டெல்லியில் சிங்கு எல்லைப் பகுதியில் போராடி வரும் விவசாயிகளுடன் இணைந்து போராடுவதற்கு அங்கு வந்த ஷாகின் பாக் போராட்ட முன்னணியாளர் பில்கிஸ் பானுவை டெல்லி போலீசு தடுத்து நிறுத்தியது.

பில்கிஸ் பானு, ஷாகின் பாக் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்தவர். அவரை டெல்லி-அரியானா எல்லையான சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அவரை போலிசு தடுத்துவைத்துள்ளது.

அந்த 82 வயது பெண்மணியான பில்கிஸ் பானுவை போராட்ட இடத்திற்கு செல்லவிடாமல் 20-க்கும் குறையாத அளவில் போலீசுக்காரர்கள் தடுத்து வைத்துள்ளதாக போராட்டக் களத்தில் உள்ள தி வயர் இணையதளத்தின் ரிப்போட்டர் இஸ்ரத் அரா டிவீட் செய்துள்ளார். பில்கிஸ் பானுவின் மகன் தனது தாயாரை ஷாகின்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று சிறிது நேரம் காவலில் வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்று ‘தி வயர்’ இணையதளத்திற்கு அலைபேசி மூலம் மூலம் தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

தி வயர், வடப்பகுதி புறநகர் துணை கண்காணிப்பாளர், கவ்ரா ஷர்மாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “தடுப்பு காவலில் வைக்கவில்லை. போலிசுகாரர்கள் மூத்த குடிமகளை “பாதுகாக்கும்” தங்களின் கடமையை செய்துள்ளனர்” என்றார்.

“நேற்றுகூட, சிலர் வெளியிலிருந்து போராட்ட இடத்திற்கு நுழைய முயன்றனர். அவர்களையும் தடுத்து நிறுத்தினோம். உண்மையிலேயே தடுத்த சிறு நிகழ்வுதான் நிகழ்ந்தது. மூத்த குடிமகளாக இருப்பதால் அவருடைய பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே வீடு திரும்புமாறு கேட்டுக்கொண்டோம்” என்றார், கவ்ரா ஷர்மா.

உண்மை என்னவென்றால்,  பில்கிஸ் பானு மிகவும் செல்வாக்கு மிக்கவர். அவர் டைம் பத்திரிகை பட்டியலிட்ட நூறு செல்வாக்குமிக்கவர்களில் ஒருவர். பிபிசி பட்டியலிட்ட 2020 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பெண்மணிகளில் ஒரவர். அவர் தனது ஆதரவை போராடுகின்ற விவசாயிகளுக்கு தெரிவித்தது முன்னரே செய்தியாகியிருந்தது.

இதை தொடர்ந்து , 30-ம்தேதி பில்கிஸ் மாலை 3.30 மணியளவில்,  சிங்கு எல்லைப் பகுதியை அடைந்ததும் அது ஊடக செய்தியானது.

“ஏன் பில்கிஸ் பானுவை போலிசு போராட்டத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கவில்லை” என்று தி வயர் இணையதளம் போராட்டம் நடந்த இடத்தில் இருந்த ஒரு போலீசிடம் கேட்டபோது, அவை விவசாயிகள் போராட்டமாக மட்டுமே இருக்கட்டும் என்றார்.

சிங்கு எல்லையை விட்டு புறப்படும்போது, “போராடும் விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுக்க ஆர்வமாக இருந்தேன். தேவை ஏற்பட்டால் இரவில் போராடுவேன்” என்றார் பில்கிஸ் .

சிங்கு எல்லையில் போராடுகின்ற விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் கம்பி வேலி, பேரிகாட், தண்ணீர் பீச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள் என எல்லா தடைகளையும் எதிர்த்து முடித்து போராட்ட இடத்திற்கு வந்தடைந்துள்ளனர். இரவின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தங்களின் கோரிக்கையான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுவது அல்லது பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உத்திரவாதப்படுத்துகின்ற புதிய  சட்டம் இயற்றுவது என்ற கோரிக்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்ட இடத்தை மாற்றிக் கொள்ளுமாறு மத்திய அரசு முன்வைத்துள்ள புராரி என்ற போராட்ட இடத்திற்குச் செல்ல மறுத்து, சிங்கு மற்றும் திக்ரி எல்லையிலேயே தொடர்ந்து விவசாயிகள் போராடிக்கொண்டிருப்பதால், மத்திய அரசு டிசம்பர் 3-ம் தேதி பேச திட்டமிட்டதை மாற்றி முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள விக்யன் பவனில் மத்திய அமைச்சர்கள் நேரேந்திர சிங் தோமர், பூயுஷ் கோயல் மற்றும் விவசாயிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான் பில்கிஸ் பானுவின் தடுப்புக்காவல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க