ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 2

ஜே.என்.யூ. பரிசோதனையாக முன்னெடுத்த பல்வேறு சனநாயகக் கூறுகள் முழுவதுமாக வெற்றி கண்டுள்ளன என்று கூறமுடியாது. குறிப்பாகச் சாதி, பால் சார்ந்த குற்றச்சாட்டுகள் அவ்வப்பொழுது எழுந்து அடங்கும். ஆனால், பெண்ணுரிமை அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் அமைப்புகள் இங்கு வலுப்பெற்று வழிப்புணர்வோடு இருப்பதும், பொதுவாக அனைத்துதர சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இதுபோன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதும் உரிமைமீறலுக்கான வாய்ப்புக்களை மிகவும் கட்டுப்படுத்தியுள்ளது எனக்கூறலாம்.

இத்தகைய பரிசோதனைகளுக்குக் கடந்த 50 வருடங்களாகத் தொடர்ந்து ஏதோவொரு வகையில் முட்டுக்கட்டைகளும், தொந்தரவுகளும்  வந்தவண்ணம் இருக்கத்தான் செய்தன. ஆனால், மாணவ – ஆசிரியர் போராட்டங்கள் இவற்றைத் துணிச்சலாக எதிர்த்து ஜே.என்.யூ மாண்புகளை பேணிக்காத்தன. அண்மையில், வலதுசாரிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைபெற்று ஆட்சியைப் கைப்பற்றியபோது ஜே.என்.யூ மீதான தாக்குதல்கள் பல்கிப் பெருகின. இதுவரை எவை.. எவை சனநாயக மாண்புகள், சமத்துவச் சமூகத்தை வென்றெடுப்பதற்கான முன்மாதிரிகள் எனப் போற்றிக் பாதுகாக்கப்பட்டனவோ, அவற்றைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் வலுப்பெற்றன.

இது வெறும் அரசியல் குறுக்கீடு அல்ல. அரசு ஆதரவுபெற்ற, அல்லது அரசுக்குப் பயந்த தொலைக்காட்சிகள், இந்துத்துவா வெறிகொண்ட அரசியல்வாதிகள், பெண் விடுதலைக்கு எதிர்ப்பானோர், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானோர், பொதுக் கல்வியை ஒழித்துக்கட்ட விரும்பிய பணக்கார வர்க்கத்தினர் எனப்  பலதரப்பினரிடமிருந்தும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

குறிப்பாக, இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர். ஜே.என்.யூவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒரு ஓய்வுபெற்ற பெரியமீசை கொண்ட இராணுவ ஜெனரல், ‘இன்று நாம் ஜே.என்.யூ-வைக் கைப்பற்றிவிட்டோம்’ என்று ஒரு எதிரி நாட்டைக் கைப்பற்றிவிட்டது போல், பெருமிதம் கொண்டார்.

இராணுவப் பீரங்கிகள் இங்கு நிறுத்தப்பட வேண்டுமென்றனர். ஒருவர் ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்றார். மற்றொருவர் ஜே.என்.யூ-வில் ஒருநாளைக்கு எத்தனை உடலுறவு உறைகள் பயன்படுத்தப்படுகின்றன என புள்ளிவிபரம் கொடுத்தார். ஜே.என்.யூ பெண்களை விலைமாதர் என்றனர். ஆண்கள் தேசத்துரோகிகள் ஆனார்கள். சிலநாட்களுக்கு முன்பு பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி ஜே.என்.யூ-வை இரண்டு வருடங்களுக்கு மூடிவிட்டு மீண்டும் சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றித் திறக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு அடிபணிந்து நடக்கும் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்து ஜே.என்.யூ-வின் அடிப்படை விதிகளை, நடைமுறைகளை மாற்றி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பான போராட்டங்களே தற்போதைய மாணவர் புரட்சியின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

தொடர் அத்துமீறல்கள், அடக்குமுறைகள்

ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்று கூறியவர்கள் அதை நிறைவேற்றத் துரிதமாய்ச் செயல்பட்டனர். துணைவேந்தர் தனக்குச் சாதகமானவர்களை அனைத்து உயர் பதவியிலும் நியமித்தார். மரபுகளை மீறி துறைத் தலைவர்கள், டீன்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கல்விக்குழு (academic council) உறுப்பினர்களாக இருப்போர். இவற்றையும் மீறி கல்விக்குழு கூட்டங்கள் சரியாக முறைப்படி நடைபெறவில்லை. விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. இதைவிட, கல்விக்குழு கூட்டங்களில் பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

