ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !

ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

0
ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 10 ஞயிற்றுக்கிழமை அன்று இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தியதால் நான்கு மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைகள் பதிவாகியுள்ளன.
மத்திய குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பத் நகரத்திலும் வடக்கு குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரிலும் வன்முறைகள் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10 அன்று மாலை, ஆனந்த் நகரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசு தெரிவித்துள்ளது. இரு நகரங்களிலும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
படிக்க :
♦ அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சப்பாரியா பகுதியில் ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியதாக கூறப்படுகிறது. வன்முறை செய்திகளுக்குப் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.
குஜராத், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது மோதல் வெடித்தது.
அகமதாபாத்தைச் சேர்ந்த உரிமைகள் அமைப்பான சிறுபான்மை ஒருங்கிணைப்புக் குழுப் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குஜராத் போலீசுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
“குஜராத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மத நிகழ்ச்சிகளை நடத்தும் சமூக விரோதிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிம்மத் நகரில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சரிபார்த்து அனுமதியின்றி ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
***
ராம நவமி ஊர்வலத்தின் போது கல்வீச்சு மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தின் கார்கோனின் மூன்று பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்கோன் மாவட்ட ஆட்சியர் அனுக்ரா பி, “நகரில் உள்ள தலாப் சௌக் மற்றும் தாவடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார், கற்களை வீசியதைத் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
“ராம நவமி ஊர்வலம் தலாப் சௌக் பகுதியில் இருந்து தொடங்கியபோது, ​​கூட்டம் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஊர்வலம் கார்கோன் நகரை ஒரு சுற்று சுற்றி வரவிருந்தது, ஆனால் வன்முறைக்குப் பிறகு அது நடுவழியில் கைவிடப்பட்டது,” என்று கூடுதல் கலெக்டர் எஸ்.எஸ். முஜால்டே தெரிவித்துள்ளார்.
இங்கும், ஒலிபெருக்கியில் மத இசையை இசைத்தபடி, முஸ்லீம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி வழியாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. நான்கு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் ஒரு கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள பர்வானி மாவட்டத்திலும் மோதல்கள் பதிவாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஹிம்மத்நகரில் ராம் நவ்மி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதலுக்குப் பிறகு தளத்தின் காட்சி
பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரத்திற்கு முன்னதாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேச்சுக்களை பேசியதாகக் கூறப்படும் கபில் மிஸ்ரா, கர்கோனில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை கொண்டு, “மூசா அல்ல, புர்ஹான் அல்ல, ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் மட்டுமே” என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
***
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவின் ஷிப்பூர் பகுதியில் ராம் நவமி ஊர்வலத்தின்போது மோதல்கள் பதிவாகியுள்ளன. ஊர்வலத்தின்மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கூறுகிறது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் போலீசு கேட்டுக்கொண்டுள்ளது.
படிக்க :
ஜே.என்.யு. துணைவேந்தராக மற்றுமொரு சங்கி – சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் !
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகாவில் ராம் நவமி ஊர்வலத்தின்போது கல் வீசப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு பலத்த போலீசு பாதுகாப்பு போடப்பட்டது.
ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் காவேரி விடுதில் அசைவம் சமைக்கவும் சாப்பிடவும் கூடாது என்று ஏபிவிபி குண்டர்கள் கூறியதும், மாணவர்கள் மீது தாக்குதல் கொடுத்ததும் இந்த ராம் நவமியை காரணமாக வைத்துத்தான். பிள்ளையார் ஊர்வலம், ரதயாத்திரை போன்றவற்றின் மூலம் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் காவி பாசிச அமைப்புகள் தற்போது ராம் நவமியை பயன்படுத்தி வடஇந்தியாவின் நான்கு மாநிலங்களில் கலவரங்களை நிகழ்த்தியுள்ளது.

காளி
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க