privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !

கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !

-

புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான தோழர் சாய்பாபா, உத்திரகண்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி, ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான மகேஷ் திர்கி, பாண்டு நரோதே ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், விஜய் திர்கி என்ற பழங்குடி இளைஞருக்குப் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கின்றது, மகாராட்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட செசன்சு நீதிமன்றம். “இதைவிட அதிகமான தண்டனை கொடுப்பதற்குச் சட்டத்தில் இடமில்லாத காரணத்தினால், ஆயுள் தண்டனைக்கு மேல் கொடுக்க முடியவில்லை” என்று நீதிபதி சூர்யகாந்த் ஷிண்டே தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)
குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)

சாய்பாபா 90% ஊனமுற்றவர், இதய நோயாளி. பிறர் உதவியில்லாமல் கழிவறைக்குக்கூடச் செல்ல முடியாதவர். ஹேம் மிஸ்ரா என்ற மாணவரும் ஊனமுற்றவர். சாய்பாபாவோ, மற்றவர்களோ குண்டு வைத்ததாகவோ, கொலை செய்ததாகவோ, காயம் ஏற்படுத்தியதாகவோ, குறைந்தபட்சம் ஆயுதம் வைத்திருந்ததாகவோ போலீசார் பொய்யாகக்கூடக் குற்றம் சாட்டவில்லை. இருந்த போதிலும், இந்துத்துவ பயங்கரவாதிகள், ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளிலெல்லாம் எந்த நீதிமன்றமும் காட்டாத ஒரு ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் சாய்பாபா மீது காட்டியிருக்கிறார் நீதிபதி.

தடா, பொடா ஆகிய சட்டங்களைக் காட்டிலும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act) 13-வது பிரிவு (சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்பது, தூண்டுவது அல்லது நியாயப்படுத்துவது), 18-வது பிரிவு (பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சதி செய்வது), 20-வது பிரிவு (பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருப்பது), 39-வது பிரிவு (பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தேடுவதற்காக பிரச்சாரம் செய்வது) – இவையெல்லாம் சாய்பாபா உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கின் குற்றப் பிரிவுகள். ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் என்ன?

அவர்கள் மாவோயிஸ்டு கட்சி மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள்; மாவோயிஸ்டு கட்சியின் இலக்கியங்கள் அவர்களிடம் இருந்தன; அதன் உறுப்பினர்கள் என்ற முறையில் பொது ஒழுங்கைக் குலைக்கும் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் – இவைதான் குற்றச்சாட்டுகள். அதாவது, சாய்பாபாவும் பிறரும் கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் கூறியிருக்கும் குற்றச்சாட்டு.

எந்தவொரு குறிப்பான குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் சாய்பாபாவோ மற்றவர்களோ தண்டிக்கப்படவில்லை. சாய்பாபா, அவர் கொண்டிருந்த கருத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குடிமகனை அவர் கொண்டிருக்கும் கருத்துக்காகவே தண்டிக்க முடியும் என்ற வாய்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனை கூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக் கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சாய்பாபாவை இப்படி ஒரு வழக்கில் கைது செய்வதற்குப் பல மாதங்கள் முன்னதாகவே, மத்திய அரசு தனது நோக்கத்தை வெளிக்காட்டி விட்டது. நவம்பர் 2013-இல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.  “நகரங்களின் உள்ள மாவோயிஸ்டு கொள்கையாளர்களும் அதன் ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள்தான் மாவோயிஸ்டு இயக்கத்தை உயிருடன் வைத்திருப்பவர்கள். மாவோயிஸ்டு கொரில்லாப் படையின் உறுப்பினர்களைக் காட்டிலும், இவர்கள்தான் பல விதங்களில் ஆபத்தானவர்கள்.”

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள (இடமிருந்து) ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, பழங்குடியினத்தைச் சேர்ந்த பாண்டு நரோதே, மகேஷ் திர்கி, பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி மற்றும் விஜய் திர்கி.

இவ்வளவு ஆத்திரமாக மத்திய அரசு பேசுவதற்குக் காரணம் இருந்தது. மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பாரம்பரிய உரிமையான காடுகளைப் பறித்து, பன்னாட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடைமையாக்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் எதையும் மக்களின் போராட்டங்கள் காரணமாக அரசால் அமல்படுத்த முடியவில்லை. அதாவது, கனிம வளங்களை அம்பானிகளுக்குத் தாரை வார்க்கும் “வளர்ச்சித் திட்டங்கள்” எதையும் அரசால் அமல்படுத்த முடியவில்லை.

