பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? 

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும்.

நம்முள் ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போமா?

யிலில் ஒரு பெண்ணின் மீது குடிகாரன் ஒருவன் எச்சிலைத் துப்புகிறான், எதிர்த்து கேள்வி கேட்ட அப்பெண்ணைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான். அப்பெண்ணுக்கு ஆதரவாகச் சிலர் வருகிறார்கள். அப்படிவந்த ஒருவர் அந்த குடிகாரனை அடித்துப் புரட்டி எடுக்கிறார். அப்பெண்ணும் அவரது குடும்பமும் அவருக்கு நன்றி சொல்கிறது.

பெண்ணை காப்பாற்றியவர் அமர்ந்து நடந்தவற்றை நிதானமாக யோசிக்கும் போதுதான் ஒரு விஷயம் புரியவருகிறது. குடிகாரன் அப்பெண்ணை தகாத முறையில் திட்டினான்; அப்பெண்ணைக் காப்பாற்ற வந்தவரோ, “குடிகாரன் முறைதவறிப் பிறந்ததால்தான் இப்படி நடந்துகொள்கிறான்” என்று இவரும் அவனது தாயான பெண்ணை இழிவுபடுத்துகிறார். குடிகாரன் அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் பேசியதைவிட, இன்னமும் மோசமான, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பெண்ணை காப்பாற்றியவர் பயன்படுத்தியிருக்கிறார்.

குடிகாரனுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? எச்சிலைத் துப்புவதற்கும் திட்டுவதற்கும் இப்பெண் ஏற்றவள் என்பது குடிகாரனின் கருத்து. தவறு இவன் செய்யவில்லை, அது அவன் தாயின் குற்றம் என்பது காப்பாற்ற வந்தவரின் கருத்து. இப்படி எல்லாம் யோசித்துத்தான் அவர் இவ்வார்த்தைகளைப் பேசினாரா? யோசிக்காமல் ஒருவர் இவ்வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் என்றால் பரிசீலிக்க வேண்டியது அதைத்தான். யோசிக்காமல், திட்டமிடாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வருகின்ற வார்த்தைகள்தான் உண்மையாக ஒரு மனிதனை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துபவை.

சந்திரமுகி படம் பார்த்திருக்கிறீர்களா? மனைவியைச் சந்தேகப்படும் கணவன், அதைப் பயன்படுத்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களுடன் விளையாடும் நாயகன். இந்தக்காட்சிகளை எல்லாம் புன்முறுவலின்றி பார்க்க முடிகிறதா? அதெப்படி இருக்க முடியும்? வடிவேலுவின் உடல்மொழியை பார்க்கும்போது சிரிப்பு வராதா என்ன?


படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!


பெண்ணை பாலியல் நுகர்வுப்பொருளாகக் கருதும் நகைச்சுவையை நம்மால் எப்படி ரசிக்கவும் மகிழவும் முடிகிறது? இப்படி ஒரு கேள்வியை யாராவது வைத்துக்கேட்டால் என்ன பதில் கூறுவோம்? கேட்டது பொதுவெளியாக இருப்பின் சற்று தடுமாறுவோம். அதுவே சமூகவலைத்தளமாக இருப்பின், “உனக்கென்ன? எல்லாத்தையும் அரசியலாக பார்க்க முடியுமா? நீ என்ன யோக்கியமா?…” இப்படி ஏதாவது பதிலளித்துவிடலாம். பதில்கள் எவ்வாறு இருப்பினும் சரி, வெளியில் தவறென்று கூறி மீண்டும் மீண்டும் அதையே ரசிக்கும், ஆழ்மனதில் அதை நியாயப்படுத்தும் உணர்வுக்குப் பெயர்தான் என்ன?

பத்து முதல் பதினான்கு வயதுள்ள இளைஞர்கள், தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஐம்பது வயதுடைய பெண்ணின் பாலுறுப்புகளை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். தன் தாயின் வயதையொத்த பெண் என்பது தெரியாமலா இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? எல்லாம் தெரியும், இது தவறில்லை என்பது அவர்களின் எண்ணம். பெண், அவர் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் தனக்காக தன்னுடைய நுகர்வுக்காகவே படைக்கப்பட்டவர் என்பதுதான் ஆணாதிக்கம்.

