கேள்வி: ஆகப் பிற்போக்கான பார்ப்பனியமும்; பெண் கல்வி, கருத்து சுதந்திரம், தொழில் அமைதி ஆகியவற்றை வேண்டும் முதலாளியமும் இப்படியே முரண்பாடில்லாமல் இந்தியாவில் நீடிக்க முடியுமா?

–  மதியழகு

அன்புள்ள மதியழகு,

நிலவுடமை சமூகத்தினை அழித்து விட்டுத் தோன்றிய முதலாளித்துவ சமூகம் ஆரம்பத்தில்தான் முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. பின்னர் மதம், இதர நிலவுடமை சமூக பிற்போக்குகளை எதிர்க்காமல், அவை அப்படியே நீடித்து இருந்தால் நல்லதென்று  முடிவு செய்தது. புரட்சிகரமாய் எழுந்து வரும் பாட்டாளி வர்க்கத்தை, மட்டுப்படுத்தி பிற்போக்காய் வைத்திருப்பதற்கு மதம் உதவும் என முதலாளித்துவ சமூக அமைப்பு தன்னை தகவமைத்துக் கொண்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போது திருச்சபையின் அனைத்து அதிகாரங்களும் பிடுங்கப்பட்டன. கல்வி, திருமணம் இதரவற்றில் கத்தோலிக்க மதம் கொண்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு மதச்சார்பற்ற அரசிடம் கொடுக்கப்பட்டன. சிவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. நெப்போலியனது ஐரோப்பியப் படையெடுப்பின் போது இந்த விசயங்கள் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப் படுத்தப் பட்டன.

பிரெஞ்சு புரட்சி

இதில் இருந்து விழித்துக் கொண்ட முதலாளித்துவம் உடனடியாக தனது முற்போக்கு முகத்தைக் ஆங்காங்கே சில நாடுகளில் கை கழுவத் துவங்கியது. இங்கிலாந்தில் வாட்டிகனின் கத்தோலிக்க மதம் மறுக்கப்பட்டாலும், நாட்டளவில் ஒரு புரட்டஸ்டண்ட் கிறித்தவ மதம் இங்கிலாந்து அரச வம்சத்தை தலைமையாக்கி நிலைநிறுத்தப்பட்டது. பெண்களுக்கான கல்வி, வாக்குரிமை எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் முதலாளித்துவ நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. அதிலும் சோவியத் நாடுதான் பாலியல் சமத்துவத்தில் முன்னுதாரணமாக இருந்தது. மற்ற நாடுகள் அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டன.

1917 ரசியப் புரட்சிக்குப் பிறகே முதலாளித்துவ சமூகம் தனது முற்போக்கு அம்சங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைகழுவியது எனலாம். இல்லையென்றால் இவை வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் மற்றும் உலக சோசலிச முகாமிற்கு வலு சேர்க்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போதைய முதலாளித்துவம், சமூக வெளியில் பெண்களுக்கு இடம் கொடுப்பது எப்படி நடக்கிறது?

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிக்கேற்ப பணிபுரியும் தொழிலாளர்களில் மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் தேர்ந்த திறமை கோரும் வேலைகளில் காலம் செல்லச் செல்ல தேர்ச்சியற்ற மற்றவரும் சேர்க்கப்படுவர். அதற்கு ஏற்றாற் போல உற்பத்தி கருவிகளில் நவீன கண்டுபிடிப்புகள் சேர்க்கப்படும். அப்போது தேர்ந்த திறமை கொண்ட தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை தேர்ச்சியற்ற தொழிலாளிக்கு கொடுக்கலாம். இதனால் ஒவ்வொரு வேலையாக அதில் குறைவான சம்பளம் கொடுக்கப்படும் நிலை வரும்போது சமூகத்தில் இருக்கும் நலிந்த பிரிவினருக்கு தேவை எழுகிறது.

இதை ஒரு இந்திய நிலைமையோடு பார்ப்போம். தமிழக நகர்ப்புறங்களில் பெண்களும், வட இந்திய இளைஞர்களும் அதிகம் வேலை பார்க்கும் துறைகளைக் கவனியுங்கள்.

