நூல்….!
கருவறைக்குள் ஒரு சாதி
கழிவு அள்ள ஒரு சாதி
சாதிக்கொரு நீதியென்று
நூல் வகுத்த நூல்
அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும்
எல்லைக் கோடு எழுதிய நூல்
அப்போது தடை
யாவரும் படிக்க
இப்போது
மந்திரங்கள் படித்தாலும்
தந்திரமாய் தடைபோடும் நூல்
ஏகலைவன்
சம்பூகன்
நந்தன்
இப்போது நமக்குமென
தகுதியெனும்
நீட்டை நீட்டிய நூல்
உண்மைகளைத் திருடி
கதையென அளந்த நூல்
கதைகளை எழுதி
உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல்
அதிகாரம் அகங்காரம்
ஆதிக்கம் ஆணவத்திற்கு
அரணாகி நிற்கும் நூல்
எளிதில் அறுபடும்
ஆனாலும் அந்நூலுக்கு
அவ்வளவு அதிகாரமாம்
நூலால் கட்டுண்டு
நூலுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறது
எல்லா மனங்களும்
அறிவால் அறுத்தெறிவது
நிச்சயமாக சாத்தியமாகும்..
நிச்சயமாக
அறிவால் அறிவியலால்
அரசியல் அதிகாரத்தால் அந்நூலை அறுத்தெறியலாம்…
நூற்பல கற்று
பலநூறென இணைந்து
முற்றிலும் அழித்தொழிப்போம்
நூல் மனப்பான்மையை
பல்லாயிரம் மனங்களிலிருந்து….
ஏகலைவன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube