முகப்புகட்சிகள்காங்கிரஸ்‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!

‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!

-

ஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நினைவு மறையும் முன்பே, அப்சல் குருவையும் தூக்கிலேற்றிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு. அப்சல் குரு பிப்ரவரி 9 அன்று காலையில் இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டதை, “ஒரு தீவிரவாதிக்கு அளிக்கப்பட்ட நியாயமான, சட்டப்படியான தண்டனை” எனக் கூறி நியாயப்படுத்தி வருகிறது, காங்கிரசு கும்பல். ஆனால், அப்சல் குருவைக் குற்றவாளி என நம்புவோரிலும் கூட ஒரு சாரார், மிகவும் கயமைத்தனமான, வெட்கக்கேடான முறையிலும் சட்ட நடைமுறைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்திலும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பதைக் கண்டித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிட்டதில் சட்டநடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இத்தூக்கே காங்கிரசு கூட்டணி அரசு நடத்தியிருக்கும் அரசியல் படுகொலையாகும்; போலீசு நடத்தும் போலி மோதல் கொலைக்கு ஒப்பானதாகும். தீவிரவாத அபாயம் குறித்து அனைத்து ஓட்டுக்கட்சிகளும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பதால், பா.ஜ.க., சி.பி.எம். உள்ளிட்ட மற்ற ஓட்டுக்கட்சிகளும் இப்படுகொலைக்கு வக்காலத்து வாங்கி வருகின்றன.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திர் பால் சிங் புல்லரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் தமது கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க நீண்ட காலமானதால், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் புல்லரின் மனு மீது விசாரணை நடத்தியபோதே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கருணை மனு அளித்தவர்களின் விவரங்களைக் கேட்டுப் பெற்றிருப்பதோடு, அவ்வழக்கின் தீர்ப்பையும் ஒத்தி வைத்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்கவில்லை என்பதோடு, தன்னிடம் நிலுவையில் இருந்த 14 கருணை மனுக்களில் அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குரு ஆகிய இருவரின் கருணை மனுக்களை மட்டும் தேர்வு செய்து நிராகரித்திருக்கிறார். காங்கிரசு தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் அவரை அரசுத் தலைவராக்கியது. அந்த நம்பிக்கையை முகர்ஜி பொய்ப்பித்துவிடவில்லை என்பதைத்தான் கசாப் மற்றும் அப்சல் குரு விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

“தூக்கு தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிப்பட்டால், அதற்கான காரணங்களை அக்கைதிக்குத் தெரிவிக்க வேண்டும்; கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கும், தூக்கிலிடும் தினத்திற்கும் இடையே 14 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். இக்கால அவகாசத்தின்பொழுது அக்கைதி தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடருவதற்கு உரிமை உண்டு. தூக்கிலிடும் தினத்தைக் கைதியின் உறவினர்களுக்கு முன்னரே தெரிவித்து, அவர்கள் கடைசியாகத் தண்டனைக் கைதியைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்ற சட்ட நடைமுறைகள், உரிமைகள் அனைத்தும் அப்சல் குரு விவகாரத்தில் மீறப்பட்டுள்ளன; மறுக்கப்பட்டுள்ளன. மேலும், அப்சல் குருவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. அவரது உடலைத் திருப்பித் தருமாறு கோரிய அப்சல் குருவின் மனைவியின் கோரிக்கை மனிதாபிமானமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த அநீதி அப்சல் குரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு முசுலீம் மீதும் இழைக்கப்பட்டிருக்கிறது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எந்தவொரு அரசியல் ஆர்ப்பாட்டமும் நடப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாள் தொடங்கி ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டது; இதையும் மீறி நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; கைபேசி, இணைய தளம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் மட்டுமின்றி, உள்ளூர் பத்திரிகைகள் வெளிவருவதும் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்டன.

அப்சல் அஞ்சலி
காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் அப்சல்குருவுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைக் கூட்டம் (மேலே); அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி, உ.பி. அலிகார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட டெல்லிப் பல்கலைக்கழக உருது பேராசிரியரும் காஷ்மீரைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர். கீலானி, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அன்று டெல்லி போலீசாரால் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.

