ரேஷன் கார்டு மரணங்கள்

ன்று வெளியாகியிருக்கும் ஆங்கில இந்து நாளிதழில் (ஜூலை 13) ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. Death by digital exclusion? என்ற தலைப்பில் வெளியாகிருக்கும் இந்தக் கட்டுரை இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில், ஆதார் கணக்குடன் ரேஷன் கார்டுகளை இணைக்காதது, Point of Sales எந்திரங்கள் இயங்க இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் பொருட்களை விநியோகம் செய்ய முடியாதது ஆகிய காரணங்களால், பழங்குடியின மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை. இதனால், அந்த மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன என்கிறது கட்டுரை. 

‘ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் இங்கே ரேஷன் கார்டு வாங்கினால், இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் போய் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்களே, அவர்களுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்கிறது. வட மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாதபோது, எப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி.

பிஹாரிலிருந்து 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது பாஜக-வின் ரகுபர்தாஸ் முதல்வராக இருக்கிறார். மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலும்; 2010-லிருந்து 2013 வரையிலும்; 2014-லில் இருந்து தற்போது வரையிலும் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நடுநடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் இருந்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் சோதனை தற்போது இந்த மாநிலத்தில் நடந்துவருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, உணவு தானியம் கிடைக்காமல் பட்டினியால் 2017 செப்டம்பரிலிருந்து 2019 ஜூன் வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாகச் செத்தவர் லடேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முண்டா. இவர் கிராமத்திற்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்களே வரவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க பல விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பிறகு ஆதார் அட்டை இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டையும் இணைக்க வேண்டும். இங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம்தான் விற்பனை நடக்கிறது. அது இயங்க இன்டர்நெட் வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

சில இடங்களில் ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வந்துவிடும். ஆனால், இன்டர்நெட் இல்லாததால் பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை.

படிக்க :
♦ கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

இதற்கு நடுவில் அதிகாரிகள் இடும் பல உத்தரவுகள், நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. 2017-ல் தலைமைச் செயலராக இருந்த ராஜ்பாலா வர்மா, ஆதாருடன் இணைக்காத ரேஷன் கார்டுகளை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இது மிகப் பெரிய அளவில் பயனாளிகளை பொதுவிநியோகப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைவிட இன்னொரு கொடுமை நடந்தது. சத்தர்பூரில் இருந்த துணை வட்டாட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதன்படி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்தை வந்து எடுக்க ஒரு நாளும் பொருட்களை வாங்க ஒரு நாளும் ஆனதால், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்தத் திட்டம் இப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மோசமாக செயல்படுத்தப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
இதுவரை பட்டினியால் இறந்துபோன 20 பேரில் 11 பேர் ஆதிவாசிகள். 4 பேர் தலித்துகள். 11 பேர் பெண்கள். 13 பேர் ஆதார் கணக்கை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் இறந்துபோனவர்கள்.

கட்டுரைக்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. படித்துப் பாருங்கள் பல விஷயங்கள் புலப்படும்.

Death by digital exclusion? : on faulty public distribution system in Jharkhand

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க