உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளியானதையடுத்து, இந்துத்துவ குண்டர்கள் இந்திய முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

த்தரப்பிரதேசம் காஜியாபாத் மாவட்டத்தில் குல்தார் ரயில் நிலையம் அருகேயுள்ள கவி நகர் பகுதியில் குடிசைகளில் வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களின் மீது, இந்து ரக்‌ஷா தளம் (Hindu Raksha Dal) என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த குண்டர்கள் பூபேந்தர் தோமர் என்று அழைக்கப்படும் பிங்கி சவுத்ரி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் வசித்துவரும் முஸ்லீம்கள் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ரோங்கியா முஸ்லீம்கள் என்றும் தெரிவித்து அக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இக்கும்பல் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோக்களில் முஸ்லீம் மக்களின் கூடாரங்கள் சேதப்படுத்தப்படுகின்றன; அவர்களின் உடைமைகள் தீ வைக்கப்படுகின்றன; அவர்களுடைய மதம் இழிவான வார்த்தைகளால் வசைபாடப்படுகிறது; அம்மக்கள் ஈவிரக்கமின்றி கொடூரமாக தாக்கப்படுகின்றனர்.

இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்து ரக்‌ஷா தளத்தை சேர்ந்த மற்றொரு குண்டனான தக்‌ஷ் சவுத்ரி, டெல்லியின் சாஸ்திரி நகரில் குடிசையில் வசித்துவரும் முஸ்லீம் மக்களை சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லீம்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளான். அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவரும் வடகிழக்கு டெல்லி வேட்பாளருமான கண்ணையா குமாரை பிரச்சாரத்தின் போது தாக்கிய இருவர்களில் இவனும் ஒருவன். அயோத்தியில் பா.ஜ.க தோல்வியடைந்த பிறகு, அயோத்தி ‘இந்து’ மக்களை இழிவாக பேசியதற்காகவும், அவர்களை துரோகிகள் என்று கூறியதற்காகவும் இவன் மீது வழக்கும் பதியப்பட்டும் உள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று காவிக் குண்டர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் முஸ்லீம் மக்கள் மீதான இத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய நச்சுப் பிரச்சாரத்தில் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் கூட வெளிப்படையாக ஈடுபடுகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் உள்ள கன்காவ்லி விதான்சபா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நிதிஷ் ரானே, “வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்பட்டால், வங்காளதேசியரை நாம் ஏன் இங்கு சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். நாமும் குறிவைத்து கொல்வோம்” என்று பதிவிட்டு வங்கதேசியர்கள் என்ற பெயரில் முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்வதற்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தான்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினரான கங்கனா ரணாவத், இந்தியாவை இஸ்ரேலுடன் ஒப்பிட்டு, “இந்தியா தீவிரவாதிகளால் மூடப்பட்டுள்ளது” என்று ஆகஸ்ட் 10 அன்று பதிவிட்டிருந்தார். மேலும் “…உங்கள் வாள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை கூர்மையாக வைத்திருங்கள், தினமும் ஏதாவது ஒரு போர் வடிவத்தை பயிற்சி செய்யுங்கள். அதிகம் இல்லை என்றால் தினமும் 10 நிமிடம் தற்காப்புக்காக ஒதுக்குங்கள்…” என்று பதிவிட்டு முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகக் கூறியிருந்தார்.

மேலும், முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமதவெறியர்கள் தாக்குதல்களை ஆதரித்து சமுக வலைத்தளங்களிலும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். காஜியாபாத் கவிநகர் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தலைமை தாங்கிய பிங்கி சவுத்ரி என்ற குண்டன், முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆதரித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், எளிதில் பிணை கிடைக்கக்கூடிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கை பதிவு செய்யுமாறு போலீசை எச்சரித்தும் அவன் வீடியோ ஒன்றை தாக்குதலை நடத்திய பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளான்.

முன்னதாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு வீடியோவில், “வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும் விதம், சகோதரிகள் மற்றும் மகள்கள் பலாத்காரம் செய்யப்படுவது, கோயில்கள் அழிக்கப்படுவது… உலகம் முழுவதும் இதைப் பற்றி அமைதியாக இருக்கிறது. யாரும் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. அட்டூழியங்கள் நிற்கவில்லை என்றால், இந்தியாவில் வசிக்கும் வங்கதேச மக்கள் நம் ரேடாரில் இருக்கிறார்கள். அத்தகைய இடங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். நான் அவர்களை விடமாட்டேன். இறுதிவரை போராடுவேன்” என்று பதிவிட்டிருந்தான்.

இவ்வாறு வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளிவந்த பிறகு, சமூக வலைத்தளங்களில் முஸ்லீம் மக்களை குறிவைத்து தவறான தகவல்களும் வெறுப்பூட்டும் பேச்சுக்களும் நிரம்பி வழிகின்றன. சங்கி வானரப் படைகளால் பல போலியான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனமான ஆல்ட் நியூஸ் இந்த போலிச் செய்திகளை அடையாளம் கண்டு சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தி காவிகளின் அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

மேலும், இந்துமதவெறி போதை தலைக்கேறிய காவிக்குண்டர்கள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட முஸ்லீம் மக்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றும் ரோங்கியா முஸ்லீம்கள் என்றும் பொய்களைக் கூறி தாக்குதல் நடத்துகின்றனர். காஜியாபாத்தில் தாக்குதல் நடத்திய பிங்கி சவுத்ரியும் இதே வாதத்தை தான் முன்வைத்தான். ஆனால் உத்தரப்பிரதேச போலீசு தாக்கப்பட்டவர்கள் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளதே அதற்கு சான்றாகும்.

மோடி-அமித்ஷா கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் அன்று, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் பசுவதை செய்யப்படுவதாக கூறி திட்டமிட்டு முஸ்லீம் மக்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முஸ்லீம் மக்களின் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்காக வஃக்ப் சட்டத் திருத்த மசோதா-2024-யை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.

மேலும், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற காவிகள் ஆளும் பசுவளைய மாநிலங்களில் மூஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத் தான், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாகக் கூறி இங்குள்ள முஸ்லீம் மக்கள் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தன்னுடைய பாசிச நிகழ்ச்சி நிரலுக்கு வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


உதயன்

நன்றி: தி வயர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க