சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி !

வகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வுக்கான போராட்டம் 40 நாட்களைக் கடந்த நிலையில், ‘சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி′  என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வியாபித்து வருகின்றன. உண்மையில் இது ஒரு புரட்சிதான்.

கல்வியை வியபாரமாக, சந்தையில் வாங்கும் பொருளெனக் கருதி பொதுக்கல்வியின் உண்மையான சமூகப் பங்களிப்பை, தேவையை உள்வாங்காதிருக்கும் நம்மில் பலருக்கு இது ஒரு தேவையற்ற சச்சரவாக, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் செயல்பாடாகத் தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் சமூக மாற்றம், முன்னேற்றம், பண்பட்ட சமூக வாழ்வு போன்றவற்றை வென்றெடுப்பதற்கு ஒரு தரமான, அனைவரையும் உள்ளடக்கிய, எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, குறைந்த செலவிலான, ஒரு பொதுக் கல்விமுறையை உறுதிப்படுத்த ஆதாரத் தளமாக இருக்கின்றது என்று கருதுவோர்க்கு இப்போராட்டத்தின் தேவையும் தீவிரமும் எளிதில் விளங்கும்.

கருத்துச் சுதந்திரத்திற்கான வெளி வேகமாகச் சுருங்கி, தனிநபர்களும், சமூக சிந்தைகொண்ட ஊடகங்களும், அரசு நிறுவனங்களும், தன்னாட்சி அமைப்புகளும் அடக்குமுறையாலும், பயத்தின் கோரப் பிடியிலும் சிக்குண்டு கசங்கிய காகிதமாய் உருமாறி வலுவிழந்திருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் அவர்களது புரட்சியின் ஊடாக ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தைக் கொண்டுவந்து நாம் கடக்க வேண்டிய பாதைக்கு வழிகாட்டுகின்றார்கள்.

புரட்சியின் வெவ்வேறு வடிவங்கள் :

மாணவர்களின் கலைத்துவம் வாய்ந்த இந்தப் புரட்சியின் வெவ்வேறு நிலைகளை, வடிவங்களை, பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒருசில விடயங்களைத் தெளிவுப் படுத்தவேண்டும். ஒன்று இந்த போராட்டம் வெறும் கல்விக் கட்டண உயர்வு, விடுதி விதிகளிள் மாற்றம் இவற்றிற்கு எதிர்பாகத் திடீரென எழுந்த போராட்டம் அன்று.

மாறாக, கடந்த 50 ஆண்டுகளாக ஜே.என்.யு உள்வாங்கிச் செயல்பட்ட சில மதிப்புகள், சனநாயக விழுமியங்கள், நடைமுறைகள் இவற்றுக்கு எதிராக அவற்றை அழித்தொழிக்க விரும்பும் சில ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அத்துமீறிய வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகத் திரண்டெழுந்த போராட்டம்.

மற்றொன்று, இதுவெறும் ஜேஎன்யு மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காகப் போராடும் போராட்டம் அன்று. மாறாக, உயர்கல்வியை கனவாய்க் கொண்டிருக்கும் அனைத்து இந்தியப் பொதுக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குமானது. கல்விக் கட்டண உயர்வால் உயர்கல்வி வாய்ப்பை இழந்திருக்கும் அல்லது இழக்கப் போகும் ஒவ்வொரு இந்திய மாணவர்களுக்குமானது. மேலும், கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதலுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு, நலிவடைந்தோருக்கு இருந்த சிறிதளவிலான வாய்ப்பையும் அழித்தொழிக்க விழையும் முயற்சிகளுக்கு எதிரானது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் என்பது ஒரு புதிய செய்தி அல்ல. இங்கு மாணவர்கள் போராட்டம் அவ்வப்போது வெடித்து அடங்கும். இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் தலைமுறை மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால், 1970 -களில் இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையைப் பிரகடணப்படுத்தியப்போது, மக்களாட்சியை மீட்டெடுக்கும் பொருட்டு இப்பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகம் பல மாதங்கள் மூடப்பட்டதும் போராடிய மாணவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் நெகிழ்ந்து பேசுவார்கள்.

இந்திராகாந்தி, மொராஜி தேசாய், மன்மோகன்சிங் போன்ற இந்தியப் பிரதமர்கள் ஜேஎன்யூ மாணவர் போராட்டங்களை நேரில் எதிர்கொண்டவர்கள். மொரார்ஜி தேசாய் காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான பரிந்துரையும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1970 அவசரகாலநிலை போராட்டங்களுக்குப் பிறகு குறிப்பிடும்படியான போராட்டம் என்றால் அது கடந்த 40 நாட்களாக நடைபெறும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிரான மணவர்களின் சனநாயகப் புரட்சிதான்.

படிக்க:
ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !
♦ என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

தொடக்கத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெவ்வேறு வடிவங்களில் தம் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்கள் போராட்டம், பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது, போராடிய மாணவர்களுக்கு வெவ்வேறு வகைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியபோது, வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையின் அடக்குமுறையின்போதும், கார்ப்பரேட் ஊடகங்கள் போரட்டத்தின் நோக்கத்தைத் திரித்து மாணவர்களின் கோபத்தை தூண்டியபோதும், பல ஆயிரம் மாணவர்கள் எவ்வித வன்முறையும் இன்றி, அமைதியாய், தனக்கே உரித்தான கலைநயம் மிகுந்த கோசங்களுடனும், வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடனும் தில்லி சாலைகளில் நடந்து சென்றது மக்களின் கவனத்தைக் கவர்ந்திழுத்தது. மாணவர்களுக்கு ஆதரவான, எதிர்ப்பான விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து  நிகழ்ந்தன.

ஜே.என்.யூ சுவர்களும் கூட அரசியல் பேசும்

இதுபோல், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளும் ஒரு தேர்ந்த சனநாயக நெறியிலான போராட்டங்களையே முன்வைத்தனர். கேலிச் சித்திரங்களை வைத்தல், கவிதை வாசிப்பு, பாடல், புத்தகம் வாசித்தல், அறிவுஜீவிகளையும் களப்பணியாளர்களையும் கொண்ட பொதுக்கூட்டங்கள், ‘சுதந்திர சதுக்கத்தை′ மாணவர்கள் தங்களின் போராட்டக் களமாக பயன்படுத்துவதற்கு எதிரான தடையை மீறுதல், பல்கலைக் கழகக் கல்விக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் இக்குழுக்களின் உறுப்பினர்களுக்குத் தம் கோரிக்கையை எடுத்துச் செல்லும் வகையில் போராடுதல் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுதல், பத்திரிகைகளில் எழுதுதல் என வெவ்வேறு வடிவங்களில் தம் உணர்வை வெளிப்படுத்தினர்.

முக்கியமாக, போராட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத அறிவியல் துறை மாணவர்கள், சமூக அறிவியல் மற்றும் மொழியியல் துறையைச் சார்ந்த மாணவர்களுடன் இணைந்து இப்போராட்டங்களில் பங்குகொண்டது கவனிக்க வேண்டியதாக இருந்தது. வகுப்பறைகளைவிட, புரட்சியின்போதே சமூகத்தையும் அரசியலையும், அரசின் அதுபோன்று ஊடகங்களின் வன்முறையைப் பற்றியுமான புரிதல் மாணவர்களுக்கு எளிதாகச் சென்றடைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் பல்கலைக் கழகம் என்ற பெருங்கனவு !

வேறு எந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இல்லாத அக்கறை, கொதிப்பு, போராட்ட உணர்வு எதற்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு மட்டும் ஏற்படவேண்டும்? ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் இதைப்பற்றி விவாதித்தன. அரசின் கைக்கூலியாக மாறிப்போன பல்வேறு தொலைக்காட்சிகள் ஜே.என்.யு.-வை தேசத்துரோகிகளின் இருப்பிடமாகச் சித்தரித்ததுடன், எதிர்ப்புச் சிந்தனை என்பது ஜேஎன்யுவின் டிஎன்ஏ-வில் ஊறிக்கிடப்பது என்றும் இவர்கள் எதையும் எதிர்த்தே பழக்கப்பட்டவர்கள் என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றும் வெவ்வேறு தவறான திரிக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பெரும்பாடுபட்டன.

உண்மையில், சனநாயக நெறிகளை வென்றெடுக்கவேண்டும் என்ற இந்தச் சிந்தனை, போராட்ட உணர்வு ஜேஎன்யு சமூகத்தினருக்கு எவ்வாறு இயல்பாக இருக்கின்றது என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழக்கூடியதுதான்.  எங்கிருந்து வருகின்றது இது? இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?  இதற்கான பதில்கள் ஜேஎன்யு மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது இதில் ஈடுபட்டோர் முன்வைத்த வாதங்களை வாசித்தால் தெரியவரும்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

கல்வியறிவு பெற்றோரும், சமூகச் சிந்தனை உடைய அரசியல்வாதிகளும் அதிகளவில் இடம்பெற்றிருந்த அப்போதைய பாராளுமன்றம், ஜேஎன்யு ஒரு பிரசித்தமான, தனித்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என்றே எதிர்பார்த்தது. புதிய சிந்தனைகளை வென்றெடுக்கும் வெளியாக, அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்களது கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தது.

சுதந்திரமான, நேர்மையான, அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு ஏதுவாக அரசின் தீவிர கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு, போதுமான தன்னாட்சி உரிமைகளுடன் இப்பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுருக்கமாக அப்போதைய அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பை இவ்வாதங்களில் பங்குகொண்ட எம்.சி. சாக்ளா, ‘இது முற்றிலும் மாறுபட்டுப் புதியவகைப் பல்கலைக்கழகமாக இருக்கும்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘மாணவர்கள் தம் கேள்விகளை, விசாரணைகளை முன்வைப்பதற்கு ஏதுவானதாகவும், ஒவ்வொரு மரபையும் ஒவ்வொரு கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய நீள்பயணத்தைத் தொடங்க ஏதுவாகவும் சுதந்திரமான சூழ்நிலையைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.’ மேலும், ‘ஒரு பல்கலைக்கழகம் வாழ்க்கை அனுபவத்தையும் அதுபோன்று வாழ்விற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதைத்தான் நாம் இத்தகைய பல்கலைக்கழகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்’ என்றும் குறிப்பிட்டார்.

எனவே அப்போதைய பாராளுமன்றவாதிகளுக்கு ஜேஎன்யு ஏனைய பல்கலைக் கழகங்கள் போல் இல்லாமல் தனித்துவத்துடன் கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது. இதற்குப்பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யுவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இயங்குமுறை, அதிகாரப் பரவலாக்கம் மாணவப் பிரதிநிதித்துவம் :

ஜேஎன்யு-வுக்கான தனிப்பட்ட சட்டவிதிகள் (JNU ordinance) இத்தகைய எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே எழுதப்பட்டன. இவ்விதிகள் ஏனைய பல்கலைக் கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கின்ற நெறிமுறைகளைவிடச் சற்று வேறுபட்டவை. எழுதப்பட்ட விதிகளை தவிர்த்து, கடந்த 50 வருட செயல்பாட்டில்  வெவ்வேறு வழக்கங்கள், மரபுகள், வழக்காறுகள் நடைமுறைக்கு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஜேஎன்யுவின் அமைப்பு மற்றும் இயங்குமுறை  இத்தகைய விதிகள், நெறிமுறைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சனநாயக மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை.  இதனுடைய மாணவர் சேர்க்கை முறை மிகவும் வெளிப்படையானது. இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைபிடிப்பதுடன், ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் தங்கள் தாய் மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்திலும், ஹிந்தி த‍விர்த்து தமிழ், பெங்காலி, மலையாளம் இன்னும் பிற மொழிகளிலும் நுழைவுத்தேர்வு எழுதுவோரை அவ்வப்போது காணமுடியும்.

ஜே.என்.யூ மாணவர் தேர்தல் கமிட்டி.

பெண்களுக்கு மற்றும் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து விண்ணப்பிப்போருக்கு ஊக்கப் புள்ளிகள் வழங்கப்பட்டன. அனைத்துப் பால், மொழி, சமூக மற்றும் பிராந்தியப் பிரிவினைகளிலிருந்து திறமையான மாணவர்களின் வருகை ஜேஎன்யு மாண்புகளுக்கு அடிப்படையாக நின்று வலுச்சேர்த்தது. ஒவ்வொருவரும் தன் கருத்தைத் தைரியமாகக் கூச்சமின்றித் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுவதற்கு ஏதுவாக இருந்த எளிமையான சூழல் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், ஒரு ஒருக்கிணைந்த கூட்டு வாழ்விற்கு தேவையான வாழ்வியில் நெறிகளைக் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தது.

சமூகவேறுபாடுகளைக் களைவதற்கான விழைவுகள் போன்று பால் வேறுபாடுகளைக் குறைத்து, பாலியல் வன்முறையற்ற சமூகத்திற்கான முன்மாதரியும் இங்கு வரையப்பட்டது. ஆண்-பெண் இருபால் மாணவர்களும் ஒரே விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வன்முறையற்று சரிசமமாக இணைந்து வாழ்வதற்கான பரிசோதனையை மேற்கொண்டதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதுபோன்ற சுதந்திரமான இணைந்த வாழ்வியல் நெறிகளை ஊக்குவித்த அதேவேளையில் பால் சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு விசாகா நெறிமுறைகளின் வழிகாட்டுதலின்படி GSCASH (Gender Sensitization Committee Against sexual harassment)  அமைப்பு உருவாக்கப்பட்ட பால் நெறிகளை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு முறையான விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை (பொதுவாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்) வழங்கப்பட்டது. இது பொதுவாக பெண்கள் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் உதவியது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

இதுபோன்ற எத்தனையோ தனித்துவம் மிகுந்த நடைமுறைகளைப் பற்றி பேசிக்கொண்டே செல்லலாம். மற்ற எல்லாவற்றையும்விட,  ஜேஎன்யு மாணவர் அமைப்பு தேர்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு சனநாயகத் தேர்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக உள்ளது.  இது மாணவர்களை மட்டுமே கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் குழுவால், எந்தவிதப் பணம் மற்றும் வன்முறையின் ஊடுருவலும் இன்றி, 15 நாட்களுக்கு வெவ்வெறு தளங்களில், நிலைகளில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில், மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுவது.  இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தில், குறிப்பாகக் கொள்கைகளை வகுக்கும் குழுக்களில் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு, மாணவர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடனே ஜேஎன்யு கொள்கை முடிவுகள் உருவக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். பொதுவாகக் கல்வி, கல்விக் கட்டணம், விடுதி நெறிகள், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் மாணவர்கள் தங்கள் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

விரைவில் அடுத்த பகுதி : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம்

(தொடரும்)

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

1 மறுமொழி

  1. ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த கல்லூரியும் விளங்காது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க