ந்தியாவின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட். அவர் ட்விட்டரில் இதற்கு முன் பல்வேறு இந்துத்துவ கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்று குற்றச்சாட்டுகள் செய்தி ஊடகங்களில் வந்த பிறகு தன் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டு தனக்கு டிவிட்டர் கணக்கே இல்லை என்று கூறியிருக்கிறார்.
பண்டிட், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் மிகவும் நெருக்கமானவர். சமீப காலங்களில் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்களுக்கான அழைப்புகளை தனது டிவிட்டர் கணக்கில் ஆதரித்துள்ளார்.
உதாரணமாக, இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த கங்கனா ரனாவத்தின் டிவிட்டர் பக்கத்தை, இடைநிறுத்தியதைக் கண்டித்து டைம்ஸ் நவ் ஆசிரியர் ராகுல் ஷிவ் சங்கரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இடதுசாரிகளை “ஜிஹாதிகள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார் சாந்திஸ்ரீ பண்டிட்.
படிக்க :
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
ரொமிலா தாப்பரை அவமதித்த ஜே.என்.யூ காவி நிர்வாகம் !
“ஒன்றுபட்ட இந்தியாவிற்கு” காந்தியின் கொலை மட்டுமே “தீர்வு” என்று கூறி கோட்சேவின் செயலை ஆதரித்துள்ளார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனது இந்துத்துவ அரசியல் கருத்துக்களை தயக்கமின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜே.என்.யு-வின் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் “நக்சல் ஜிஹாதிஸ்டுகள்” என்றும், ரோஹிங்கியா அகதிகளை களையெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவியை நிறுத்துமாறு ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக விவசாயிகளை “ஒட்டுண்ணிகள், இடைத்தரகர்கள்” என்று கூறியுள்ளார், மேலும் ஷாஹீன் பாக்கில் CAA எதிர்ப்பு போராளிகளையும் இதேபோன்று கொச்சையாக கூறியுள்ளார்.
தி வயர் மூத்த ஆசிரியர் அர்ஃபா கானும் மற்றும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆட்ரே ட்ருஷ்கி (Audrey Truschke) ஆகியோரின் படத்தை “வேட்டையாடும் கழுகு” என்று குறிப்பிடும் இந்துத்துவ சக்திகளின் ட்ரோல் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற பல்வேறு ட்விட்டர் பதிவுகள் சமூக ஊடகங்களில் ஆதாரங்களுடன் பல்வேறு கண்டனங்கள் எழுந்த பிறகு தனது ட்விட்டர் கணக்கை நீக்கிய பண்டிட் “என்னிடம் ட்விட்டர் கணக்கு இல்லை… ஜேஎன்யூ வில் உள்ள யாரோ ஒருவர் அதை ஹேக் செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக நான் முதல் பெண் துணைவேந்தர் என்பதில் பலர் மகிழ்ச்சியடையவில்லை” என்று அவர் கூறினார்.
ஜே.என்.யு வைச் சேர்ந்த ஒருவர், சாந்திஸ்ரீ பண்டிட் தான் அடுத்த துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்பதை எப்படி முன்பே அறிந்திருக்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. “ஹேக்கரின்” நோக்கம் அவரை கேவலப்படுத்துவதாக இருந்தால், சர்ச்சைக்குரிய ட்வீட்கள் செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த தருணத்தில் டிவிட்டர் கணக்கு ஏன் நீக்கப்பட்டது என்பதைப் பற்றியும் அவர் கூறவில்லை.
மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் பதவிகளில் சங்கப் பரிவார் கும்பலைச் சார்ந்தவர்களை பணி நியமனம் செய்யும் மோடி அரசின் யுத்திதான் தற்போது சாந்திஸ்ரீ பண்டிட் நியமனத்திலும் தெளிவாகிறது.
புனே பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர் மையத்தின் (ISC) இயக்குனராக சாந்திஸ்ரீ இருந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களுக்கு (PIO) ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு 2002 மற்றும் 2007-க்கு இடையில் 1,800-க்கும் மேற்பட்ட தகுதியற்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் படிப்புக்கான ஆணையை வழங்கியுள்ளார்.
புனே பல்கலைக்கழகத்தின் நரேந்திர ஜாதவ், சுனந்தா பவார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார், அதில் பண்டிட் தகுதியற்ற மாணவர்களை PIO ஒதுக்கீட்டில் விதிகளை மீறி அனுமதித்ததை கண்டறிந்தார். 50-60% மட்டுமே பெற்ற தகுதியற்ற விண்ணப்பதாரர்களை PIO ஒதுக்கீட்டின் கீழ் மகாராஷ்டிராவில் இருந்து உயர்நிலைக் கல்வி நிலையங்களில் பண்டிட் அனுமதி வழங்கியுள்ளார் என்று RTI தகவல் அவருக்கு கிடைத்தது.
தகுதியற்ற மாணவர்களின் சேர்க்கைக்காக பண்டிட்டிடமிருந்து பணம் பெற்றதாக ISC-ல் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டதை சுனந்தா பவார் குழு கூறியது. இருப்பினும், 2008-ம் ஆண்டு பவார் குழுவின் அறிக்கை வெளிவந்த நேரத்தில் பண்டிட் பணியில் இருந்து மாறியதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
படிக்க :
கும்பல் மனோபாவமே சங்கிகளின் பலம் || சம்சுதீன் ஹீரா
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
JNU-வின் துணைவேந்தராக பண்டிட் நியமனம் செய்யப்பட்டவுடன், அந்த பதவிக்கான மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் உள்ள ஐரோப்பிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் குல்ஷன் சச்தேவா, புது தில்லியைச் சேர்ந்த இன்டர் யுனிவர்சிட்டி முடுக்கி மையத்தின் (ஐயுஏசி) இயக்குநர் அவினாஷ் சந்திர பாண்டே ஆகியோர் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இருப்பினும், பண்டிட்டின் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி கருத்துக்களில் மிகவும் நெருக்கமானவர் என்பதால் பதவி அவருக்கு கிடைத்துள்ளது.
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆசிரியர் ஆட்ரே ட்ருஷ்கி (Audrey Truschke) டிவிட்டரில் “இந்தியாவின் இந்து தேசியவாத ஆட்சியாளர்களால், நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களை அழிப்பதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
‘லவ் ஜிஹாத்’, ‘ஜிஹாதி இஸ்லாம்’, ‘தீவிரவாத நக்சல் குழுக்கள்’ (ஜேஎன்யு மாணவர்களைக் குறிப்பிடுவது), ‘இத்தாலியன் ரிமோட் கண்ட்ரோல்’ (சோனியா காந்தியைக் குறிப்பிடுவது), ‘மனநலம் குன்றிய ஜிஹாதிகள்’ (சிவில் உரிமை ஆர்வலர்களைக் குறிப்பிடுவது) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்துமதவெறியையும், முஸ்லீம் வெறுப்பையும் வெளிபடுத்தும் சாந்திஸ்ரீ பண்டிட்-ஐ ஜேஎன்யுவின் முதல் பெண் துணைவேந்தர் என்று பெருமை கொள்ள முடியுமா ?
சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்#1 , தி வயர்#2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க