குஜராத்தின் பானாச்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 12 கிராமங்களில் உள்ள தாகோர் சாதினர், சாதி கலப்பு திருமணங்களுக்குத் தடை விதித்தும், திருமணமாகாத பெண்கள் மொபைல் போனைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் சமீப காலமாக அதிக அளவிலான சாதி கலப்புத் திருமணங்கள் நடந்துவருவதால், ‘சாதித் தூய்மை’யைப் பாதுகாக்கும் பொருட்டு தாகோர் சாதியினர் இந்தத் தடையை கொண்டு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘சாதித் தூய்மை’யை பாதுகாக்கத் தவறிய குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும். தாகோர் சாதியைச் சேர்ந்த ஆண், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அபராதமாக ரூ. 2 லட்சத்தை செலுத்த வேண்டும்.
கடந்த ஜூலை 14-ம் தேதி, 12 கிராமங்களைச் சேர்ந்த தாகோர் சாதியினர், 800 தாகோர் சாதி தலைவர்கள் ஜெகோல் என்ற கிராமத்தில் கூடினர். அப்போது ஒன்பது தீர்மானங்கள் இயற்றப்பட்டு, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். யாரேனும் இந்த ஒன்பது தீர்மானங்களை மீறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அச்சாதித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
திருமணமாகாத பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாதியவாதிகள் கூறியுள்ளனர்.
இத்தகைய சாதிய பிற்போக்குத்தனங்களை பாஜக ஆதரிக்கும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், தாகோர் சாதியினரின் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெனிபென் நகாஜி. சாதி அமைப்பின் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர், ‘இதுபோன்ற சம்பவங்களை தீர்மானங்கள் தடுக்கும்’ என்கிறார்.
படிக்க:
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
♦ நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !
“தங்கள் மகள், வேறு சாதியைச் சேர்ந்த பையனுடன் ஓடிப்போய்விட்டதாக பெற்றோரிடமிருந்து தினமும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதுமட்டுமல்லாது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 இளைஞர்கள், இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” எனவும் ஜெனிபென் சாதி தீர்மானங்களை ஆதரிப்பதற்கு காரணம் சொல்கிறார்.
பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால் எப்படி இது தடுக்கப்படும் என்கிற கேள்விக்கு, “பெண்கள் பெற்றோருடன் இருக்க கட்டுப்படுத்தி வைக்கப்பட்டால், அது தானாகவே ஆண்களைக் கட்டுப்படுத்திவிடும். எனவே, பெண்களை மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பது சரியே” என்கிறார் அவர்.
ஆக மொத்தத்தில், பிற்போக்கு சாதி அமைப்புகளை வளர்த்தெடுப்பதில், ஆதரிப்பதில் பாஜகவுக்கு இணையாக காங்கிரசும் உள்ளது. சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகக் சொன்னாலும், இந்துத்துவம் ஊடுருவியுள்ள இடங்களில் சாதியின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
காங்கிரஸ் பஜக ஒன்று என்று வினவு எழுதி இருப்பது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது