ஸ்லாமியக் குடியரசு நாடான இரானில் ஆட்சி மாற்றத்தையும், அதனின் அரசுக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட நாள் கனவு. அந்நோக்கில்தான் இராக் மீது போர் தொடுத்த கையோடு, இரானை, “ரவுடி நாடு” (Rogue State) என்றும், “தீமையின் அச்சு” (Axis of Evil) என்றும் வசைமாரி பொழிந்து வந்தது.

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாக இராக் அதிபராக இருந்த சதாம் உசைன் மீது பழி போட்டது போலவே, இரானின் கொமெய்னி அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்கா, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையுத்தரவையும் ஏவியது.

இப்பொருளாதாரத் தடையுத்தரவு அமெரிக்கா எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்காததாலும், இராக்கில் சன்னி முசுலீம் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டுக் கலகங்களைச் சமாளிக்க, ஷியா முசுலீம்கள் பெரும்பான்மையாக உள்ள இரானின் தயவு அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டதாலும் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது.

அதனுடன் இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளும் இணைந்து கொண்டன. இப்பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அதில் இரு தரப்பும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தப்படி, இரானின் அணு உலைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தன் பங்குக்கு இரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையுத்தரவுகளை விலக்கிக் கொண்டது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரிக் கும்பலும் ஏகாதிபத்திய போர்வெறியர்களும் இந்த ஒப்பந்தத்தை, அதன் தொடக்கந்தொட்டே எதிர்த்து வந்தனர். இரானில் அமெரிக்க அடிவருடி ஆட்சியைத் திணிக்க வேண்டுமே தவிர, அந்நாட்டிற்குச் சிறிய சலுகைகூடக் காட்டக்கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

டிரம்ப் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோதே இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென போர்வெறியைக் கக்கி வந்தார். அவர் அதிபராகி ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, இரானுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக் கொள்ளும் முடிவை அறிவித்ததோடு, இரானின் மீது மீண்டும் பொருளாதாரத் தடையுத்தரவுகளையும் திணித்தார்.

கூட்டுச் செயல்பாடுத் திட்ட ஒப்பந்தப்படி இரான் நடந்து வருவதாகச் சர்வதேச அணுசக்திக் கழகம் சான்றளித்திருப்பதை அதிபர் டிரம்ப் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகப் பழி போட்டு, தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறார். ஆனால், இதை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்துகூட ஒப்புக் கொள்ளவில்லை. இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் ஜப்பானும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையுத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.

இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க, இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு, அவ்வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள ஆறு மாதங்கள் அவகாசம் அளித்தது, அமெரிக்கா. இந்தக் கால அவகாசம் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்ததையடுத்து, இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முற்றிலுமாகத் தடை போட்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் வங்கித் துறை செயல்பாடுகள் மற்றும் உலோக ஏற்றுமதிக்கும் தடையுத்தரவை விரிவுபடுத்தியிருக்கிறது.

இரானைப் பொருளாதாரரீதியாக முடக்குவதன் மூலம், உள்நாட்டில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் கலகத்தையும் தூண்டிவிடுவது எனும் நோக்கில் இப்பொருளாதாரத் தடையுத்தரவைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா, இன்னொருபுறம், இரானை இராணுவரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் போர்விமானக் கப்பல் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் மேற்காசியப் பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறது. மேலும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாய்களையும் மேற்காசியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது.

இசுரேல் பிரச்சினை, இசுரேல் லெபனான் பிரச்சினை, இராக் மீது அமெரிக்கா நடத்திய போரால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சன்னி பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றால் உருக்குலைந்து போயிருக்கும் இராக்கின் பொருளாதார நிலை, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு அந்நாட்டில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், இவற்றுக்கு அப்பால் ஐ.எஸ். முசுலீம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என மேற்காசியப் பகுதியே நிரந்தரப் பதட்டத்திலும் போர் அபாயத்திலும் இருந்துவரும் நிலையில், இரானைக் குறிவைத்திருக்கிறது, அமெரிக்கா. இம்முடிவு எரியும் வீட்டின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிவிடும் முட்டாள்தனமும் திமிரும் இரண்டறக் கலந்தது.

படிக்க :
♦ ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உலகப் பொருளாதாரம் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீள வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையுத்தரவும், அமெரிக்காவின் போர் முன்னெடுப்புகளும் உலகப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் எச்சரித்தும்கூட அமெரிக்க அதிபர் டிரம்பும், ஏகாதிபத்திய போர்வெறி கொண்ட அவரது அமைச்சர்களும் எதையும் காதில்போட்டுக் கொள்ளவில்லை. யார் குடி கெட்டாலும் பரவாயில்லை, இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு வருகிறது, அமெரிக்கா.

ஒருபுறம், உள்நாட்டுப் பொருளாதார நலன்களைக் காப்பது என்ற பெயரில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துக்கொண்டே போகும் தேசிய வெறிக் கொள்கை; இன்னொருபுறம் தனது மேலாதிக்க நலன்களை விரிவாக்கிக் கொள்வதற்கு வெனிசுலா, இரான் மீது பொருளாதாரத் தடையுத்தரவுகளை விதிப்பது, எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிடுவது, போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடுவது என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார், அதிபர் டிரம்ப். அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதில் வெற்றி பெறுவதற்கும் டிரம்பிற்கு இந்தத் தேசிய வெறியும், மேலாதிக்க போர் வெறியும் தேவைப்படுகிறது.

இரான் அதிபர் ஹஸன் ரௌஹானி.

“கூட்டுச் செயல்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள், எதிர்வரும் 60 நாட்களுக்குள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காணவில்லையென்றால், அந்த ஒப்பந்தத்தின் சில விதிகளை அமல்படுத்த முடியாது என்றும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்துக்குப் பயன்பட்டு வரும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிடுவோம்” என்றும் இரான் அரசு எச்சரித்திருக்கிறது.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அது போலவே, ஜனநாயகத்தைக் கொண்டுவருவது, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா புகுந்த எந்தவொரு நாடும் அதன் பிறகு உருப்பட்டதில்லை.

எந்த தாலிபான்களை ஒழிப்பது என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்ததோ, இன்று அதே தாலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. லிபிய அதிபர் கடாஃபியைக் கொன்றுவிட்டு, அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த பிறகு அந்நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக, நாடே சுடுகாடாகிவிட்டது. லிபியாவில் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நுழைந்த பிறகுதான், ஐ.எஸ். முசுலீம் தீவிரவாத அமைப்பு உருவானது.

சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்டு நடத்திவரும் உள்நாட்டுப் போரால், அந்நாடே சீர்குலைந்து, இலட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஆப்கான், இராக், லிபியா ஆகியவை பழையதையும் இழந்து, புதிதாக எதுவொன்றையும் பெறாமால், திரிசங்கு நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டன.

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையுத்தரவை மீறி, அதனுடன் வர்த்தக உறவை மேற்கொள்வது குறித்துப் பேசிவரும் நிலையில், மோடி அரசோ இவ்விடயத்தில் நெடுஞ்சாண்கிடையாக அமெரிக்காவின் காலடியில் விழுந்துவிட்டது.

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதிக்குப் பிறகுதான் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவே சலுகை வழங்கியிருந்தாலும், மோடி அரசு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே இரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. அதற்கும் முன்பாகவே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. “இந்திய அமெரிக்கா உறவின் நலன் சார்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக” விளக்கம் அளித்திருக்கிறார், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்த்தன்.

இம்முடிவில் இந்தியாவின் நலன் எங்கே இருக்கிறது? இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனடியாகவே 2,500 கோடி ரூபாய்க்கு மேல் நட்டமேற்படும் எனச் செய்திகள் வெளிவருகின்றன. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வெறி தொடர்ந்து நீடித்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரித்து, அதன் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு) அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருவதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், அமெரிக்காவிற்குத் தப்பாமல் தாளம் போட்டுவருகிறார், மோடி.

பயங்கரவாதம் என்பது குண்டு வைப்பதும், கொலை செய்வதும் மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதும் பயங்கரவாதம்தான். அந்த வகையில் இரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடையுத்தரவு இரான் மீது மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதம் ஆகும்.

பாகிஸ்தான் ஏவிவிடும் முசுலீம் தீவிரவாதத்திற்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகப் பெருமை பேசிவரும் மோடி, அமெரிக்கா ஏவிவிட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறார்.

அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்தி, அதாவது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தித் தப்பித்துக் கொள்ளலாம் எனத் திட்டமிடுகிறது, மோடி அரசு. அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்தைத் தனது வர்க்கநலன் காரணமாக எதிர்த்து நிற்கத் துணிவில்லாத மோடி அரசு, அதிலிருந்து தப்பிக்க விலையேற்றம் என்ற சர்ஜிகல் ஸ்டிரைக்கை மக்கள் மீது ஏவும்.

குப்பன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க