எனவே, மாவோயிஸ்டு கொரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பழங்குடி மக்களை அடித்துத் துரத்தும்பொருட்டு சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை உருவாக்கி, இலட்சக்கணக்கான பழங்குடி மக்களைக் கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தியது. அரசாங்கமே சட்டவிரோத கூலிப்படையை இயக்குவது அம்பலமாகி சந்தி சிரித்ததால், 2010-இல் காட்டு வேட்டை (Operation Greenhunt) என்ற பெயரில் அதிகாரபூர்வமான படையெடுப்பையே அறிவித்தது, மன்மோகன் அரசு.

ஒரு பகை நாட்டுக்கு எதிரான போரைப் போன்று, சொந்த நாட்டு மக்கள் மீதே வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட எல்லா வடிவங்களிலும் போர் தொடுக்க ஆயத்த நிலையில் இருந்த இந்திய அரசு, உள்நாட்டிலும் உலகளவிலும் எழுந்த கண்டனக் குரல்களின் காரணமாக, அந்த போரையே கைவிட வேண்டியதாயிற்று. கையாலாகாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை உலக முதலாளி வர்க்கம் காறித் துப்பியது. அடுத்த பிரதமராக மோடியைத் தயார் செய்யும் முயற்சியிலும் இறங்கியது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் பின்புலம் இதுதான்.

காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் எழுப்பிய அருந்ததி ராய், பிரசாந்த் பூஷண் முதலானோர் முதல் நோம் சோம்ஸ்கி வரையிலான அறிவுத்துறையினர் யாரும் மாவோயிஸ்டுகள் அல்லர். வளர்ச்சி என்ற பெயரில் பொதுச்சொத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிடுவதையும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதையும், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்குவதையும், இதற்காக அப்பட்டமான சட்ட மீறல்களில் அரசு ஈடுபடுவதையும் மக்கள் மீது போர் தொடுப்பதையும் அவர்கள் எதிர்த்தார்கள். இதைத் தவிர, வேறு எந்த சட்டவிரோதமான காரியத்திலோ, வன்முறையிலோ அறிவுத்துறையினர் ஈடுபடவில்லை. இப்படித் தேசிய, சர்வதேச அளவில் காட்டு வேட்டைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குரல், அரசைத் தோற்கடித்தது. இப்படிக் குரலெழுப்பச் செய்ததில் தோழர் சாய்பாபாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனைகூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக்கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகப் பொதுக்கருத்தை உருவாக்கினார் சாய்பாபா. இது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்று சட்டம் அங்கீகரிக்கிறது. குறிப்பான வன்முறை நடவடிக்கை அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அன்றி, தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காகவோ, அவ்வியக்கத்தின் உறுப்பினர் என்பதற்காகவோ ஒருவரைத் தண்டிக்க இயலாது என உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் கூறுகின்றன.

ஆனால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாது என்று கூறுவதற்கு இந்த நீதிபதி குறிப்பிட்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா? 1982 முதல் கட்சிரோலி மாவட்டத்தில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் அரசு அமல்படுத்த முடியவில்லையாம். அதற்குக் காரணம் நக்சலைட்டுகளின் வன்முறைதான் என்பதால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாதாம். சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு குற்றவியல் வழக்கில், எச்.ராஜாவின் மொழியில் தீர்ப்பளித்திருக்கிறார் இந்த நீதிபதி. இவ்வழக்கு விசாரணை எப்படி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்கண்ட ஒரு வரியே போதுமானது.

ஆகஸ்டு 2013-இல் சந்திரபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மகேஷ், பாண்டு, ஹேம் மிஸ்ரா ஆகியோரை கட்சிரோலி மாவட்டத்தில் கைது செய்ததாகப் பொய்யாகக் காட்டியது போலீசு. ஒரு மாதத்துக்குப் பின் டில்லியில் இருக்கும் சாய்பாபாவின் வீட்டுக்குள் திமுதிமுவென்று நுழைந்த மகாராட்டிர போலீசார், அவர் வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட பொருட்களையும் ஆவணங்களையும் திருடிச் சென்றனர். இந்த நடவடிக்கையை சட்டபூர்வமானதாகக் காட்டும் பொருட்டு, திருட்டுப் பொருளைத் தேடுவதற்கான வாரண்ட் ஒன்றை மகாராட்டிர மாஜிஸ்டிரேட்டிடமிருந்து பெற்று வந்திருந்தது போலீசு. இந்த நடவடிக்கையை எதிர்த்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் அவர் வீட்டின் முன் திரண்டுவிட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, யாருடைய ஒப்புதலோ சாட்சியமோ இல்லாமல்தான் இந்த தடயங்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீசு கொண்டு வந்த சாட்சிகளே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதாவது, சாய்பாபாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகின்ற ஆவணங்கள் எதுவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டவை அல்ல என்று சாய்பாபாவின் வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக நிறுவிவிட்டனர். இதை நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