ஆதித்யா தொலைக்காட்சி என்று நினைக்கிறேன். அது ஒரு நேரலை நிகழ்ச்சி, இளம் வயது ஆண், பெண் என இருவர் தொகுத்து வழங்குகின்றனர். எதிர்முனையில் ஒரு ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளரான பெண்ணின் ரசிகர் என்றும் அப்பெண்ணை தங்கள் குடும்பம் அனைவருக்குமே  பிடிக்கும் என்று கூறி, அப்பெண் தொகுப்பாளரைத் தனது வீட்டுக்கு அழைக்கிறார். அப்பெண்ணும் “கண்டிப்பாக” என்கிறார். உடனே ஆண் தொகுப்பாளர், “என்ன நீ ஹனிமூன் ட்ரிப்புக்கு பிளான் செஞ்சுட்டியா?” என்கிறார். உடனே சுதாரித்துக்கொண்டு தெரியாமல் செய்த தவறு என்று சிரித்துக் கொண்டே அவ்விஷயத்தை கடந்துசென்றார். அப்பெண்ணும் ஏற்றுக்கொள்கிறார். ஒரு தவறு செய்துவிட்டு எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் அதைச் சிரித்துக்கொண்டே செல்ல முடிகிறது? அதை எப்படி அப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது? ஏனெனில் இதுதான் விதி.

சாதியை, மதத்தை, ஒரு நபரைப்பற்றி இழிவாகப் பேசினால் அடிவிழும் என்ற பயம் பெண்ணைப் பற்றிப்பேசும் போது ஏன் வரவில்லை? தன்னைப் பற்றி எப்படி இழிவாகப் பேசினாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது அந்த விதியினுள் இருக்கும் உள் விதி.

கணவன் தன் மனைவியைத் தேவடியா என்றழைக்கலாம் அது தவறில்லை, மற்றொருவர் அவ்வாறு கூறக்கூடாது என்பதுதானே இன்னொரு விதி விதி’ . அந்த விதி அவ்வப்போது விதிவிலக்காகிறது. விதிவிலக்குகள் பின்னாளில் விதிகளாகின்றன.

அறியாமல், தெரியாமல் எப்படி ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு கூற முடியும்? ஏனென்றால் அவ்வாறு கூறுவதற்கு எந்த ஒரு பெண்ணும் தகுதியானவர்தான் என்பதுதான் ஒரு ஆணின் கருத்து. அதைப் பொது வெளியில் கூறும் நபர் சாதாரண காலங்களில் எப்படி நடந்து கொள்வார்? நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? அந்த நிகழ்ச்சியை பார்த்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்களை விட அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்போர்தான் அதிகமாக இருப்போர்.

ஒருவர் முகநூலில் தோழிகள் இல்லையே என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிறார். அவருக்கு ஏகப்பட்ட லைக்குகள், நக்கலும் நையாண்டியுமான கமெண்ட்டுகள். இன்னொருவர் தனது முன்னாள் காதலியின் பிரிவைப்பற்றி பினாத்துக்கிறார். பதிவைப்போடுவோர்களும் லைக் போட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல; எப்போதும் உலகை தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிபவர்கள்; எல்லாவற்றுக்கும் கருத்துக்களும் ஆலோசனைகளும் கூறுபவர்கள் அவர்கள்.

பெண் பற்றிய இக்கருத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களின் பொதுக் கருத்துக்களை எங்ங்னம் பரிசீலிப்பது?

ஜெயலலிதாவையும் காயத்ரி ரகுராமையும் அரசியல் ரீதியில் விமர்சிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் அவர்களை பாலியல் ரீதியாக விமர்சிப்பதில்தான் பலருக்கும் அளவற்ற, மட்டற்ற மகிழ்ச்சி; அதில் ஒரு இன்பம்.  பெண்ணை வீழ்த்திவிட்ட நினைப்பு. காரில் தொங்கியபடி சென்ற மேயர் பிரியா, கீழே விழுந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று ஆபாசமாக, இழிவாகப் பேசும் சங்கிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

முகநூலில் பெண்கள் விதவிதமாக தங்களின் படங்களைப் பதிவிடுகிறார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் சுயமோகி ஆண்களின் புகைப்படங்களைப் பார்த்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? கேட்டால் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா என்பார்கள். ஆக, உலகில் உள்ள எல்லா பெண்களையும் காப்பாற்றுவதுதான் ஆண்களின் வேலை. யார் அந்த பணியை ஆண்களுக்கு வழங்கியது? நாங்களாகவே அதை எடுத்துக்கொண்டோம்.

பிறப்பின் அடிப்படையில் ஆண்களாகவே எடுத்துக்கொண்ட உரிமை அதுவல்லவா? பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு மற்ற சாதியினர் கட்டுப்பட்டதை எதிர்ப்போர் இதை  எதிர்ப்பதில்லை.

பல்வேறு அமைப்புகளிலிருந்து பாலியல் மற்றும் சீரழிவு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டவர்களுள் பெரும்பாலோர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று கவனியுங்கள். தாங்கள் செய்த தவறைப்பற்றி எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தாங்கள் ஏதோ சிந்தாந்த ரீதியிலான போராட்டம் நடத்தியதைப்போலவும் அதற்கு ஜனநாயகம் இல்லாமல் போனதால் வெளியேற்றப்பட்டோம் போன்ற தோற்றத்தை அல்லவா காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? நான் செய்ததெல்லாம் தவறே இல்லை, தவறாகப் பழிவாங்கப்பட்டுவிட்டேன், ஜஸ்ட் எச்சரித்துவிட்டு அனுப்ப வேண்டிய விசயம் அல்லவா? யார்தான் சரியாக இருக்கிறார்கள் என்று அடுத்த கணைகளைத் தயாராக வைத்திருப்பார்கள். செய்த தவறுகளைப்பற்றி கொஞ்சமும் வருந்தாத இவர்களைப்பற்றி என்ன முடிவுக்கு வர முடியும்?

தன்னுடைய மனைவியைத் தெருவில் வைத்து தகாத வார்த்தைகளால் வசை பாடி அடித்துத் துவைத்து பிறகு அந்தச் சுவடே இல்லாமல் ஊருக்கு, உபதேசம் செய்பவர்களை என்ன சொல்வது? அதெல்லாம் அப்படித்தான் இருக்கும், அவர் அரசியலில் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று மட்டும் நாம் ஒதுங்க முடியுமா?

சவுக்கு சங்கர் ஒரு பாலியல் குற்றவாளி என்பது ஊரறிந்த செய்தி. அது தொடர்பாக பொது மன்னிப்போ குற்ற உணர்வோ துளியும் இல்லாதவர். சவுக்கு சங்கர் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு, அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் இதுவரை எவ்வித பராமரிப்பு நிதி கூட கொடுக்க மறுப்பவர், என்றாலும் அவரின் ஆணாதிக்க வக்கிர செயல்பாடு விவாதத்திற்கு வரவில்லை. ஆனாலும் இன்றைக்கு மிகப்பெரிய ‘போராளியாக’ வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சவுக்கு சங்கரின் ரசிகர்களிடம் இது குறித்துக் கேட்டுப்பாருங்கள். இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது என்பார்கள். ஒரு பெண்ணை ஏமாற்றி தெருவில் விட்டுவிட்டு வந்த அயோக்கியனை எப்படி உங்களால் ஏற்றிப்போற்ற முடிகின்றது? அதுதான் உள்ளுக்குள் இருக்கும் ஆணாதிக்க – நுகர்வு பண்பாடு. இப்படி பெண் பித்தர்களாக இருப்பதையே பெருமையாகவும் சாதனையாகவும் கருதும் இச்சமூகத்தில் இன்னமும் பல சவுக்கு சங்கர்களுக்கு நிச்சயம் இடம் இருக்கும்.

0-0-0

அரசியல் என்றால் என்ன? மோடியை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் மட்டும்தானா? பாலியல் சீரழிவை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அரசியல் இல்லையா என்ன? இதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, பலரும் வேற என்ன செய்ய முடியும் என்று விலகிப்போகிறார்கள் அல்லது மௌனத்தை முன்வைத்து விட்டுப்போவார்கள்?

அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் பல காட்சிகள் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அதன் மீதான அரசின் பார்வை என்ன?  சமூகத்தின் பார்வை என்ன அதை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விக்கு அப்படத்தில் பதில் ஏதும் இல்லை.  ஒரு பெண்ணின் அந்தரங்கப் படங்களைப் பார்ப்பதும் பலருக்கும் பகிர்வதுமான இச்சமூகம் இனியும் நீடித்திருக்கத் தகுதியுடையதுதானா? இந்தக் கேள்வியைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.

ஆணாதிக்கத்தையும் நுகர்வுப் பண்பாட்டையும் எப்படி ஒழிப்பது?

பெண்ணை தன்னுடைய உடமையாக – சொத்தாகக் கருதும் இந்த நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும்; எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத் தூக்கியெறி என்ற மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் ஒழித்துக்கட்டாமல் அனல் மேலே பனித்துளி நாயகி போல கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? பேசாமல் இருப்பதற்கு கொஞ்சம் பேசுவதே மேல் என்பதுதான் பிரச்சினை.

ஆணாதிக்கம் அதற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவம், நுகர்வுப்பண்பாடு அதற்கு அடிப்படையான மறுகாலனியாக்கம் இவற்றை எப்படி மாற்றுவது? ஆணாதிக்க மற்றும் நுகர்வுப்பண்பாட்டில் இருந்து பெண் விடுதலை என்பது, உலகில் உள்ள அத்தனை கோடி ஆண்களிடமும் சென்று நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதன்மூலம் நடைபெறுவதல்ல; தனிநபர் மாறினால் எல்லாம் மாறும் என்ற மூடநம்பிக்கை நமக்கு எதையும் தரப்போவதில்லை.

ஆணாதிக்கத்துடனும் நுகர்வுப் பண்பாட்டுடனும் சமரம் செய்து அல்லது பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் சலுகை பெற்று வாழ முடியுமா என்ன?

பக்கத்து வீட்டுப்பையன் தானே என்று நம்பி அனுப்பிய 3 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து சூட்கேசில் அடைத்து துண்டாக்கி வீசினான் தஷ்வந்த். அவன் குற்றவாளி என்றால், அவனை அவ்வழக்கிலிருந்து விடுவிக்கச் சொத்துக்களை விற்ற அவனின் தாய் தந்தையரை என்ன செய்வது? இறுதியில் அவன் தன் தாயையே கொன்று போட்டான்.


படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !


இப்படிப்பட்ட தாய் தந்தையர் நிறைந்த உலகல்லவா இது? கார்கி படத்தில் வருவது போல எத்தனை பேர் பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும் தன் தந்தையைப் போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்? பொள்ளாச்சியில் பெண்களை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டோர்க்கு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினர் வழக்காடு மன்றத்தில் வந்து சண்டையிடவில்லையா?

ஆணாதிக்க வெறியனிடம் – பொறுக்கியிடம் சொல்லிப் புரிய வையுங்கள் அது உங்கள் திறமை. இருக்கட்டும், அவனின் தாயிடம் என்ன சொல்லி புரிய வைக்கப்போகிறீர்கள்?

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும். மனிதரை சகமனிதராக மதிக்காத இந்த சமூகம் அழித்து, ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது புரட்சியைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? தனிச் சொத்துடமையை ஒழிக்காமல் பிற்போக்கு விழுமியங்களை அறுத்தெறியாமல் சுரண்டலை அடித்து நொறுக்காமல் பெண்விடுதலை மட்டும் எப்படி சாத்தியம்?

புரட்சிதான் தீர்வு என்று பேசும்போது பலரும் கிண்டல் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் புரட்சி தீர்வு என்கிறீர்கள், இப்போதைக்கு என்ன ஆக வேண்டுமோ அதைப் பேசமாட்டீர்கள் என்பார்கள். மக்களுக்குச் சாத்தியமானதைப் பேசுங்கள் என்பார்கள்? பார்ப்பனிய – ஆணாதிக்க – நுகர்வுப் பண்பாட்டில் திளைத்திருக்கும் இச்சமூகத்தில் சாத்தியமான மாற்று என்ன என்பதைச் சாத்தியமானவர்கள்தான் கூற வேண்டும்.

தமிழ்