பதினாறு வயதுக்குட்பட்ட சிறாரை பணியில் அமர்த்தக் கூடாது என குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு உணவகங்களில் பாத்திரங்கள், மேசை துடைக்கும் வேலைகளுக்கு பெண்கள் அதிகம் எடுக்கப்பட்டார்கள். குழந்தைத் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் அதே குறைவான சம்பளத்தை பெண்களுக்கும் கொடுக்கலாம் என்பதால்தான் இந்த மாற்றம். மேலும் குறைவான சம்பளத்தைக் கொண்டிருக்கும் வேலைக்கு தேர்ச்சியுடைய ஆண் தொழிலாளிகள் வரமாட்டார்க்ள் என்பதாலும் இந்த மாற்றம் நடைபெற்றது. பிறகு வட இந்திய தொழிலாளிகள் அதிகம் வரத் துவங்கியதும் அதே வேலையில் அவர்களும் இடம் பெறுகிறார்கள்.

மட்டுமல்ல, கட்டுமானத்துறை, உணவகங்கள், தேநீர்க்கடைகள், சிறு தொழில்கள், சேவைத் தொழில்கள் அனைத்திலும் இன்று வட இந்திய தொழிலாளிகள் இருக்கின்றனர். ஒரு தமிழகத் தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் பாதியோ அதற்கும் குறைவாகவோதான் இவர்களுக்கு தரப்படுகிறது. அதே போன்று இன்று பெண்கள் பணி புரியும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்கெட்டுகள், கடைகள் அனைத்தும் குறைவான ஊதியம் காரணமாகவே பெண்களை எடுக்கின்றன. திருப்பூரில் ஊதியம் குறைந்த ஆயத்த ஆடை வேலைப் பிரிவுகளில் பெண்களே அதிகம் இருப்பார்கள். இப்படித்தான் வங்கதேசத்திலும் நடக்கிறது. இதனால் தேசிய இனங்களுக்கிடையே உள்ள பேதங்களை முதலாளித்துவம் ஒழிக்கிறது என்பதல்ல.

முதலாளித்துவம் அமல்படுத்தும் இந்த மாற்றங்கள் அனைத்தும் சுரண்டலோடு தொடர்புடையவை. அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி – மத – இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். மேற்குலகில் தற்போது புதிய புதிய நாஜிக் கட்சிகள் தோன்றி இனவெறியைத் தூண்டி அரசியல் பேசுகின்றன. இவர்களுக்கு கணிசமான பன்னாட்டு நிறுவனங்களும் புரவலர்களாக இருக்கின்றனர். காரணம் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் அகதிகளோடு உள்ளூரில் வெள்ளையரிடையே அதிகரித்து வரும் வேலையின்மையும் சேர்ந்து தொழிலாளிகளிடையே சமூக பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளிகளை பிரித்து சண்டையிடச் செய்வதற்கு புதிய நாசிக் கட்சிகள் முயல்கின்றன. அதை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதே போன்று இந்தியாவிலும் பிற்போக்கான பார்ப்பனியத்தின் இருப்பை முதலாளித்துவமும் விரும்புகிறது. இது குறித்து முன்னர் வந்த கேள்வி பதில் கட்டுரையை பார்க்கவும்.

படிக்க:
♦ பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
♦ பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

எப்படி பிற்போக்கான கத்தோலிக்கம் மற்றும் இசுலாமை மேலை நாடுகளிலும், அரபுலகிலும் வைத்துக் கொண்டாடுகிறார்களோ அதே போன்று இங்கே பார்ப்பனியத்தையும் கொண்டாடுகிறார்கள். சவுதி ஷேக்குகளின் பிற்போக்கான சட்டங்கள், அடக்குமுறையை ஏற்றுக் கொண்டுதான் அவர்களது எண்ணெய் துரப்பண பணிகளையும், முதலீடுகளையும் மேற்குலகில் முதலாளித்துவம் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கிறது. சமூகத்தில் எழும் சின்னச் சின்ன கோரிக்கைகளுக்கு ஒரு தேவை உருவாகும்போது பெண்கள் கார் ஓட்டலாம் என்று பெரிய மனதுடன் ஷேக்குகள் இறங்கி வருகிறார்களே அன்றி வேறு அல்ல. அதே போன்று தொட்டதுக்கெல்லாம் அமெரிக்க அதிபர்கள் ‘கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்று கூறுகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவிற்கும் பொருந்தும்.

