்மா.

இமாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது, சுற்றுச் சூழல் விதிகளைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சுற்றுலாதளங்களில் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளைக் கட்டுவது போன்றவை நிறைந்து கிடக்கின்றன.

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தால் ஏற்பட்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து – கோப்புப் படம்.

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ரெங்கநாதன் வீதி சரவணா ஸ்டோர்ஸில் கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து இரு தொழிலாளர்களின் உயிர்களைக் காவு வாங்கியது. அப்பகுதியில் மட்டும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் 62க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. கும்பகோணம் தீ விபத்தில் 94 பச்சிளம் பள்ளிக் குழந்தைகள் இறந்தது, முகலிவாக்கம் கட்டிட விபத்து, சென்னை சில்க்ஸ் தீ விபத்து என பல சூழல்களில் விதிமுறை மீறலும் இலாபவெறியுமே இப்பேரிடர்களுக்குக் காரணம் என்பது அம்பலமான போதிலும் இதை தடுப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கின்றது. ஏதோ ஒரு நேரத்தில் அரசும் நீதிமன்றமும் இதைத் தடுப்பதாக பாவ்லா காட்டினாலும் மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பலர் அவர்களில் அரசு அதிகாரிகளும் உண்டு, லாரி ஏற்றிக் கொல்லப்ட்டிருக்கின்றனர். ஆனால் மணல் கொள்ளை தொடர்கிறது. கிரானைட் பழனிச்சாமி, மணல் ஆறுமுகச்சாமி, தாது மணல் வைகுண்டராசன் அனைவரும் மதிப்பிற்குரிய தொழில் அதிபர்களாக உலா வருகின்றனர்.

இலாபவெறிக்காக விதிமுறைகளை மீறி நடத்தப்படும் கனரக தொழிற்சாலைகள் முதல், சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வரையிலும் பலியிடப்பட்ட அப்பாவித் தொழிலாளர்கள் பல ஆயிரம்.

கட்டிடம் கட்ட அனுமதிப்பதில் தொடங்கி, மின் இணைப்பு வழங்குவது, தீயணைப்புத்துறை சான்றிதழ் வழங்குவது, மாசுக்கட்டுப்பாடு வாரிய சான்றிதழ் வழங்குவது வரை அனைத்திலும் விதிமுறை மீறல்கள் மனித உயிர்களையும் சுற்றுச் சூழலையும் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் இலாபவேட்டைக்காக இலஞ்சம் கொடுத்து நடத்தப்படும் இந்த விதிமிறல்களின் நரபலி வேட்டையில், மற்றுமொரு பலிதான் ஷைல் பால சர்மா!

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:
Kasauli murder — In her last hours, the last words: ‘We are only following court orders’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க