டையில் மத அடையாளம் மட்டுமேதான் உள்ளதா? சாதி அடையாளம் இல்லையா? அடிப்படையில் உடை என்பது தனி மனிதர்களின் விருப்பம் சார்ந்தது. ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், அதைத் தாண்டி பேச வேண்டும் எனில், வாழும் பிரதேசம், தட்பவெப்பம், அதாவது குளிர் பிரதேசம், வெப்பப் பிரதேசம், இரண்டுக்கும் பொதுவான நிலையில் உள்ள பிரதேசங்கள் என இயற்கை சார்ந்து மனிதர்கள் தேர்வு செய்யும் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டு விசயங்களில் அடங்குபவைதான் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள்.
இவை அடிப்படைத் தேவைகள் என்பதை தாண்டி காலப்போக்கில் மத அடையாளம் சார்ந்த விஷயங்களாகவும் மாறின. இந்தியாவில் இந்த அடிப்படை தேவைகள் சாதி அடையாளத்துடன் கூடிய பயன்பாட்டு விசயங்களாகவும் மாறி இருப்பதை மறுக்க முடியாது. இன்ன உணவு, இன்ன உடை, இன்ன இருப்பிடம் இன்ன மதத்துக்கு உரியது என்பதையும் தாண்டி இன்ன சாதிக்கு உரியது என்று அடையாள முத்திரை இடப்பட்டிருப்பது உண்மைதானே?
இதை விரிவாக பேச முடியும். முலைவரியில் இருந்து பேசலாம். அது வெறும் உடை சார்ந்த விசயமா? மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி மதத்துடன் மட்டுமே அடையாளம் காணப்படுவது இல்லையே? அதற்குள் மத அடையாளத்தையும் தாண்டி சாதி அடையாளம் இல்லையா? மனிதர்கள் வசிக்கும் பகுதி எல்லாமே மனித வாழிடங்கள் என்ற பொதுவான வரையறைக்குள் வந்துவிடும் எனில் அக்ரஹராமும் சேரியும் மசூதி தெருவும் ஒன்றுதானா? வாழிடம் மட்டுமே எனில் சமத்துவபுரத்துக்கு அவசியம் வந்தது ஏன்? சாதி ஒழிப்பே நோக்கம் எனில் சமத்துவ புரங்களில் கணக்கெடுத்தால் உண்மை என்னவென்று தெரியும்.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
ஹிஜாப்?
ஹிஜாப் அணிகின்ற இசுலாமிய பெண்கள் இருக்கின்றார்கள், அணியாத இசுலாமிய பெண்களும் இருக்கின்றார்கள். இசுலாமிய குடும்பங்களில் இருந்து தொடங்குகிறது இந்த ஹிஜாப் அணிவதா வேண்டாமா என்பது.
உண்மையில் இது இஸ்லாமியப் பெண்களின் தனிப்பட்ட உரிமை மட்டுமேதானா? இஸ்லாமிய ஆண்களின் தலையீடோ கட்டாயமோ இதில் இல்லையா என்ற கேள்வி உள்ளது. விளக்கி சொல்லலாமா? ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிவது அவளது தனிப்பட்ட உரிமை அல்லது சவுகர்யம் சார்ந்தது மட்டுமேதானா? இதில் பெண்ணின் தந்தை அல்லது தாய், திருமணம் ஆன பின் கணவன் ஆகியோரின் தலையீடு இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மத நம்பிக்கை உள்ள கணவன் மனைவியரிடையே கூட சரியான புரிதல் இருக்கும்பட்சத்தில் ஹிஜாப் அணிவது பெண்ணின் விருப்பத்திற்கு விட்டுவிடும் கணவர்களை என்னால் காட்ட முடியும். அணிவதும் அணியாமல் இருப்பதும் அவள் விருப்பம், அவள் சவுகர்யம் சார்ந்த தனிப்பட்ட விசயம் என்று அதில் தலையிடாமல் இருக்கும் கணவர்கள் உள்ளார்கள்.
