2025-ஆம் ஆண்டு துவங்கி இன்னும் ஒரு மாதம் கூட முழுமையடையவில்லை. சொல்லப்போனால் இன்றோடு 20 நாட்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் இந்த 20 நாட்களில் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் சிறுபான்மை மதத்தினர் மீதும் சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. அரசும் அதைக் கண்டும் காணாமல் கடந்து போகிறது.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மதுரை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுவனை அதே பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியை சேர்ந்த கிஷோர், நித்திஷ், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், மணிமுத்து ஆகியோர் மது வாங்கிவரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு அச்சிறுவன் மறுப்பு தெரிவித்ததற்காக சிறுவனைக் கடுமையாகத் தாக்கி, சாதிய ரீதியாக இழிவாகப் பேசி, அவன் மீது சிறுநீர் கழித்திருக்கிறார்கள் அந்த சாதிவெறிப் பிடித்த மிருகங்கள்.
இந்த கொடூரமான செயலை செய்தவர்கள் மீது மூன்று நாட்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஜனவரி 18 அன்று வழக்குரைஞர் சி.கா.தெய்வா, வி.சி.க. பெண் நிர்வாகிகள் சேர்ந்து உசிலம்பட்டி டி.எஸ்.பி-யைச் சந்தித்து அழுத்தம் கொடுத்ததன் விளைவாக உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போதுவரை ஒருவரை கூடக் கைது செய்யவில்லை.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூர் பகுதியில் பொங்கல் நிகழ்ச்சியின்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் உடையார் சாதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இருத்தரப்பினருக்கும் சமாதானம் செய்து வைப்பதாக ஏட்டு ஸ்ரீதர் மணிகண்டனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சாதிவெறிப் பிடித்த தேவேந்திரன் ஏட்டு ஶ்ரீதரின் கண்முன்னே மணிகண்டனின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான்.
உண்மையில், போலீசின் துணையுடனேயே இந்த சாதிவெறி படுகொலை நடந்துள்ளது. ஏனென்றால் சமாதானப்படுத்தி வைப்பதாக இருந்தால் இருவரையும் போலீஸ் நிலையத்திற்குதானே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மணிகண்டனை தனியாக அழைத்துச் சென்று அவரை கொலை செய்ய உதவி செய்திருக்கிறார் ஏட்டு ஶ்ரீதர். ஆனால், ஶ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டுகிறது. இந்நிகழ்வை சடங்குத்தனமாகவே அணுகுகிறது.
இந்த இரு சம்பவங்கள் மட்டுமின்றி மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சாதியை சேர்ந்த தமிழரசனுக்கு விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது; சாதித் தீண்டாமை காரணமாக அப்பகுதி தலித் மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது; கிராம பொங்கல் விழாக்களில் சாதிய வன்முறைகள் நடந்தது என கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஒருபுறம் தலித் மக்கள் மீது மிகக் கொடூரமான கொலைவெறி தாக்குதல்கள் நடக்கின்ற அதேவேளையில் மறுபுறம் இஸ்லாமிய மக்கள் மீதும் அடக்குமுறைகள் தொடுக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கக்கூடிய சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இஸ்லாமிய மக்கள் ஆடு, கோழிகளை சமைத்துக் கந்திரி கொடுக்கும் வழக்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டுரிமை கொடுக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தியது.
படிக்க: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்
இந்நிலையில், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி சிக்கந்தர் தர்காவுக்கு வழக்கம் போல் உணவு சமைத்துச் சாப்பிடச் சென்ற இஸ்லாமியர்கள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இஸ்லாமிய மக்களின் உறுதியான போராட்டத்தையடுத்து தீவிர சோதனைகளுக்குப் பிறகு இஸ்லாமிய மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்காவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்ற இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயன்ற உடனே, அக்கும்பலுக்கு சாதகமாக போலீசு செயல்படுகிறது என்றால் தமிழ்நாடு போலீசு யாருக்காக வேலை பார்க்கிறது? தமிழ்நாடு தி.மு.க. அரசிற்கா? ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலுக்கா? இந்த போலீசு மீதும் தமிழ்நாடு அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.
இன்னொருபுறம், அதிகார வர்க்கத்தில், குறிப்பாக போலீசுதுறை, வருமான வரித்துறை போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியிருப்பது தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான ஆர்.எஸ்.எஸ். தாக்குதலை அரசின் துணையுடன் நிறுவனமயப்படுத்துகின்றது.
இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதிக்கேட்டு போராடுவோர் மீதும் அடக்குமுறை தொடுக்கப்படுகிறது. அதேபோல் ஜனநாயகத்திற்காக போராடும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு ஆர்ப்பாட்டத்திற்கும் கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை சி.பி.எம். உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினரே அம்பலப்படுத்துகின்றனர்.
அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்து வருவதையும் அதிகார வர்க்கத்தில் சங்கிகளின் பிடி வலுத்து வருவதையும் அம்பலப்படுத்தி வருகிறார். ஒரு மாநிலத்தை சேர்ந்த ஒரே மொழி பேசுகிற அதிகாரிகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் தி.மு.க. அரசோ இதுக்குறிதெல்லாம் வாய்த்திறக்காமல் இருப்பதுடன் அதற்கு பணிந்து செல்கிறது. இந்த அதிகாரிகளை களையெடுக்காமலும் ஆர்.எஸ்.எஸ்-க்கு துணைபோகும் அதிகாரிகளை தண்டிக்காமலும் மறைமுகமாக பாசிச கும்பலின் சதித்திட்டங்களுக்கு துணைபோகிறது. தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலைத் தொடுத்துவரும் சாதிவெறியர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு மௌனம் காத்து வருகிறது.
இது, “பெரியாரைப் பின்பற்றுகிறோம்”, “சமூக நீதியை நிலைநாட்ட வந்திருக்கிறோம்” என்று சொல்லிக்கொள்ளக்கூடிய தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்கின்ற அப்பட்டமான துரோகமாகும்.
“தி.மு.க. மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்”, “தி.மு.க-வை எதிர்த்தால் பாசிசம் வந்துவிடும்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடியவர்கள்தான் தி.மு.க-வின் இந்த சமரசப் போக்கிற்கு பதிலளிக்க வேண்டும்.
தீரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram