ஈரான் நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று மிரட்டி வருகிறது அமெரிக்கா. இதையடுத்து அமெரிக்க மிரட்டலுக்குப் பணிந்து டிரம்ப்பின் காலில் விழுந்து சரணாகதி அடைந்திருக்கிறார் மோடி.
இந்திய எரிசக்தி ஆற்றல்துறை அமைச்சகம், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவரும் இந்திய கம்பெனிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 2018 -க்குப் பிறகு ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் படிப்படியாக அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறு கூறி, ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான மாற்று குறித்து இப்போதே திட்டமிடுமாறும் அக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து கூறும்போது ‘அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் இந்தியா இந்த முடிவை எடுக்கவில்லை; மாறாக ஐ.நா சபையின் வழிகாட்டுதலின்படியே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்கிறார். ஆனால் எண்ணெய் நிறுவனங்களோ, இது முழுக்க முழுக்க அமெரிக்க நிதி அமைப்பின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே எடுக்கப்பட்ட முடிவு இது என்கின்றன.
இதற்கு முன்னரும் ஈரானுக்கெதிராக இதே போன்ற ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கு மறுப்பு தெரிவித்து ஈரானிடமிருந்து இறக்குமதி செய்துகொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஓரணியில் இருந்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இறக்குமதியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
ஆனால் இன்றைய நிலையோ வேறு, இந்தியா சீனா ஐரோப்பா ஒருபுறத்திலும் அமெரிக்கா மறுபுறத்திலும் நின்று கொண்டிருக்கின்றன. எனவே என்ன நடக்குமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றன எண்ணெய் நிறுவன தொடர்பு அமைப்புக்கள்.
இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாஷிங்டனின் நிலைப்பாடு என்பது ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி முழுவதையும் வரும் நவம்பர் 2018-க்குள் எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே; பிரதமர் மோடியைச் சந்தித்த ஐநா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்” என்றார்.
ஈரான் மற்றும் ஆறு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையே 2015-ல் போடப்பட்ட டெஹ்ரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொள்வதாக அறிவித்ததன் பின்னணியை ஒட்டியே இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டுமென்று அழுத்தம் தரப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது ஆகஸ்டு 6-ம் தேதி முதல் இறக்குமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும், நவம்பர் 04, 2018 முதல் மீதமுள்ள மொத்த இறக்குமதி பொருட்களும் தடை செய்யப்பட்டுவிடும்.
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இவற்றில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மங்களூர் ரீஃபைனரீஸ் அண்டு பெட்ரோலியம் லிட் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவைதான் ஈரானிலிருந்து அதிகளவில் கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள். இந்த மூன்று நிறுவனங்களும் இந்தத் தடை குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சவுதி அரேபியா தன்னுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. ”சவுதி, குவைத், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்ய வாய்ப்புகள் உண்டு. எனினும் இந்த மாற்றத்திற்கு பொருளாதார மதிப்பு இருக்க வேண்டும்” என்கின்றனர் டில்லியைச் சேர்ந்த துறைசார்ந்த வல்லுனர்கள்.
சர்வதேச சந்தையிலிருந்து ஈரான் எண்ணெய் நிறுவனங்களை வரும் நவம்பர் மாதத்திற்குள் நீக்கும் அமெரிக்காவின் இந்த முடிவு வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்குரியதே என்கிறார் ஈரானிய பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர்.
ஈரான் இந்திய வர்த்தக தொடர்பு, குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் என்பது பல ஆண்டுகள் தொடர்கின்ற ஒன்று. இன்று இந்தியா அமெரிக்காவின் அடியாளாக மாறும் நிகழ்ச்சிப் போக்கு வேகமாக நடந்து வருகிறது. பா.ஜ.க மோடி அரசு பதவியேற்ற பின்பு அமெரிக்காவின் நேரடி அடிமையாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது.
– வினவு செய்திப் பிரிவு
மேலும் படிக்க :
India bows to US pressure. Prepares for cut in oil imports from iran