காஷ்மீரில் இயங்கிவரும் ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானியின் மருமகனும் (டெல்லியிலிருந்து வெளிவரும்) டி.என்.ஏ., என்ற ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியருமான இஃப்திகார் ஜிலானி, அவரது மனைவி, பள்ளி செல்லும் வயதுடைய அவரது இரண்டு குழந்தைகள் அனைவரும் டெல்லி போலீசாரால் அவரது வீட்டிலேயே ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டனர்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது இந்து மதவெறிக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி போலீசும் உடந்தையாக இருந்தது.

காங்கிரசு கட்சியின் தலைமை மிதவாத இந்துத்துவா அரசியலுக்குப் பதிலாக, இந்து மதவெறி அரசியலைக் கையிலெடுத்திருப்பதைத்தான் இத்தூக்கு தண்டனைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் காங்கிரசு தன்னைப் பலமான அரசாகக் காட்டிக் கொண்டு, இந்து நடுத்தர வர்க்கத்தின் ஓட்டுக்களைக் கவர்ந்துவிடவும் திட்டம் போடுகிறது. அதேசமயம், அப்சல் குரு அரசியல் நோக்கங்களுக்காகத் தூக்கில் தொடங்கவிடப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, பாலாறு குண்டுவைப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் கருணை மனுக்களையும் அவசர அவரசமாக ரத்து செய்து, அவர்களையும் தூக்கு மேடையில் கொண்டுவந்து நிறுத்தியது, காங்கிரசு கும்பல்.

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் மட்டுமல்ல; சாதாரண பொதுமக்கள்கூட உச்ச நீதிமன்றமே அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது என வாதிட்டு வருகின்றனர். “உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் இருக்க முடியாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் என்பது புனிதமான, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்த, கறைபடியாத நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு” என்றவாறு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம்தான் இந்த வாதத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

அப்சல் கை
இட்லரில் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்து விட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின் போது உண்மை வெளியே வந்து விட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப்பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டு விட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான முறையில், நியாயத்துக்குப் புறம்பாக காவிரி நதிநீர்ப் பங்கீடு, நர்மதா அணைக்கட்டு உள்ளிட்டுப் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. பெரியாறு அணை வழக்கில் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் எனத் தான் வழங்கிய தீர்ப்பையே மறுத்த கோமாளித்தனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்திருக்கும் பல தீர்ப்புகள் வழிகாட்டியாகக் கொள்ளமுடியாதபடி சுயமுரண்பாடு உடையதாக இருப்பதையும் மறுக்கமுடியாது. பல்வேறு தூக்கு தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட அறியாமையின் காரணமாக மனம்போனபடி தீர்ப்பளித்திருப்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட பாயிண்டுகளைக் கொண்டு அப்சல் குருவின் தூக்கை உறுதி செயவில்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் டிசம்பர் 13, 2001 அன்று, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்பொழுது, அக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குண்டுத் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. இத்தாக்குதலை நடத்த வந்த ஐந்து பேரும் தாக்குதலின்பொழுதே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த மறுநாளே, இந்தச் சதியில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பலரைக் கைது செய்துவிட்டதாக அறிவித்தது, டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு. தாக்குதல் நடந்த 17-வது நாளே இவ்வழக்கின் புலன் விசாரணையும் முடிவுக்கு வந்துவிட்டது.