மேலும், கல்விக் குழுவால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டன. மறுப்பு தெரிவித்தோருக்கு சரியான பதில் இல்லை. இதுபோல தான் ஒவ்வொரு குழுக் கூட்டமும் இதுவரை நடைபெற்றன. இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவானவர்கள் நிர்வாக குழு (Executive council) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு கல்விக் குழுவால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட மசோதாக்கள் நிர்வாகக் குழுவால் எவ்வித விவாதமும், எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

முதுகெலும்பை உடைக்கும் கடைசி முயற்சியாக வெவ்வேறு குழுக் கூட்டங்களில் மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்ததோடு, நாளடைவில் மாணவர் அமைப்புக்கே அங்கீகாரம் மறுக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே வலதுசாரிகளுக்கு ஆதரவான மாணவர்களின் அமைப்புகளுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் கொடுத்து மாணவர் அமைப்பு தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஒவ்வொரு தேர்தலிலும் சனநாயக அமைப்பை சேர்ந்த கட்சிகள் பெருவாரியான வாக்குகளைப்பெற்று மாணவர் அமைப்பின் அனைத்துப் பதவிகளையும் தக்கவைத்துக்கொண்டன. பின் சனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலுக்குப் பல இன்னல்களைக் கொடுப்பதும் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை அங்கீகரிக்காததும் தொடர்ந்தன. ஒவ்வொரு முறையும் மாணவர்கள் நீதிமன்றம் சென்று தமக்கு ஆதரவாகத் தீர்ப்பு பெறவேண்டியிருந்தது.

இவ்வாறாக, படிப்படியாகப் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வி காலண்டர் மாற்றி அமைத்தல், எம்.பில்-பி.எச்.டி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்தல், வருகைப் பதிவு முறையைக் கொண்டுவருதல்,  மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல், மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பான GSCASH-ஐ அழித்தல், நிர்வாகத்திற்கு உடந்தையாக இருப்போரை பல்வேறு பதவிகளில் நியமித்தல்,  நியாயமாகப் போராடிய ஆசிரியர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல், புதிய ஆசிரியர் தேர்வுக் குழுக்களில் சரியான முறையைப் பின்பற்றாமல் தகுதி இல்லாத உறுப்பினர்களை நியமித்து அனைத்து விதிகளையும் இருட்டடித்து, தகுதி இல்லாத, இந்துத்துவாவிற்கு ஆதரவான ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வு நடத்துவதைத் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தல், இணையம் மூலம் நுழைவுத்தேர்வு,  நூல் நிலையத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமான அளவில் குறைத்தல், உலகெங்கும் BE மற்றும் MBA படிப்புகள் மூடப்பட்டுவரும் நிலையில், இந்த படிப்புகளுக்கான புதிய மையங்களை ஜே.என்.யூ-வில் தோற்றுவித்தல், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குத் தடை, தாபாக்களின் திறப்பு நேரங்கள் குறைப்பு, பொதுக் கூட்டங்களுக்குத் தடை,  என ஒவ்வொன்றாக பல்வேறு புதிய விதிகள் எந்தவித விவாதமும் இன்றி அமல்படுத்தப்பட்டன. பொதுவாக முடிவுகளை வெளியில் இருப்போர் எடுப்பதும், அந்த முடிவுகள் துனைவேந்தர் வழியாக அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு குழுவிலும் நிறைவேற்றப்பட்டது எனக் காட்டுவதும் மரபாகிப்போனது.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

கல்விக்கட்டணம் விடுதி விதிகளில் மாற்றம்

இந்தச் சூழ்நிலையில்தான் கல்விக்கட்டண உயர்வு மற்றும் ஆடைநெறிமுறைகள் உட்பட விடுதி விதிகளில் மாற்றம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. பொதுவாக இதுபோன்ற மாற்றங்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு, அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற்றுத்தான் அமல்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகளுடன், விடுதி காப்பாளர்கள், விடுதி மாணவர் தலைவர்கள் எனப் பலபேர் கொண்ட குழு இவற்றைப் பற்றி விவாதித்து, பின் இவை பல்கலைக்கழகக் கல்விக்குழு மற்றும் நிர்வாகக் குழுக்களின் ஒப்புதல் மூலமாகத்தான் நிறைவேற்றப்பட முடியும். ஆனால், இம்முடிவு இவ்வழிமுறைகளிள் பலவற்றைப் பின்பற்றாமலேயே அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இது தொடர்பான கூட்டங்களுக்கு அழைக்காதது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜே.என்.யூ ஒரு குடியிருப்புப் பல்கலைக்கழகம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். பொதுவாக மாணவர்கள் இரண்டு வகையான கட்டணங்களைச் செலுத்துவர் – ஒன்று கல்விக் கட்டணம் மற்றொன்று மாதாந்திர உணவுக் கட்டணம் உட்பட ஏனைய விடுதிக் கட்டணங்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொதுக்கல்வி என்ற நோக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் கடந்த பல வருடங்களாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் விடுதிக் கட்டணங்கள் அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படும்.

