ந்தக் காணொளியை ஷாட் பை ஷாட்டாக மனதுக்குள் ஓட்டிப்பாருங்கள்.
கல்லூரிக்குள் அந்த மாணவி நுழையும்போதே அவளுக்கு உளவியல் நெருக்கடி கொடுத்து அச்சுறுத்த முடிவெடுத்து விடுகிறது மாணவர்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கிக் கும்பல்.

உள்ளே வரும்போதே இந்தக்கும்பலைக் கண்டுகொண்ட மாணவி இவர்களின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு எதற்கும் தயாராகவே வருகிறாள்.
அவள் வண்டியை நிறுத்தும்போதே கும்பல் பெருந்தொண்டையில் கத்த ஆரம்பிக்கிறது.

வண்டியை நிறுத்தி இறங்கிவரும் அவள் நடையில் துளி தயக்கமில்லை, கண்களில் துளி அச்சமில்லை. அவர்களைக் கடந்து செல்லும் மாணவியை நோக்கி கும்பலாகக் கோசமிடுகிறார்கள். மிரட்டும் தொனியில் கூச்சலிடுகிறார்கள்.

படிக்க :

ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்

உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது

உங்கள் கும்பலால், உங்கள் கூச்சலால் என்னை ஒரு துளிகூட அச்சப்படுத்த முடியாது என்பதைப்போல நிதானமாக அந்தக்கும்பலை எதிர்கொண்டு நின்று எதிர்முழக்கமிடுகிறாள்.

பயந்து விடுவாள் அல்லது ஓடுங்கிப்போய்விடுவாள் எனக் கருதிய கும்பல் அவளின் ஆக்ரோஷமான எதிர்வினையைக் கண்டு தடுமாறுகிறது. அவள் எதைக்குறித்தும் கவலையின்றி போய்க்கொண்டே இருந்தாள்.

அவளது தைரியம் ஏற்படுத்திய சேதத்தை சரிக்கட்ட கும்பலில் முன்னால் நின்றிருந்த ஒருவன் காவித்துணியோடு அவளை நோக்கி ஓடுகிறான். அவனைத்தொடர்ந்து இன்னும் சிலர் ஓடுகிறார்கள். விரட்டினால் பயந்து ஓடுவாள் என்றுதான் அவன் கணக்குப்போட்டிருப்பான்.

பின்னால் இந்தக்கும்பல் விரட்டி வருகிறது என்ற பதட்டமோ படபடப்போ துளியுமின்றி அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறாள். முதலில் ஓடிவந்தவன் அவளை மிக அருகில் பார்க்கிறான். துளியும் அச்சமில்லாத அந்த முகத்தைப் பார்த்து அஞ்சுகிறான். மற்றவர்கள் வந்து சேரும் வரை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கிறான். கும்பல் சேர்ந்த பிறகுதான் அவனுக்கு தைரியம் வருகிறது. அதற்குப்பின்புதான் கோசம் போடுகிறான்.

பதிலுக்கு முழங்கிக்கொண்டே அவள் முன்னேறிச் செல்கிறாள். ஒரு கேமரா ஓடிவந்து அவளை ஓவரேக் செய்து முகத்தை நோக்கி நிற்கிறது. ‘புர்கா என் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது’ என்கிற பொருளில் நிதானமாக அதே நேரம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தாள். என்ன செய்வதென்று புரியாத கும்பல் கூச்சலிட்டுக்கொண்டு அங்கேயே நின்றுபோகிறது. அவள் கல்லூரிக்குள் நுழைகிறாள்.

சங்கிக் கும்பலின் வீரத்தின் சூத்திரமே இதுதான். இந்த கும்பல் மனோபாவம் மட்டுமே அவர்களின் பலம். இதுவரை சங்கிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்ட எல்லா கலவரங்களையும் பரிசீலித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் பெரும் கும்பலாக இருக்கும். அல்லது அரசின்/ காவல்துறையின் பரிபூரண ஆசி இருக்கும்.

குஜராத்தில் ஐம்பது குடும்பங்கள் வாழும் மொஹல்லாவை நாசமாக்க ஐந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. முன்னூறு குடும்பங்கள் வாழும் மொஹல்லாவுக்குள் பத்தாயிரம் சங்கிகள் நுழைந்தார்கள் என்பதெல்லாம் ஆவணமாக இருக்கிறது.

கோவை நவம்பர் கலவரத்தில் போலீசின் துணை மட்டும் இல்லையென்றால் சங்கிகள் உதை சாப்பிட்டுவிட்டு ஓடியிருப்பார்கள். எப்போதுமே சாதாரண இந்து மக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனியர்களைப்போல, பெரும் கும்பலுக்குள் ஒளிந்துகொள்வது, காவல்துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது இதுவே அவர்களின் சூத்திரம்.

படிக்க :

கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

இன்னும் வேறெங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றா கேட்கிறீர்கள்?

‘இந்தச்சூழலில் அந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கோசம் போடலாமா?’ என்று உங்கள் நட்புப் பட்டியலில் ஒளிந்திருக்கும் சில சைலண்ட் சங்கிகள் லேசாகப் பேசிக்கொண்டிருக்கும் பாருங்கள்.

அந்த இடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பது தாக்குதல் கோஷம், அல்லாஹு அக்பர் என்பது தற்காப்புக் கோஷம். இருபது முப்பதுபேர் கொண்ட கும்பல் தாக்குதல் நிலையெடுத்து முழங்கிய கோசத்தையும் ஒற்றைப் பெண்ணாய் அதை எதிர்கொண்டு தற்காப்பு நிலையெடுத்த மாணவியின் கோசத்தையும் சமப்படுத்தி வெளிப்படும் மெல்லிய லிபரல் குரல்கள் அந்த கும்பலை விட ஆபத்தானது.

ஒரு வெறிக்கும்பலைத் தன்னந்தனியாய் எதிர்கொள்ளும் ஒரு இஸ்லாமிய மாணவியிடமிருந்து அவளுக்கு நம்பிக்கையூட்டுகிற, தைரியமூட்டுகிற அந்த ஒற்றை முழக்கத்தைப் பறித்துவிட்டு வேறெதை நாம் மாற்றாகக் கொடுக்கப்போகிறோம்

முகநூலில் : Samus Deen Heera

disclaimer

1 மறுமொழி

  1. உண்மை. எந்த சங்கிக்கும் தனியாக போராட்டம் செய்யும் பலம் இருக்காது. கும்பல் மனப்பான்மை தான் பலம் கொடுக்கிறது, அதாவது காட்டு விலங்குகள் குழுவாக வேட்டையாடுவது போல். இவர்களுக்குள் வளர்ச்சியடையாத பண்பாட்டு உணர்ச்சி விலங்கு நிலையில் அவர்களுக்குள்ளே இன்னும் இருக்கிறது. சாதிக்கலவரங்கள், கிரிக்கெட் விளையாட்டு போன்றவை குழு மனப்பான்மையுடன் தான் நடைபெறுகிறது. இவர்கள் நோயாளிகள். சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க