பிரான்சு போலீசுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் கடந்த நவம்பர் 24 அன்று பிரான்சு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த மற்றும் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், ஜனநாயகவாதிகளும் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

போலீசின் கிரிமினல்தனமான, மிருகத்தனமான தாக்குதல்களை  அம்பலப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்திய போலீசின் பெயர், புகைப்படம், இருப்பிடம், அடையாளம் போன்றவற்றை பொதுவெளியில் எவ்வகையிலும் அச்சிடுவதோ, பரப்புவதோ குற்றமாகும்.

இச்சட்டத்தின் பிரிவு 24, ஒரு போலீசு அதிகாரியை தாக்குவது அல்லது உளவியல்ரீதியாக காயப்படுத்தும் நோக்கத்தில் போலீசு அதிகாரியின் அடையாளம் அல்லது புகைப்படத்தை பரப்பினால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 45,000 யூரோ தண்டம் விதிக்கப்படும் எனக் கூறுகிறது.

படிக்க:
♦ பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் !
♦ முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்

இதன்மூலம் அரசுக்கு எதிரான போராட்டங்களை நசுக்குவது, இடதுசாரி இயக்கங்களை ஒடுக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது மெக்ரான் அரசு. முக்கியமாக, போலீசு அடக்குமுறையை எதிர்த்து ஊடகங்களும் மக்களும் குரல் கொடுக்க முடியாமல் ஒடுக்குவதற்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

“ஒரு பத்திரிக்கையாளரோ அல்லது குடிமகனோ ஒரு போலீசு நடவடிக்கையை வெளியிட முடியும். ஆனால், ஒரு வன்முறையை நிகழ்த்துவதற்கு கூடுவதற்காக போலீசின் முகவரி அல்லது பெயரை வெளியிடுவதற்கு இந்த சட்டம் தடை செய்கிறது” என்று தனது டிவிட்டரில் இச்சட்டத்திற்கு விளக்கவுரை அளிக்கிறார், பிரான்சு உள்துறை அமைச்சரான ஜெரால்டு டெர்மானின்.

ஆனால், கடந்த திங்கட் கிழமை, போதுமான தங்குமிடம் மற்றும் வீடற்ற அகதிகள், அடிப்படை  வசதிகள் கோரி, சமூகச் செயற்பாட்டாளர்களுடன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக் கூடாரத்தை போலீசு பலவந்தமாக அகற்றிய நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போலீசின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டுவந்தன.

மெக்ரான்

இந்த சம்பவத்தைப் பற்றி டெர்மானினிடம் கேட்கையில், “போலீசு அந்த டெண்டுகளை அகற்றும் சில புகைப்படங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார். ஆனால், “உண்மையில், போலீசின் நடவடிக்கைகளை படம்பிடித்து வெளியிடுவதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது” என்று இடதுசாரி கட்சியினரும் தொழிற்சங்கத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் மக்கள் மீது அதிகரிக்கப்படும் வரிவிதிப்புகள், தொழிலாளர், மாணவர் உரிமை பறிப்புகள் என கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக அவ்வப் போது கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களை போலீசு துணை கொண்டு அடக்கி ஒடுக்கவே இத்தகைய பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுகிறது பிரான்சு அரசு.

“மெக்ரான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாராளவாதத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான அரணாக தன்னைக் காட்டிக்கொண்டார். ஆனால், இப்போது அவர்தான் தாராளவாதத்தைத் தாக்குவதற்கு தலைமை தாங்குகிறார். தனிநபர் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சி முறை மற்றும் நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் அதிகார சமநிலையைத் தகர்ப்பதில் இவருக்கு இருக்கும் ஆர்வம் ஆகியவற்றால், மேக்ரோன் ஜனநாயகத்தில் இருந்து திசை விலகிச் செல்வதாக ஊடகங்களும், தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்” என்று சோசலிஸ்ட் கட்சி தலைவர் ஆலிவர் பௌர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் குரான் மற்றும் இசுலாத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி, இசுலாமிய பிரிவினைவாதம் எனும் மதவாத சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ள மெக்ரான், அது தொடர்பான ஒரு சட்டத்தையும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்ய இருக்கிறார்.

எதிர்வரும் 2022-ம் ஆண்டு பிரான்சு ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் மெக்ரான் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

படிக்க :
♦ டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்

மொத்தத்தில், ஃபிரான்சில் ஜனநாயகத்தை மறுத்து போலீசு ஒடுக்குமுறை ஆட்சியைக் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது மெக்ரான் அரசு. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது, அடக்குமுறைகளை அதிகரிப்பது, அதற்காக மக்களைப் பிளவுப்படுத்துவது, இதன் மூலம் அடக்குமுறைகளை மேலும் அதிகரிப்பது என ஜனநாயக குடியரசாக இருந்த ஃபிரான்சை பாசிசத்தை நோக்கி கொண்டு செல்கிறது.

அதற்கு ஏற்றவகையில்தான் தற்போது மதவாதத்தை தனது கையில் எடுத்திருக்கிறார் மெக்ரான். பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் எப்போதும் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கையில் ஆட்சியதிகாரத்தைக் குவித்தது. பிரான்சில் மெக்ரான் அதை தனது கையில் எடுத்துக் கொள்ள விளைகிறார்.

பிரான்ஸ் அரசு கொண்டுவந்துள்ள இந்தப் பாதுகாப்புச் சட்டம் மேலவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்களை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் முன்னெடுக்கத் துவங்கியுள்ளன.


மகேஷ்
செய்தி ஆதாரம் : Financial Times

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க