தாலியும் நகைகளும் பெண்களின் அடிமைத்தனத்தை பண்புரீதியாக நிலைநிறுத்துகிறது என்றால் முதலாளித்துவம் அதை அக்‌ஷய த்ரிதியை என்று சந்தைப்படுத்துகிறது. சலவை எந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரங்களில் பெண்களே குடும்பத்தின் மகிமையை எந்திரங்களின் உதவியோடு காக்கிறார்கள். இத்தனை நாளாக காஃபி விளம்பரங்களில் கூட தலைவலியோடு வரும் கணவனுக்கு மனைவிதான் காஃபி போடுகிறாள். தொண்டையை இதமாக்கும் ஹால்ஸ் விளம்பரங்களிலும் அசத்தலான ஆண்களுக்கு அடிபணியும் விட்டில் பூச்சிகளாகத்தான் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். பிறகு சமூகத்தில் சில போல எதிர்ப்புகள் வரும் போது கணவன் காஃபி போடுகிறான், அவ்வளவே !

கருத்துரிமையைப் பொறுத்தவரை தமக்கு ஆபத்தில்லாத பட்சத்தில் முதலாளிகள் அதை ஆதரிப்பார்கள். இல்லையென்றால் தடை செய்வதோடு சிறையிலும் அடைப்பார்கள். சவுதி அரச குடும்பத்தின் ஏற்பாட்டில் ஒரு சவுதி பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். அதற்காக அமெரிக்கா சவுதி அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனெனில் பத்திரிகையளாரின் உயிரை விட ஷேக்குகளின் முதலீடு அமெரிக்காவிற்கு முக்கியம். இன்றும் அமெரிக்காவில் வெளிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்குவது சிரமம்.

இந்தியாவிலோ இந்த கருத்துச் சுதந்திரத்தின் அவலத்தை சொல்லவே வேண்டியதில்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் அவர்களின் ஊடகங்களே அதை சாதாரண நிகழ்வாக கடந்து போகின்றன. வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூல் தடை செய்யப்படுகிறது. இதை எதிர்த்து சில எழுத்தாளர்கள், அமைப்புகள்  பேசுவதைத் தாண்டி முதலாளித்துவ வர்க்கம் இதை கருத்துச் சுதந்திரத்திற்கு கேடு என்று பேசவில்லை. சுரண்டலுக்கு பாஜக அரசின் தயவு தேவை என்பதால் அவர்கள் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

இதே முதலாளித்துவ வர்க்கம் சீனாவிலோ, வட கொரியாவிலோ கருத்துச் சுதந்திரம் பாதித்துவிட்டது என கூப்பாடு போடுவார்கள். பொருளாதார அரங்கில் சீனா முன்னேறி வருவதும், அங்கே பெயரளவுக்கு ஒரு கம்யூனிசக் கட்சி இருப்பதும் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. வட கொரியாவின் ஆயுத பலத்தோடு கூடிய இறையாண்மையை ஒரு ஏகாதிபத்தியம் என்ற முறையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் அங்கும் ஜனநாயகம் இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதே அளவு கோலை வளைகுடா ஷேக்குகளுக்கு கொடுப்பதில்லை. அரபுலகம் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு இருப்பதால் பிர்ச்சினையில்லை. கட்டுப்படவில்லை என்பதால் ஈரானையும் கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே முற்போக்கு கருத்துக்கள் எவையும் முதலாளித்துவத்தோடு தொடர்புடைய ஒன்றல்ல. அந்த வகையில் முதலாளித்துவம் முற்போக்கு கருத்துக்களை ஒழிக்கவே விரும்பிகிறது. அதனால் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒத்த கருத்துடைய சக்திகளே அன்றி முரண்படுபவை அல்ல!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க