அதிகம் பேசப்படாத உண்மை என்னவென்றால், வெயில் கொளுத்தும் ஊர்களில், குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காற்றுப்புகாத புர்கா, ஹிஜாப் அணிவது பெண்ணுக்கு எத்தனை சவுகர்ய குறைச்சல் அல்லது அறிவார்ந்த செயலா என்பதுதான்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது மத கலாச்சார எல்லையையும் தாண்டிய, பொதுவாக பெண்களின் மனநிலை அல்லது உரிமை சார்ந்த விடயம் எனில் உடையின் வடிவத்தையும் எந்த மாதிரி உடையை எங்கே அணிந்து கொள்வது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மதங்களையும் சாதிகளையும் தாண்டி பொதுவான தளத்தில் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு பொருள்தான்.
சேலை என்பது பொதுவான உடை எனில் மடிசார் என்பது சாதியை அடையாளப்படுத்தும் உடை இல்லையா? ஹிஜாப் மதம் சார்ந்தது. கிறித்துவ மத அடையாளங்களுடன் கூடிய உடை இல்லையா? நீ இதை அணியாதே என்று யாருக்கு யார் உத்தரவு போட முடியும்?
உடை என்பதை பொது வெளியில் அணிகின்ற ஒரு கண்ணியமான ஆடை என்ற குறைந்தபட்ச புரிதலுடன்தான் என்னால் வரையறுக்க முடியும். இந்த குறைந்தபட்ச வரையறைக்குள்ளும் கூட பொருந்துகின்ற மத அடையாளங்களுடன் அல்லது எந்த ஒரு மத அடையாளமும் இல்லாமலும் இருக்கின்ற ஆடைகளை அணிந்துகொண்டுதான் இந்திய பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொதுவெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றோம் என்பதையும் அதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் வழங்கி இருக்கின்றது என்பதையும் வலுவாக சொல்ல வேண்டியுள்ளது.
மதசார்புள்ள நாடுகளிலும் கூட அங்கே வாழ்கின்ற மத சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் உடையை தேர்வு செய்யும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனில் மதச்சார்பற்ற இந்திய சமூகத்தில் எந்த ஒரு மதத்தினரும் தமக்கான உடையை தான் சார்ந்துள்ள மத அடையாளத்துடன் தேர்வு செய்யும் உரிமை மட்டுமல்ல, எந்த அடையாளமும் இல்லாமலே தேர்வு செய்யும் உரிமையும் வேண்டும் என்பதே நியாயம்.
படிக்க :
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
இப்போது கர்நாடகத்தில் நடப்பது இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம் அல்லது இஸ்லாமிய மதத்தில் உள்ள நம்பிக்கைகளை ஆக்கப்பூர்வமான கேள்விக்கு அல்லது விவாதத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை அல்ல. இது இந்திய வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நடத்திவரும் மதவெறி அரசியலின் பகுதி.
காலங்காலமாக இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்தே வந்துள்ளார்கள், இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது எனில், இப்போது கிளப்பிவிடப் பட்டுள்ள ஹிஜாப் விசயத்தை இஸ்லாமிய பெண்களின் உரிமை சார்ந்த விசயமாக பார்ப்பது அறிவுக்கு உகந்தது அல்ல, அப்படியான அணுகுமுறை இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, பிரச்சினை கிளப்பிவிடப் பட்டுள்ள இந்த இரண்டொரு நாட்களில் பிற சமூக மாணவர்கள் இதுவரை இல்லாத வழக்கமாக திடீரென காவித்துண்டு அணிந்து வந்தது அவரவர் விருப்பத்தின் பேரிலா அல்லது இந்துத்துவா வலதுசாரி இயக்கங்களின் தூண்டுதலின் பேரிலா என்ற கேள்வியை எழுப்பினால் உண்மையும் பின்னணியும் புரியும்.
நான் முதலில் குறிப்பிட்டது போல, உணவு உடை இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள், இந்திய சமூகத்தில் மத சாதி அடையாளங்களுடன் உள்ளன என்பதிலும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயம் அல்ல.

முகநூல் : மு இக்பால் அகமது
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க