அதுமட்டுமல்ல, கணினி உள்ளிட்ட மின்னணு சாட்சியங்கள் (Digital evidence) தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை நிறுவப்பட்டால்தான் நீதிமன்றம் அதனைச் சாட்சியமாக ஏற்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் விசாரணை நீதிமன்றம் மதிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான தடயங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

போலீசார் கொண்டு வந்து நிறுத்திய சாட்சிகளுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் கூடத் தெரியவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை அடையாளம் காட்ட அழைத்துவரப்பட்ட சாட்சிகளுக்கு பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற சொற்களுக்கான பொருளே தெரியவில்லை. போலீசார் தங்களை விடுதியில் தங்க வைத்து, குளிப்பாட்டி அழைத்து வந்ததை, குறுக்கு விசாரணையின்போது சாட்சிகள் இயல்பாக விளக்கினர். அனைத்தும் பொய் சாட்சிகள் என்று தெரிந்தும், அவற்றை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.

பேராசிரியர் சாய்பாபா மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஆள்தூக்கி கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தை நீக்கக் கோரியும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கம்.

இத்தனைக்கும் மேல், சாய்பாபாவிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்டவை என்று போலீசார் காட்டியிருந்த ஆவணங்களும் நூல்களும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் எந்த விதமான இரகசியமோ, சதித்திட்டமோ இல்லை. இலங்கை போர்க்குற்றம் குறித்த வீடியோக்கள், அருந்ததி ராய் கட்டுரைகள், கயர்லாஞ்சி படுகொலை தொடர்பான கட்டுரைகள், காஷ்மீர் குறித்த பி.பி.சி.யின் ஆவணப்படம் போன்றவைதான் கைப்பற்றப்பட்ட திடுக்கிடும் ஆவணங்கள். என்ற போதிலும் இவற்றையெல்லாம் அபாயகரமான ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறது தீர்ப்பு.

மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த நர்மதா என்ற தோழருக்கு கணினிச் சில்லு ஒன்றை ஹேம் மிஸ்ரா என்ற மாணவர் மூலம் கொடுத்தனுப்பினார் என்பதும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் இணைச்செயலாளராக இருந்தார் என்பதும் சாய்பாபா மீதான கூடுதல் குற்றச்சாட்டுகள்.

பு.ஜ.முன்னணி என்ற அமைப்பு ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்தான் தடை செய்யப்பட்டுள்ளதேயன்றி, மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை. வழக்கு நடத்தப்பட்ட மகாராட்டிரத்திலும், சாய்பாபா செயல்பட்டு வந்த டெல்லியிலும் தடை செய்யப்படவில்லை. இருப்பினும் அது தடை செய்யப்பட்ட அமைப்புதான் என்று நீதிபதியே ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் தண்டனையும் வழங்கியிருக்கிறார். சுமார் 827 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு முழுவதும் இத்தகைய அபத்தங்களும் முரண்பாடுகளும் நிரம்பி வழிகின்றன என்று கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

பொதுவாக அரசோ போலீசோ பொய் வழக்கு போடும்போது, “உங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ள வேண்டியதுதானே” என்றொரு வாதம் எல்லோராலும் வைக்கப்படும். அதாவது, ஒருவேளை சட்டத்தை மீறி ஒரு குடிமகனின் உரிமையை அரசு பறித்திருந்தாலும், ஜனநாயகத்தின் சுயேச்சையான தூணாகிய நீதிமன்றம் அவருக்குச் சட்டப்படியான நிவாரணத்தை வழங்கிவிடும் என்பதுதான் நீதித்துறை குறித்து ஏற்படுத்தப்படும் இந்த நம்பிக்கைக்கு அடித்தளம்.

அந்த நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை என்பதைப் பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் நிரூபித்து வருகின்றன. இது அத்தகையதோர் தீர்ப்பு. போதிய சாட்சியங்கள் இல்லாத போதிலும், தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும்பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில், மறுக்க முடியாத சாட்சியங்கள் இருந்தும், நான் தான் செய்தேன் என்று நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்த அசீமானந்தா போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

நக்சலைட்டுகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால், அவர்கள் வளர்ச்சித் திட்டத்தின் எதிரிகள் என்கிறார் நீதிபதி. “ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் போன்ற ‘வளர்ச்சித்திட்டங்களை’ எதிர்ப்பவர்கள் அனைவரும் நக்சலைட்டுகளே” என்று வெறி பிடித்தவர்களைப் போலக் கூச்சலிடுகிறார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கானது என்று இன்னமும் யாரேனும் கருதுகிறீர்களா?

மண்ணைப் பறித்து, மலடாக்கி, மக்களை அகதிகளாக்கும் கார்ப்பரேட் பயங்கரவாத நடவடிக்கையின் பெயர் – வளர்ச்சி. இதற்கு எதிராக வாழ்வுரிமைக்கு குரல் கொடுப்போரின் பெயர் பயங்கரவாதிகள்.