இவ்வளவு விரைவாகத் தாக்குதலின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதற்கு டெல்லி போலீசின் திறமை காரணமா அல்லது தாக்குதல் நடத்த வந்த ‘தீவிரவாதிகளின்’ சிறுபிள்ளைத்தனம் காரணமா என்பதுதான் இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது. ஏனென்றால், தாக்குதல் நடத்தவந்த ஐந்து பேரும் தாம் வந்த காரின் முகப்புக் கண்ணாடி மீதே, “நாங்கள் இந்தியாவை அழிக்க விரும்புகிறோம்; முட்டாள் வாஜ்பாயியையும் அத்வானியையும் நாங்கள் கொல்வோம்” என்றவாறு பல தீவிரவாத வாசகங்கள் அடங்கிய “ஸ்டிக்கரை” ஒட்டியிருந்தனர்; தீவிரவாதிகளுள் ஒருவனெனக் கூறப்படும் முகம்மது, தாக்குதலுக்குச் சற்று முன்பாக, அப்சல் குருவைக் கைபேசி வழியாக மூன்று முறை அழைத்து, “எல்லாம் திட்டப்படி நடந்துவருவதாக”க் கூறியதை போலீசு கண்டுபிடித்திருக்கிறது. இவ்வளவு சாட்சியங்களையும் போலீசுக்குக் கொடுத்துவிட்டுத்தான் அந்த ஐந்து பேரும் மாண்டு போயுள்ளனர்.

இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் முட்டாள்தனமாகத் திட்டம் தீட்டினார்களா, இல்லை நாடாளுமன்றத் தாக்குதலே பா.ஜ.க. ஆட்சியில் நடத்தப்பட்ட நாடகமா என்ற சந்தேகம் இன்றுவரையிலும் தீரவில்லை. போலீசும் இராணுவமும் அப்பாவி முசுலீம்களைப் பிடித்துப் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டுத் தீவிரவாதிகளைக் கொன்றதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். அரசும் நீதிமன்றமும்கூட பலசமயங்களில் இந்தப் போலி மோதல்கொலைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. மாலேகான், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்புகளை இந்து தீவிரவாதிகள் நடத்திவிட்டு, பழியை முசுலீம் தீவிரவாதிகள் மீது சுமத்தினார்கள். இந்தியா, பாகிஸ்தானுக்குள் உளவாளிகளை அனுப்புவதும், அங்கிருக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு உதவுவதும்; பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்புவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. முசுலீம் தீவிரவாதப் பிரச்சினை இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருப்பதால், நாடாளுமன்றத் தாக்குதலை இந்த இரண்டு தரப்பில் யார் வேண்டுமானாலும் நடத்தியிருக்கக்கூடும்.

ஆனால், ஒரு பாரபட்சமற்ற விசாரணை தொடங்கும் முன்பே, இத்தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஐந்து பேரும் வைத்திருந்த அட்டைகள், இன்ன பிற சாட்சியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி “அவர்கள் ஐந்து பேரும் பாகிஸ்தானியர்கள்” எனக் கொளுத்திப் போட்டார். இந்த பாகிஸ்தான் பின்னணிக்கு வலு சேர்க்கும் விதமாக, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற முசுலீம் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆஸார், தாரிக் அகமது மற்றும் காஸி பாபா ஆகிய மூவரும் இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டுள்ளனர் என டெல்லி போலீசாரால் குற்றஞ்சுமத்தப்பட்டனர். சதியிலோ, தாக்குதலிலோ பங்கேற்காத, அதேசமயம் தாக்குதலுக்கு உதவியதாகச் சொல்லப்பட்ட அப்சல் குரு, எஸ்.ஏ.ஆர். கீலானி, ஷௌஹத் ஹுசேன், ஷௌஹத்தின் மனைவி அஃப்சான் குரு ஆகிய நால்வர் மட்டுமே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அப்சல் குருவின் இளைய சகோதரன் ஹிலாலைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டுதான், போலீசார் அப்சலிடம் விசாரணை நடத்தினர்; வாக்குமூலத்தைப் பெற்றனர். இது மட்டுமின்றி, டெல்லி சிறப்பு போலீசு வழக்கத்துக்கு மாறான மற்றும் சட்டவிரோதமான முறையில் அப்சல் குருவைத் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நேரடி பேட்டி அளிக்க வைத்து, அந்நேர்காணலில் நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்குப் பங்கிருப்பதாகச் சாட்சியம் அளிக்கவும் வைத்தது.

அப்சல் குருவை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது என்பது பச்சையாகவே அம்பலமாகியிருந்ததால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எனினும் உச்ச நீதிமன்றம், “இது போன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும் சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது இயலாத ஒன்று” எனக் கூறிவிட்டு, கிடைத்திருக்கும் சாட்சியங்களும் சூழ்நிலைகளும் அப்சல் குருவிற்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்கின்றன எனத் தீர்ப்பெழுதியது.

“நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும், கைபேசி சிம்கார்டையும் அப்சல் குருதான் தீவிரவாதிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்; அவரது மடிக்கணினியில் நாடாளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் நுழைவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியான அடையாள அட்டைகள், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதாகக் காட்டும் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன; தாக்குதலின்பொழுது கொல்லப்பட்டவர்களை அப்சல்தான் அடையாளம் காட்டினார்” என்பவை அப்சல் குருவுக்கு எதிராக போலீசு முன்வைத்த முக்கிய சாட்சியங்கள்.

இந்த சாட்சியங்களுக்கும் அப்சல் குருவுக்குமான தொடர்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை; மேலும், விசாரணையின்பொழுது அப்சல் குருவுக்கு எதிராகக் கூண்டில் நிறுத்தப்பட்ட சிம் கார்டை விற்றவர், காரை விற்றவர் போன்ற சாட்சியங்கள் போலீசால் தயாரிக்கப்பட்டவை என்பதும் பளிச்செனத் தெரிந்தது.

நாடாளுமன்றத் தாக்குதல் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என ஊதிப் பெருக்கப்பட்டு, பாக். மீது போர் தொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தது பா.ஜ.க. கூட்டணி அரசு. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகள் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலைகளுக்கு இடையே நடந்துவந்த விசாரணையிலோ, எஸ்.ஏ.ஆர். கீலானியும் அஃப்சான் குருவும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்; ஷௌகத் ஹுசேனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைப் பத்தாண்டு தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இப்பொழுது எஞ்சியிருப்பது அப்சல் குரு மட்டும்தான்.

அப்சல் குரு தனது ஏழ்மை நிலை காரணமாக, தடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபொழுது திறமையான வழக்குரைஞர்களை வைத்து வாதாட முடியாமல் இருந்தார். அவருக்காக வாதாட அரசு நியமித்த நீரஜ் பன்சால் என்ற வழக்குரைஞர் அனுபவமில்லாதவர் என்பதோடு, அவர், கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அப்சல் அடையாளம் காட்டியதை – அப்சலுக்கு எதிராக போலீசு முன்வைத்த இந்த முக்கிய சாட்சியத்தைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார். போலீசின் இந்த சாட்சியத்தை உடைக்காமல் ஏற்றுக் கொண்டதன் மூலம் அப்சலின் கழுத்தில் சுருக்கு விழுவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தார், அந்த இளம் வழக்குரைஞர். இவருக்குப் பதிலாக வேறு சில வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படி அப்சல் கோரினார். ஆனால், அப்சலுக்காக வாதாட முன்வந்தால், இந்து மதவெறிக் கும்பல் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களுள் ஒருவர்கூட அப்சலின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்ட அறிவோ, அனுபவமோ இல்லாத அப்சல், தனக்கு எதிரான சாட்சியங்களைத் தானே குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“காஷ்மீரின் சிறப்பு அதிரடிப் படையுடன் நெருங்கிய தொடர்புடைய தாரிக் என்பவன்தான், தாக்குதலில் கொல்லப்பட்ட முகம்மதுவை என்னிடம் அறிமுகப்படுத்தினான். அப்படையைச் சேர்ந்த திராவிந்தர் சிங் என்ற அதிகாரியும் தாரிக்கும் கூறியபடிதான் முகம்மதுவை டெல்லிக்கு அழைத்துவந்து வீடு பார்த்துக் கொடுத்தேன்; கார் வாங்கிக் கொடுத்தேன்; எனது குடும்பத்தாரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியதையடுத்துதான், நான் கொல்லப்பட்டவர்களை போலீசு சொல்லிக் கொடுத்தபடி அடையாளம் காட்டினேன்” என அப்சல் கதறியதை எந்தவொரு நீதிமன்றமும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த வழக்கில் அப்சலுக்கு எதிராக வலுவான, நேரடியான சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்களோ அவருக்குத் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை. மேலும், அச்சாட்சியங்கள் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செவதற்கு உச்ச நீதிமன்றம் சட்டத்திற்குப் பதிலாக செண்டிமென்டுக்குள் புகுந்து கொண்டது. “இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” எனத் தீர்ப்பெழுதினார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

அப்சல் மற்றவர்கள்
கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதையடுத்து, தமது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்திருக்கும் (இடமிருந்து) தேவேந்தர் பால் சிங் புல்லர், முருகன், பேரறிவாளன், சாந்தன்.

