சித்தர்களை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பல்

தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன.

லகம் முழுவதும் கடந்த டிசம்பர் 19-ம் தேதி உலக சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் தோன்றும் நாளை அகத்தியர் பிறந்த நாளாகவும் அதையே உலக சித்த மருத்துவ தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு இந்த நாளில் நடந்த கொண்டாட்டங்களில் பல இடங்களில் காவி கும்பல் சித்தர்களைக் கையிலெடுக்கும் தங்களது சதி வேலைகளை பல்வேறு இடங்களில் அரங்கேற்றியுள்ளது.

சித்தர்களை சனாதனவாதிகளாகக் காட்சிப்படுத்தும் போக்கும், சித்தர்களுக்குக் காவி சித்தாந்தத்தைப் பூசும் வேலையும் நடந்தேறியுள்ளது. பல இடங்களில் யோகா, நடனம் என்னும் பெயரில் மாணவர்களுக்குக் காவி உடை அணிவித்து அதன் மூலம் புராண புரட்டுக்களை அரங்கேற்றுவது, சித்தர்கள் நான்கு வேதத்தைப் பின்பற்றுபவர்கள் என வரலாற்றைத் திரித்து கதைகள் பல கட்டவிழ்த்து விடுவது என்னும் வேலைகள் நடந்தேறின.

இப்படிச் சித்தரிப்பது என்பது சித்தர்கள் ஆரிய-பார்ப்பன-வேத எதிர்ப்பு மரபு கொண்டவர்கள் என்பதை மூடி மறைக்கும் போக்காகும்.

இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்று பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. இதில் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பல்லுயிர்ச்சூழலில் உள்ள தாவரங்கள், சீவராசிகள், தாதுக்கள் போன்ற இயற்கைப் பொருட்களை மருந்தாக உபயோகிப்பது பற்றிய அறிவை பல்லாயிரம் ஆண்டுக் கால அனுபவத்தின் வாயிலாகப் பெற்றனர். இதனுடன் சீனா, கிரேக்கம், அரபு போன்ற நாடுகளுடன் கொண்ட தொடர்பால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தன்மையைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். தமிழகத்திலிருந்த ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற கடவுள் மறுப்பு சமயங்களின் தத்துவ அறிவால் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட அனுபவ அறிவு பகுப்பாய்வு செய்யப்பட்டு மேலும் செறிவடைந்தது. பின்னர் சித்தர்களின் பங்களிப்பால் மேலும் வளர்ச்சி அடைந்தது. இன்று ‘சித்த மருத்துவம்’ என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ அறிவாக அடையாளம் காணப்படுகிறது.

ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் மருத்துவ அறிவியல் வேத மதத்தை எதிர்த்தே நின்றது. இந்தச் சமயங்கள் பார்ப்பனியத்தால் அழித்தொழிக்கப்பட்டு அதன் அறிவியல் பதிவுகள் பார்ப்பனர்களால் திருடப்பட்ட காலகட்டத்தில், கேட்க ஆளின்றி அடையாள அழிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக உருவெடுத்து தமிழ்ச் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின்போது இந்தியாவில் சித்த மருத்துவம் உட்பட பிற இனக்குழுக்களின் மருத்துவ முறைகளை ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவும் பார்ப்பனியத்தால் சுவீகரிக்கப்பட்டு ஆயுர்வேதம் என மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாரம்பரிய மருத்துவ முறையையும் வேத-சாஸ்திரங்களோடு தொடர்பு படுத்தியும் அதற்கு வேத முலாம் பூசுவதின் வாயிலாகவும் இவ்வேலைகள் நடந்தேறின.

தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன. இப்போராட்டத்தில் அயோத்திதாச பண்டிதர், எஸ்.எஸ்.ஆனந்தம் பண்டிதர் போன்ற சித்த மருத்துவர்களின் முயற்சியால் தமிழர்களின் மருத்துவம் சித்த மருத்துவமே என்ற அடையாளம் காக்கப்பட்டது. சித்த மருத்துவர்களான இவர்கள் சித்தர்களைப் போலச் சாதி அமைப்பை எதிர்த்த சமூகப் போராளிகளாகவும் இருந்தனர்.

