19.01.2025
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி தீண்டாமை!
வன்மையாக கண்டிப்போம்!
பத்திரிகை செய்தி
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் தமிழரசன், தான் சாதி ரீதியாக புறக்கணிக்கப்பட்டதாக கொடுத்த பேட்டி விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதே நேரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு இதுவரை நடக்கவில்லை என பிரச்சினையை மூடி மறைத்து வருகிறார். இது பிரச்சினையை சரி செய்வதற்கு என்றும் உதவப் போவதில்லை. பிரச்சினையை வலுப்படுத்தவேச் செய்யும், சாதியை பாதுகாக்கும்.
வீரர்களின் விண்ணப்பங்களில் சாதி, இனம், மதம் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை, அதனால் சாதியப் பாகுபாடு இல்லை என பேசியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர்.
ஆனால் தமிழரசன் தனது சொந்த ஊரான சின்னப்பட்டியை சேர்ந்த யாருக்குமே மாடுபிடி வீரருக்கான டோக்கன் வரவில்லை என்பதை அம்பலப்படுத்துகிறார். ஊரைக் கேட்டே சாதி சொல்லும் நடைமுறை இருக்கும்போது மாவட்ட ஆட்சியர் சாதிப் பாகுபாடு இல்லை என்பதற்கு ஆதாரமாக ஆவணங்களை காட்டுகிறார்.
தமிழரசன் தாமதமாக வந்ததால்தான் புறக்கணிக்கப்பட்டார் என்று ஆட்சியர் கூறுவது கடைந்தெடுத்த பொய். முதல்நாள் இரவு டோக்கன் வந்தவுடன் அப்போதே கிளம்பி வந்து பாலமேட்டில் தங்கினேன் என பதிவு செய்கிறார்.
திட்டமிட்டு சாதிய வன்மத்துடன்தான் தமிழரசனை புறக்கணித்திருக்கிறார்கள் என்பது தெளிவாக அம்பலமாகிறது.
ஆட்சித் தலைவர் குறிப்பிடுவது போல் ஜல்லிக்கட்டில் சாதியே இல்லையா? அதற்கு ஒரு உதாரணம்தான் இது.
பாலமேட்டில் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசும் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. அதில் ஏழு சாதிகளை சேர்ந்த மக்களின் ஏழு கோவில் மாடுகள் மட்டுமே கௌரவிக்கப்படுகின்றன. ஆனால் அதே ஊரில் உள்ள தலித் மக்களின் கோவில் மாட்டிற்கு மரியாதை செலுத்தி கௌரவிக்கப்படுவதில்லை. இதை கண்டித்து அங்குள்ள தலித் மக்கள் வீடுகளில் கருப்பு கொடிக் கட்டி போராட்டம் நடத்தி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் சாதி ஆதிக்கத்தை பாதுகாக்கும் விதமாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் தலையீடு உள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது. அதன் விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு விழாவை மகாலிங்க சுவாமி மடத்துடன் இணைந்து அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆனாலும் இன்னும் சாதிய ஆதிக்கம் என்பது தொடர்ந்து பல கூறுகளில் இருப்பதை காண முடிகிறது.
இங்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு இடங்களில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டில் சாதி ஆதிக்கத்தை தொடர்ந்து பார்க்க முடிகிறது என்பதே எதார்த்தம். எனவே ஜல்லிக்கட்டில் சாதியே இல்லை என ஆட்சியர் சொல்வது வலிந்து திணிக்கப்படும் பொய். ஆகவே ஜனநாயகப் பண்புகளுக்கு மாறாக உள்ள விஷயங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
இது போன்ற சாதிய விஷயங்களை பாதுகாப்பது என்பது தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. மீண்டும் கால் ஊன்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதற்கு சமமானது. அதற்கு துணைபோகும் விதமாகத்தான் ‘திராவிட மாடல்’ அரசின் செயல்பாடும் உள்ளது.
இந்த கட்டமைப்பு என்பது சாதி ஆதிக்கத்தை பாதுகாக்கும் அங்கமாகத்தான் தொடர்ந்து நீடிக்கிறது.
அன்று தமிழ் தேசிய இனத்தின் மீதான பண்பாட்டு மரபையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் விதமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் சூழ்ச்சிகளை முறியடித்தோம்.
அதேபோல் இன்றும்
சாதி ஆதிக்கத்தையும் கார்ப்பரேட்டின் ஆதிக்கத்தின் தலையீட்டையும் முறியடிப்போம்!
தமிழ் தேசிய இனத்தின் மரபான பண்பாட்டு கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்போம்!
பார்ப்பன எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட பண்பாடு, கலாச்சாரமாக வளர்த்தெடுப்போம்!
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு – 9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram