பத்திரிகைச் செய்தி
09.02.2022
ஹிஜாப் விவகாரம் :
இது கர்நாடக பிஜேபி அரசே உருவாக்கிய திட்டமிட்டக் கலவரம் !
இசுலாமிய மக்களின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் !
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிசக் கும்பலை முறியடிப்போம் !
ர்நாடகாவில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாதென்று ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி-சங்கப் பரிவாரங்கள் நடத்திவரும் போராட்டங்களும் வன்முறைகளும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசக் கும்பல் ஒழித்துக் கட்டப்படவேண்டியதே என்பதை உறுதிப்படுத்துகின்றன.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு நிர்வாகம் தடை விதித்தது. ஆனாலும், ஹிஜாப் அணிந்து வந்த 6 இசுலாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளுக்கு ஆதரவாக மேலும் பல இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அம்மாணவிகள் கல்லூரிக்கு வெளியே அமர்ந்து கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடினர். போராடும் மாணவிகளுக்கு ஆதாரவான மனநிலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுவதை அறிந்த ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பல் தனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மூலம் ஹிஜாபுக்கு எதிராக காவித்துண்டு அணியும் போராட்டத்தை தொடங்கினர்.
அடுத்தடுத்து கர்நாடகாவில் ஆறு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அதற்கெதிரான இசுலாமிய மாணவிகள் போராட்டம் வலுப்பெறவே சிவமொக்கா, பாகல்கோட், தாவணகெரே, கதக், மண்டியா, ஹாசன்,விஜயபுரா மாவட்டங்களில் ஹிஜாபுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி- சங்கப் பரிவாரங்கள் மாணவர்களிடம் மதவெறி வன்முறை பரப்பியது.
சிவமொக்கா மாவட்டம், அரசுக் கல்லூரியில் நுழைந்த காவித் துண்டு அணிந்த மாணவர்கள், அங்குள்ள இந்திய தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியுள்ளனர். ஹாசன், சிவமொக்கா, தாவணகெரே மாவட்டங்களில் பரவிய கலவரத்தால் பல இரு சக்கர வாகனங்கள், பல கார்கள் சேதமடைந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு இசுலாமிய மாணவியோ, தன்னை சுற்றி வளைத்த ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கும்பலின் ஜெய்சிறீராம் சொல்லவேண்டும் என்றும் ஹிஜாப் அணியக்கூடாது என்ற மிரட்டலுக்கு அஞ்சாமல் ”அல்லாஹூ அக்பர்” என்று முழங்கினார். மேலும் இசுலாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இந்து மாணவிகள் ஹிஜாப் அணிந்தும் தலித் மாணவர்கள் நீலத்துண்டு அணிந்தும் கல்லூரிகளுக்கு வந்துள்ளனர்.
மேற்கண்ட வன்முறைகள் எதுவும் இயல்பாகவோ எதேச்சையாகவோ நடைபெற்றதல்ல, குஜராத்தில் அம்மாநில அரசால் முசுலீம் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்களைப் போலவே கர்நாடகத்திலும் அதற்கான வேலைகள் நடந்தேறிவருகின்றன.
இத்தனை ஆண்டு காலம் கர்நாடகத்தில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒரு கல்லூரியில் படிக்கும் இசுலாமிய மாணவிகளில் மிகக்குறைவான சதவீதமானவர்களே ஹிஜாப் அணிந்து வந்திருக்கின்றனர். இந்த மதவெறிப் போராட்டங்கள் மூலம் இசுலாமிய மாணவிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டும் விதமாக பலரும் ஹிஜாப் அணிவதும் அதையே காரணம் காட்டி இந்து மாணவர்களை மதவெறியூட்டுவதும் நடைபெற்றுவருகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர், சத்துணவில் முட்டை போடக்கூடாது என்ற லிங்காயத்து மடங்களின் எதிர்ப்புக்கு எதிராக போர்க்குணமாகப் போராடிய பள்ளி மாணவர்களைத்தான் இன்று மத ரீதியாக கூறுபோட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
ஒரு அரசுக்கல்லூரி முதல்வர் ஹிஜாபுக்கு தடைவிதிக்கிறார், அதைத்தொடர்ந்து சில மாணவிகள் போராடுகின்றனர். பிற கல்லூரி முதல்வர்களும் ஹிஜாபுக்கு தடைவிதிக்கின்றனர். இசுலாமிய மாணவிகள் போராட்டம் பெருக, கல்லூரி முதல்வரின் நடவடிக்கைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியினர் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். கர்நாடக கல்வித்துறை” பள்ளிச்சீருடையை மட்டுமே பள்ளிகளில் அணிய வேண்டும்” என்று உத்தரவிடுகிறது. இப்போது ஹிஜாப் அணியக்கூடாதென்பது அரசின் உத்தரவு. அதற்கு இசுலாமியர்கள் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்ற கருத்தை உருவாக்குகிறார்கள்.