இட்லரின் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்துவிட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின்பொழுது உண்மை வெளியே வந்துவிட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப் பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டுவிட்டார்.

1980-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த பச்சன் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில், “அரிதினும் அரிதான வழக்கிலும்கூட, வேறு தண்டனை வழங்க முடியாது என்பதைக் கேள்விக்கிடமற்ற முறையில் நிரூபித்த பிறகுதான், தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 1980-க்கு முன்பு வரை கொலைக்குக் கொலைதான் தண்டனை என்ற வகையில் கொலைக் குற்றங்களுக்கெல்லாம் தூக்குத் தண்டனையை மட்டுமே அளித்து வந்த இந்திய நீதிமன்றங்கள், அதன் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பைத்தான் முன்மாதிரியாகக் கொள்வதாகக் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டு, ஒருவரின் தண்டனை பத்தாண்டாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அப்சல் குருவிற்கு பச்சன் சிங் வழக்கு தீர்ப்பின்படிதான் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?

ஒரு குற்றவாளிக்கு தண்டனை அளிப்பது மட்டும்தான் சட்டப்படி நடக்கிறது; ஆனால், ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்மானிப்பது எல்லா நேரத்திலும் சட்டப்படி நடப்பதில்லை. நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்பது நிரூபணமான பிறகும் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; உறுதி செயப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலோ, அச்சதியில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தலைவர்களுக்கு நேரடிப் பங்கிருப்பது உலகிற்கே தெரிந்திருந்தும், அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர்களைச் சதி வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிலோ, “நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாதவரை, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தேசிய சதிச்செயல் எனக் கூறக் கூடாது” எனக் கூறும் அளவிற்கு நீதிபதிகளிடம் இந்து மதவெறிப் பாசம் பொங்கி வழிகிறது.

ஒரிசா மாநிலத்தில் இந்து மதவெறிக் கும்பல் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிரோடு கொளுத்திய வழக்கில், முதன்மைக் குற்றவாளியான தாரா சிங்குக்கு விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஒரிசா உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. உச்ச நீதிமன்றம் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, “ஸ்டேன்ஸ் பாதிரியார் ஒரிசாவின் மனோகர்பூர் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்; அதற்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகத்தான் இக்குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது” எனக் கூறியதோடு, மத மாற்றத்தை இந்துத்துவா நோக்கிலிருந்து கண்டித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, குற்றத்தின் தீவிரத்தன்மையையே நீர்த்துப் போகச் செய்தது.

குஜராத் முசுலீம் படுகொலைகளின்பொழுது நடந்த நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அப்படுகொலையின் முதன்மைக் குற்றவாளியும் மோடிக்கு நெருக்கமானவருமான கோத்நானிக்குத் தூக்கு தண்டனை அளிக்க மறுத்தது, சிறப்பு நீதிமன்றம். “உலகெங்கும் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்து மேலோங்கி வருவதால், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை அளிக்க முடியாது” என விளக்கமளித்தார், நீதிபதி. இந்த விளக்கம் அப்சல் குருவுக்குப் பொருந்தாமல் போனதற்குக் காரணம், அவர் முசுலீம் என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

சந்தோஷ்குமார் பரியார் வழக்கு மற்றும் சங்கீத் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மன்றங்கள், 1980-க்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புகளை ஆராந்து, “அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு மனம்போன போக்கில் பொருள் கொள்ளப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக” தமது தீர்ப்புகளில் கூறியுள்ளன. சந்தோஷ்குமார் பரியார் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இவ்வேழு தீர்ப்புகளும் நீதிபதிகளின் சட்ட அறியாமையால் அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புகள் எனக் கூறியிருக்கிறது, உச்ச நீதிமன்ற அமர்வு. தவறாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்புகளின் அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர்.

