குடியரசு தின விழா என்பது வெறும் 12 மாநிலங்களுக்கானது மட்டுமல்ல 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கும் உரியது. இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அனைத்து மாநில மக்களும் தங்கள் இன்னுயுரை ஈந்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இன்றைய குடியரசு தினவிழாவில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்டு 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை குடியரசு தின விழாவில் பங்கேற்கவிடாமல் தடுத்தது மாநில சுயாட்சி உரிமையைக் கேலிக் கூத்தாக்குவதோடு மட்டுமல்லாமல், மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் ஊத்திமூடும் செயல்.
மாநில சுயாட்சி உரிமையை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மாநில மக்களையும் அவர்களின் முன்னோடிகள் செலுத்திய தியாகங்களையும் இழிவுப்படுத்தும் செயல். இவற்றை பாஜகவின் பினாமிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
படிக்க :
‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!
ஆனால், ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கோ குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் “உரிய வழிமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று திருவாய் மலந்துள்ளார். இதனடிப்படையில்தான் இந்த ஆண்டும் “சுதந்திர போராட்ட வீரர்கள்” என்ற கருப் பொருளில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கவும் இதற்காக பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய குழுவை தெரிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
நிபுணர் குழுவின் கருப் பொருளைக் கணக்கில் கொண்டுதான் அவரவர் மாநிலத்தின் விடுதலைப் போராளிகளை மையப்படுத்தி அலங்கார ஊர்திகளுக்கான வடிவமைப்பை ஒன்றிய அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். இவற்றில் தமிழகமானது நிபுணர் குழு கோரியபடி மூன்று முறை திருத்தங்களுடன் அனுப்பியும் எவ்வித காரணங்களும் கூறாமல் நிராகரித்து விட்டனர். இதேபோல் கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளையும் நிராகரித்துவிட்டனர்.
நிராகரிப்புக்கு உரிய காரணங்கள் தெரியாததால் அதிர்ச்சியடைந்த இம்மாநில முதல்வர்கள் குடியரசு தின விழாவில் தங்கள் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் பங்கேற்பை நிராகரித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு ‘மாபெரும் ஜனநாயகவாதி’ மோடியிடம் கோரியுள்ளனர். ஆனால் இதற்கு நிபுணர் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் பாதுகாப்புத் துறையோ “மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது” என்று தடாலடியாக அறிவித்துவிட்டது.
அப்படி என்றால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் நிபுணர் குழுவின் கருப் பொருளுக்கான உண்மையான அர்த்தம் தான் என்ன?
மோடி அரசைப் பொருத்தவரையில், விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் காலனியாக்கவாதிகளிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, “விட்டால் போதும்” என்று வெள்ளைக்காரனின் காலை நக்கி சிறையில் இருந்து விடுதலையான சார்வக்கர், விடுதலைப் போராளிகளை காட்டிக் கொடுத்த வாஜ்பாய் போன்றவர்களும், பார்ப்பன சனாதன வர்ணாசிரம முறையை தோற்றுவித்தவர்களும் அதை அங்கீகரிப்பவர்களும் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களும் தான் உண்மையான ‘வீரர்கள்’. அவர்கள் மட்டுமே குடியரசு தின விழாவின் அலங்கார ஊர்தியில் வலம் வரக்கூடிய தகுதியுடையவர்கள்.
கேரள அரசுக்கு எர்ணாகுளத்தில் பிறந்த அத்வைத சாமியார் ஆதிசங்கரருக்கு அலங்கார ஊர்தி அமைக்க அறிவுரை கூறியதிலிருந்து ஒன்றிய ஆட்சியாளர்களது தகுதி தீர்மானிப்பையும் கருப்பொருளின் உண்மையான அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியில் வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரது உருவச் சிலைகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா, இந்து மதத்தின் சாதிய சனாதன அதர்மத்திற்கு எதிராகப் போராடிய நாராயண குருவின் உருவச் சிலையை தனது அலங்கார ஊர்தியில் இடம்பெறச் செய்திருந்தது.  இந்த ஊர்திகளுக்குத்தான் அனுமதி மறுத்திருக்கிறது பாசிசக் கும்பல்.
