டெல்லி பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பாடத் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு சித்தாந்தம் மேலோங்கியிருப்பதாகக் கூறி பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யைச் சேர்ந்த குண்டர்கள் அத்துமீறி துணைவேந்தரின் இல்லம் அருகே போராட்டம் நடத்தியுள்ளனர். ஜூலை 16-ம் தேதி, பல்கலைக்கழக கல்வியாளர்கள், துணை வேந்தரின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தவிருந்த நிலையில், ஏபிவிபி குண்டர்படை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி அலுவல் குழுவின் உறுப்பினராகவும் ஆங்கிலத் துறை தலைவராகவும் உள்ள சைகட் கோஷ் பேச முனைந்தபோது, அலுவலகத்துக்கு வெளியே “ஆங்கில மற்றும் வரலாற்றுத் துறை தலைவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள்” என மாணவர்கள் போர்வையில் இருந்த குண்டர்கள் வெளிப்படையாக முழக்கம் எழுப்பியுள்ளனர்.

‘மணிபென் என்கிற பிஜிஜான்’ என்ற குஜராத் இனப்படுகொலையை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை ஆங்கில பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதே இவர்களின் வெறித்தனமான முழக்கங்களுக்குக் காரணம். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணி என்ற அமைப்பு இந்தச் சிறுகதை பஜ்ரங் தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை மோசமாகவும் அவர்களை கொலைகாரர்களாகவும் சித்தரிப்பதாக கூப்பாடு போடுகிறது.

இலக்கியமும் சாதியமும் என்ற தாளில் ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கம் இருப்பதாகவும், அதுபோல அரசியல் அறிவியல் பாடத்தில் மாவோயிசம் பற்றியும் சேர்த்திருப்பதாகவும் இவர்கள் கொதித்து போயிள்ளனர். சமூக அறிவியலில் வேத காலத்தைப் பற்றி இல்லை எனவும் புலம்புகின்றனர்.

“இந்த உள்ளடக்கம் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசியத்துக்கு எதிராக உள்ளன. ஆங்கிலத் துறை தலைவர் நிச்சயம் பதவி விலக வேண்டும்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கல்விக்குழு உறுப்பினர் ஒருவர். இடதுசாரி சித்தாந்தத்தை ‘திணிக்க’ முயற்சிப்பதாகவும் இவர் குறைபட்டுக்கொள்கிறார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்களுக்குக்கூட துணை வேந்தர் அலுவலகத்தில் நுழைய ஏக கெடுபிடி உள்ள நிலையில், ஏபிவிபி குண்டர்கள் நுழைந்து முற்றுகையிட்டுள்ளது எப்படி என பேராசிரியர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம், ஏபிவிபி குண்டர்படையை ஆதரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ள நந்திதா நரேன், “மூன்றாம் பாலினர் குறித்த பாடத்துக்கு தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணி எதிர்ப்பு தெரிவிப்பது, உச்சநீதிமன்றத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதோடு, அவர்களுடைய பிற்போக்கு மனநிலையைக் காட்டுகிறது” என்கிறார்.

இப்போது மட்டுமல்ல, பல சமயங்களில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இந்துத்துவ பொய்களை கேள்வி கேட்கும் படைப்புகள் பாடத்திட்டமாக வைக்கப்படும்போதெல்லாம், ஏபிவிபி குண்டர்படை பிரச்சினையை கிளப்புவது வாடிக்கையாகிவருகிறது.

2008-ம் ஆண்டு ஏ.கே. ராமானுஜம் எழுதிய பல ராமாயணக் கதைகள் குறித்த “Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts” என்ற கட்டுரை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இரண்டு வருடங்கள் கழித்து கல்வி ஆய்வுக்குழு அந்தக் கட்டுரையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது. மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டுரை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்கூட, இன்று அக்கட்டுரை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

அதுபோல, கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு, இரண்டு நூல்களை ‘மாணவர்கள் படிக்க உகந்ததில்லை’ எனக்கூறி பாடத்திலிருந்து நீக்கியது. சமூகவியலாளர் நந்தினி சுந்தர் எழுதிய “Subalterns and Sovereigns: An Anthropological History of Bastar”, ஜேஎன்யூ பல்கலை பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் எழுதிய “Against Ecological Romanticism: Verrier Elwin and the Making of an Anti-modern Tribal Identity” ஆகிய இரண்டு நூல்களும் நீக்கப்பட்டன.

2017-ம் ஆண்டும் நந்தினி சுந்தர் எழுதிய “The Burning Forest: India’s War in Bastar” என்ற நூல் சமூகவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆசிரியர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 2010-ம் ஆண்டு பெரியாரின் ‘சச்சி ராமாயணன்’  நூலும் வரலாறு பாடத்திலிருந்து நீக்கப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கட்டுரையாளர் அபூர்வானந்த், “இவர்கள் நடத்தவிரும்புவது கல்வி குறித்த விவாதத்தை அல்ல; அது ஒரு சித்தாந்தத்தின் ஆதிக்கம் குறித்தது. அவர்களுக்கு நக்சல்பாரி, சாதி, மூன்றாம் பாலினர் ஆகியவற்றைத் தொடக்கூடாது. இவை மாணவர்களின் மனதை கெடுத்துவிடும் என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் அறிவுள்ளவர்கள், தங்களுக்கு எது வேண்டும் என்கிற முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்கிறார்.

“ஏபிவிபி குண்டர்கள் நாங்கள் எதைப் படிக்க வேண்டும் என ஆணையிட முடியாது. சாதி பற்றியும் மூன்றாம் பாலினம், குஜராத் கலவரம் பற்றியும் நாங்கள் படிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? மாணவர்கள் உண்மையை அறிவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உண்மையில் மிரட்டி பணிய வைக்கப்பார்க்கிறார்கள்” என்கிறார் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கவல்ப்ரீத் கவுர்.

ஏபிவிபி கொடுத்த அழுத்தம் காரணமாக ஆங்கில மற்றும் வரலாறு பாடங்கள் மீண்டும் மதிப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. காவிகள் ஒவ்வொரு இடத்திலும் உண்மையைத் துடைத்தெறியும் பணியில் தீவிரமாகவே உள்ளனர்.


கலைமதி
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க