பிரான்ஸ் நாடு தனது நாடாளுமன்றத்தில், தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது மின்னணு சேவை வரி போடுவதற்கான புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இச்சட்டம் தனது நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என அலறியிருக்கிறது அமெரிக்கா. இது குறித்து ஒரு விசாரணையை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் 750 மில்லியன் யூரோ மற்றும் பிரான்சில் மட்டும் 25 மில்லியன் யூரோ ஆண்டு வருமானம் கொண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் இலாபத்திலிருந்து 3% மின்னணு சேவை வரி விதிக்கும் ஒரு மசோதாவை கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் பொருளாதாரத் துறை அமைச்சர்.
இந்த மசோதாவிற்கு எதிராக ‘301-விசாரணை’ என்று அழைக்கப்படும் விசாரணையை தொடங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. ஏற்கனவே, தனது அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாக சீனாவின் மீது குற்றம்சுமத்தி சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கையில், இதே வகையான விசாரணையைத்தான் அமெரிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் கொண்டு வந்திருக்கும் இந்த மின்னணு சேவை வரிச் சட்ட வரைவானது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் மட்டுமின்றி சீனா, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இதர தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
பிரான்ஸ் நாட்டின் பொருளாதார அமைச்சர் ப்ரூனோ லெ மைர் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துகையில், இச்சட்டத்தின் மூலம், கூடுதல் வரி வருவாயாக 500 மில்லியன் யூரோக்கள் பெற முடியும் என்று கூறியுள்ளார். எனினும், தனது நாட்டுப் பெருநிறுவனங்களைக் குறிவைப்பதற்காக மட்டுமே பிரான்ஸ் இந்தவகையான வரியைக் கொண்டுவந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறது அமெரிக்கா.
படிக்க:
♦ இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
“பிரான்ஸின் இந்த சட்டம், அமெரிக்க வர்த்தகத்தின் மீது கடும் வரம்புகளையும் சுமைகளையும் சுமத்தக்கூடிய மற்றும் காரணமற்ற, பாகுபாடு காட்டக் கூடிய விளைவுகளை ஏற்படுத்துவதாகவோ இருக்கிறதா என விசாரிக்க அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்” என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ராபர்ட் லைத்திசர் கூறியுள்ளார்.
கடந்த 2008–ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர், மந்தமாகவே இருந்துவந்த உலகப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பல்வேறு முயற்சிகளையும், லாபிகளையும் செய்து வருகின்றன, ஏகாதிபத்தியங்கள். எனினும் பொருளாதாரமும், சந்தையும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கின்றன. சந்தையின் மந்த நிலையில் தனது சொந்த நாட்டு முதலாளிகளைக் காக்க, காப்பு வரிகளைப் போடத் துவங்கி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சண்டையின் புதிய சுற்றை துவக்கி வைத்தது அமெரிக்கா.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த வணிகப் போரில் நாடுகளுக்கிடையில் உயர்த்தப்படும் வரிகளும், போடப்படும் பொருளாதாரத் தடைகளும், விலைவாசி உயர்வாய் நமது தலையில்தான் விடிகின்றன!
நந்தன்செய்தி ஆதாரம் : ஆர்.டி