வேலுநாச்சியாரோ, செந்தமிழ் இருக்க கோவில்களில் சமஸ்கிருதம் எதற்கு என்று கேள்வி எழுப்பியவர். சாதியென்றோ, குலமென்றோ வரையறுக்கும் கொடுமைகளை வேரறுப்போம் என்றவர். அந்நியனுக்கு எதிராக மருது சகோதரர்கள், ஊமைத்துரை ஆகியோருடன் இணைந்து போராடியவர்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் உயிர்நாடி அவனது வியாபாரம் தான் என்பதை உணர்ந்து அதற்கு எதிராக கப்பல் ஓட்டிய வ.உ.சி.யோ இவர்களைப் போல அடக்குமுறைக்கு அஞ்சி மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விடுதலையான கோழையல்ல. பிரிட்டிஷ் சிறைக் கொடுமைகளை துணிவுடன் எதிர்கொண்டவர். சாதி – மத வேற்றுமைகளை அறுத்தெறிந்து தொழிலாளர்களை ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராக வர்க்க ரீதியில் அணி திரட்டியவர்.
கேரளாவின் நாராயணகுருவோ, மத எதுவாக இருந்தாலும் மனிதன் நன்றாக இருக்க வேண்டும் என்றவர். சாதியை கடுமையாக சாடியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோவில் நுழைவுப்போராட்டத்தை நடத்தியவர்.
இதுபோன்ற பார்ப்பன – சனாதன எதிர்ப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உண்மையாக நேர்மையாக துணிவோடு போராடியவர்களின் அலங்கார ஊர்திகளை குடியரசு தின விழாவில் பங்கேற்க வைப்பது தனக்கு தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு சமம் என்பது ஆரிய அறிவாளிகளுக்கு தெரியாதா என்ன? மேலும் இந்த நாட்டை இந்துராஷ்டிரமாக கட்டமைப்பதிலும் காட்சிப்படுத்துவதிலும் முனைப்பாக செயல்படுகிறது பாசிசக் கும்பல்.
படிக்க :
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?
கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
இன்னும் ஓரிரு ஆண்டுகளில், குடியரசு தினவிழாவில் கூட கப்பலோடிய தமிழன் வ.உ.சி.க்கு பதிலாக துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் ஆக்கிரமித்த அதானிக்கும் தொலைதொடர்பு, எண்ணெய் வளங்களை அபகரித்த அம்பானிக்கும் கூட அலங்கார ஊர்திகளை வடிவமைப்பார்கள். வெள்ளைக்காரனின் காலை நக்கிய சாவர்க்கரின் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளும் இடம்பெறலாம்.
இவர்கள் நோக்கமே ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பார்ப்பனிய பண்பாடு; ஒரே பேரவை ஆகியவற்றை விதைப்பதற்கேற்ப கூட்டாட்சி உரிமையைப் பறிப்பதே. இதற்கு முன்னேற்பாடாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை  சாதி – மத எதிர்ப்புப் போராட்ட மரபைச் சிதைப்பதே இவர்களது உடனடி நிகழ்ச்சிநிரல்.
இதற்கான ஒரு முன்னோட்டமே இருமாநிலங்களின் பரிந்துரைத்தவர்களில் குறிப்பாக வேலுநாச்சியார், வ.உ.சி, நாராயணகுரு போன்ற, ஏகாதிபத்திய, சாதிய எதிர்ப்புப் போராளிகளை குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருக்கிறது.
இது மாநில கூட்டாட்சியை ஒழிப்பதோடு, மாநிலங்களின் பார்ப்பனிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபை மழுங்கடிக்கவும், இருட்டடிப்பு செய்வதற்குமான ஒரு முயற்சியுமாகும்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க