அம்மாநில அமைச்சர் ” ஹிஜாப் அணிய விரும்புவோர் பாகிஸ்தானுக்கு செல்லலாம்” என்கிறார். அரசின் பிரதிநிதியாக இருந்து இசுலாமியர்களை அடக்கி ஒடுக்க பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியினர் கலவரம் செய்கின்றனர். இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்த அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ”உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, முசுலீம் மக்கள் மீதான இன்னொரு படுகொலைக்கு காவி பாசிசக் கும்பல் தயாராகிவிட்டதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது ஏற்படுத்தப்பட்ட கலவரச்சூழல் என்பது பிஜேபி அரசாலும் ஆர்.எஸ்.எஸ் கும்பலாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே. இந்த மாடலைப் பயன்படுத்தி பல்வேறு காரணங்களைக்கூறி இந்தியா முழுவதும் ஏன் தமிழகத்திலும் கலவரங்களை தோற்றுவிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் – கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, சாகர்மாலா, பாரத்மாலா, நகர வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களை வெளியேற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்; புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு திணிப்பு, அதிகரித்துவரும் வேலையின்மை ஆகியவற்றால் அம்பலப்பட்டுப்போன ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் திசைத்திருப்பவும் தனது பார்ப்பன – சனாதன இந்து இராட்டிரத்தை நிறுவவும் செய்யும் முயற்சிகளில் ஒன்றாகவே ஹிஜாப்புக்கு எதிரான மோதலையும் பார்க்க வேண்டும்.
இசுலாமியர்கள், தலித் மக்கள் வழிபடுவதற்கு உரிமை உள்ளதா என்பதைப் பற்றிப்பேசும் போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானதோ அதை விட அபத்தமானது ஹிஜாப் போராட்டத்தில் இசுலாமியர்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்து நடுநிலைவகிப்பது.
ஆப்கனில் கட்டாய ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக இசுலாமிய பெண்கள் போராடுவதை நாம் ஆதரிப்பது எவ்வாறு சரியோ அதுபோல இசுலாமிய வெறுப்பை விதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.
ஹிஜாப் சரியா, தவறா என்பதல்ல இப்போதைய பிரச்சினை. இந்து முனைவாக்கத்துக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். ஹிஜாப் என்பது எப்படி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இசுலாமிய மக்கள் மீதான அவதூறு பரப்ப ஒரு முகாந்திரமோ, அதைப்போலத்தான் இசுலாமிய மக்களுக்கு ஹிஜாப் என்பது இந்துமதவெறி எதிர்ப்புக்கான ஒரு கருவி அவ்வளவே.
இதை சாக்காக வைத்துக்கொண்டு ஹிஜாப் என்ற பெண்கள் மீதான அடிமைத்தனத்தை புகழ்ந்து கொண்டிருப்போரை நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. எந்த உடை அணிய வேண்டும் என்பதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இந்து மதவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிப் பரவும் போது இந்துமதவெறிக்கு எதிராக மட்டுமல்ல; அனைத்து மத அடிப்படைவாதங்களுக்கு எதிரானதாக மாறும்.
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச சக்திகள் கர்நாடகாவில் நேரடியாக அரசாள்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அம்மாநில அரசுகளின்  ‘இறையாண்மையை’ தூக்கியெறிந்துவிட்டு மறைமுகமாக அரசாள்கின்றன. ஆக மொத்தத்தில் பார்ப்பன சனாதன கும்பல்கள் முன்னேறிக்கொண்டே இருக்கின்றன. அதே வேளையில் நாட்டை அடிமையாக்கும் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடும் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அதானி – அம்பானி கும்பலை ஒழித்துக்கட்டுவதையே நம்முடைய முதல் இலக்காகக்கொண்டு செயல்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
ஹிஜாப் விவகாரம் !
இது கர்நாடக பிஜேபி அரசே உருவாக்கிய திட்டமிட்டக் கலவரம் !
இசுலாமிய மக்களின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் !
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிசக்கும்பலை முறியடிப்போம் !
தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க