சித்தர்களின் காலத்தில் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளாலும், சாதி, மத ஒடுக்குமுறைகளாலும் மக்கள் துன்புறுவதைக் கண்டு மக்களின் விடுதலைக்காக கலகக்குரல் எழுப்பப்பட்டது. சித்தர்கள் என்று அறியப்படும் அகத்தியர் முதல் வள்ளலார், அய்யா வைகுண்டர் என பலரது பாடல்களிலும் ஆரிய-பார்ப்பனிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக,

அகத்தியர்:

“சாத்திரத்தை சுட்டு எரிப்பவனே சித்தன்”

அகத்தியர் ஞானம்:

“….ஒரு நான்குவேதம் என்றும் நூலாம் என்றும்……
நான் என்றும் நீயென்றும் சாதிபலவென்றும் நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத்தானே”

காக்கபுசுண்டர்:

“காணப்பா சாதிகுலம் எங்கட்கு இல்லை”

ஞானவெட்டியான்:

“நம்பிறவி அந்தணரே! நேயம் உள்ள சூத்திரரே வம்புரைத்தீர் என்குலத்தை மருஉரு வாகாதோ?”

குதம்பைச்சித்தர்:

“பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய்…”

“வேதம் புராணம் விளங்கிய சாத்திரம் போதனை ஆகுமடி…”

“பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாய் சொல்வதென்ன குதம்பாய்…”

சிவவாக்கியர்:

“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இறைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?”

“சாதியாவதேதடா….. சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே”

“பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா…”

“நட்டக்கல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே…”

பாம்பாட்டிச்சித்தர்:

“சதுர்வேதம் ஆறுவகை சாஸ்திரம் பல
தந்திரம் புராணங்கலை சாற்றும…
வீணான நூல்களேயென்…”

“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்”

இராமலிங்க அடிகளார் (வள்ளலார்):

“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தவிர்த்தேன்”

வான்மீகர் ஞானம்:

“….நாலுவேதம் வல்லமையாச் சாத்திரங்கள் இருமூன்றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட்டாக கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந்தங்கள் காட்டினார் அவர்வர்கள் பாஷையாலே
தொல்லுலகில் நால்சாதி அநேகம் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே”

என ஆரிய-பார்ப்பனிய வேத கலாச்சாரத்திற்கும், அதனால் உண்டான சாதி, மத ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அக்காலத்திலே சமரசமின்றி சமர் செய்தவர்கள் சித்தர்கள். அவர்களின் தொடர்ச்சியாக அயோத்திதாச பண்டிதர் தொடங்கி பெரியார் எனப் பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழ்நாட்டில் திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், அய்யா வைகுண்டர் எனப் பலருக்கும் காவி சாயம் பூசி மீண்டும் ஒரு அடையாள அழிப்பை நிகழ்த்தி வரும் காவி கும்பலை விரட்டியடிக்க வேண்டியது அனைவரது கடமையாக உள்ளது.

அரசு கட்டமைப்பு முழுவதும் பாசிசமயமாகி வரும் சூழலில் பாசிச எதிர்ப்பில் முதன்மை பங்காற்றுபவை களப் போராட்டங்களே. பார்ப்பனியம் இன்று பார்ப்பன பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழ்நாட்டிற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர், தமிழ்நாடே உன் போர்வாளை கூர்தீட்டு.

மேற்கோள் நூல்கள்:

‘காவி-கார்ப்பரேட் பிடியில் சித்தமருத்துவம்’
‘சித்தர்களும் சமூகப்புரட்சியும்’-இரா.சி. தங்கசாமி


சித்தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க