விடுதி கட்டண உயர்வு மற்றும் தனியார்மயமாக்கப்படும் கல்வி ! இவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஜே.என்.யூ மாணவர்கள் (கோப்புப் படம்)

தற்போது திருத்தப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டபோது, மாணவர்கள் ஏறக்குறைய மாதம் 3000 ரூபாய் கட்டணங்களுக்கு செலவழிக்கவேண்டியிருந்தது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது 6000 முதல் 9000 வரை உயரக்கூடும். இது ஏற்படுமானால், நாட்டின் ஒட்டுமொத்த மத்தியப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது, ஜே.என்.யூ அதிக கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகமாக மாறும் என மதிப்பிடப்படுகின்றது.

வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இக்கட்டணங்கள் பெரும் சுமையாக இருக்காது என்ற போதிலும், 60 சதவிதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் – இவர்களில் 40 சதவீதம் மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் – இக்கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்நிலை தொடர்ந்தால், ஜே.என்.யூ நாளடைவில் மாணவர்களின் கட்டணத்தால் செயல்படும் பல்கலைக்கழகமாக; ஒரு தனியார் பல்கலைக்கழகம் போன்று மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இந்தியர் அனைவருக்கும் பொதுக்கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கல்வி என்பதே ஜே.என்.யூ சமூகத்தினரின் கோரிக்கையாக இதன் தொடக்கத்திலிருந்தே இருந்துவந்தது. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வரைந்த புதிய கல்விக் கொள்கையை அரசு அறிவித்தபோது, எங்கும் இல்லாத அள‍வில் ஜே.என்.யூ மாணவர்கள், இதற்கு எதிர்ப்பாக பெரும் போராட்டத்தை முன்வைத்தார்கள்.  கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிரான குரலாக ஜே.என்.யூ மாணவர்கள் தொடர்ந்து இருந்திருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு பிரசித்தமான, உள்ளடக்கிய பொதுப் பல்கலைக் கழகம் என்ற நிலையிலிருந்து ஜே.என்.யூவே மாறப்போகும் ஆபத்தை உணர்ந்தபோது மாணவர்களின் போராட்டம் அதீத தீவிரம் அடைந்தது.

டிவிட்டரில் உரையாடும் துணைவேந்தர்

பல்கலைக்கழக வளாகத்திற்குள் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் என மிகவும் அமைதியாகப் போராடிவந்த மாணவர்களைப் பல்கலைகழக நிர்வாகம் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததோடு அவர்கள்மீது பல்வேறு அடக்குமுறைகளைத் தூண்டிவிட்டது மாணவர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.  துணைவேந்தரைச் சந்திக்க அனுமதி கேட்கப்படும் விண்ணப்பங்கள் பொதுவாக நிராகரிக்கப்பட்டன. மாணவப்பிரதிநிதிகளோ, அல்லது ஆசிரியர்களின் பிரதிநிதிகளோ துணைவேந்தரை சந்திக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பொதுவாக, ஆசிரியர்கள், துணைவேந்தர், மாணவர்கள், பணியாளர்கள் எனப் பெரிதான வேறுபாடு கண்டிராத ஜே.என்.யூ சமூகத்திற்கு இவ்வகையான புதிய நடப்புகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்தன.  கடந்த சில ஆண்டுகள்வரை, மாணவர்கள் துணைவேந்தரை வளாக அங்காடிகளில் காண நேரிடும்.

வணக்கங்களைப் பரிமாறிக்கொள்வர். எவ்வளவு எதிர்ப்புக்கும் எந்தவொரு துணைவேந்தரும் மாணவர்களைச் சந்திக்க மறுத்தது கிடையாது, சில துணைவேந்தர்கள் மாணவர்களுடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள். ஆனால் வலதுசாரிகளால் புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் துணைவேந்தரோ இதற்கெல்லாம் மாறாகத் தாம் ஒரு சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியெனத் தன் முடிவுக்கு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்பது போன்றதொரு மனப்பான்மையுடன் செயலாற்றினார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் இந்தத் துணைவேந்தரை கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை நேரடியாக சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர் பொதுவாக டிவிட்டர் மூலம் தன் கருத்தை, உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட கருத்தை, அனுப்புவார். அல்லது, தன் கீழ் உள்ள அதிகாரிகள் மூலம்  நோட்டிஸ் அனுப்புவார். இதைத் தவிர்த்து நேரடியான உரையாடலில் இதுவரை இவர் ஈடுபட்டதில்லை.

விரைவில் அடுத்த பகுதி : பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்

(தொடரும்)

தொடரின் முந்தைய பாகம் :

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க