சட்ட அறியாமை என மெலிதாகக் கண்டிக்கப்படும் நீதிபதிகளின் இந்த மனப்பாங்கு, அவர்களின் தன்னிச்சையான அதிகாரத் திமிர் தவிர வேறல்ல. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாபண்ணா என்பவருக்கும்; பாலாறு குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சைமன், ஞானப்பிரகாசம், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கும் கீழ்நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக உயர்த்தியதை, இந்த அதிகாரத்திமிருக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

குறிப்பாக, பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வால் தள்ளுபடி செயப்படுகிறது. அதேசமயம், அவ்வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கிறது.

அ.தி.மு.க. குண்டர்கள் கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கிலோ உச்ச நீதிமன்றம் வேறொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. இவ்வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேரும் இத்தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட உடனேயே அக்குற்றவாளிகள் இதனை எதிர்த்தும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செதனர். இம்மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அரிதினும் அரிதான அப்பயங்கரவாத வழக்கை விரைவாக விசாரிக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

கொடைக்கானல் விடுதி வழக்கில் பார்ப்பன ஜெயாவை நீதிமன்றம் தண்டித்ததைக் கண்டிப்பது என்ற பெயரில்தான் இப்படுகொலையே நடந்தது. அப்சல் குரு, அஜ்மல் கசாப் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் பா.ஜ.க., சோ ராமஸ்வாமி உள்ளிட்ட பார்ப்பன-பாசிசக் கும்பல், இந்த மூவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கோர முன்வருமா? இந்த மூன்று குற்றவாளிகளுக்குச் சட்ட, பண உதவிகளைச் செய்துவரும் அ.தி.மு.க. தலைமையை அம்பலப்படுத்தத் துணியுமா?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவராக இருந்த நீதிபதி கே.டி. தாமஸ், தான் பணி ஓய்வுபெற்ற பிறகு செப்.2, 2011 அன்று “தி ஏசியன் ஏஜ்” என்ற நாளிதழைச் சேர்ந்த செய்தியாளரிடம், “தான் அவ்வாறு மரண தண்டனை வழங்கிய ஆயத்திற்கு தலைமை தாங்க நேர்ந்தது கெடுவாய்ப்பானது” என நொந்து கொண்டதோடு, “கொலையுண்டவர் புகழ்பெற்றவராக இருந்தால், அவ்வழக்கில் மரண தண்டனை வழங்குவது அடிக்கடி நடக்கிறது. அக்கொலையை அரிதிலும் அரிதான ஒன்றாகச் சித்தரித்துத் தங்களது முடிவை நியாயப்படுத்துவது நடக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

குற்றவாளி ஏழையாக இருந்தால், தாழ்த்தப்பட்டவராக, சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவராக இருந்தால், முசுலீம் தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அதிகபட்ச தண்டனை; குற்றவாளி பணக்காரனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாக, இந்து தீவிரவாதியாக, அரசியல் செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் அவனுக்கு வேறு மாதிரியான தீர்ப்பு என ஆளுக்குத் தக்கபடியும் சட்ட அறிவு இல்லாமலும்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்கிறார்கள் எனும்பொழுது; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியிலும் பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் இருப்பது அம்பலமாகியிருக்கும்பொழுது இந்நீதிமன்றத்தை எப்படி உயரியதாகவும் அம்மன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்றும் சொல்ல முடியும்? இந்த உண்மைகள் யாவும் சாதாரண மாஜிஸ்டிரேட் கோர்ட் நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை அல்லவா நிரூபிக்கின்றன.

நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற சட்டப் பாதுகாப்பின் கீழ்தான் அவற்றின் ‘புனிதம்’ பாதுகாக்கப்படுகிறதேயொழிய, அரசின் மற்ற உறுப்புகளைப் போலவே நீதிமன்றங்களும் சீரழிந்து, தீர்ப்பளிக்கும் தார்மீக பலத்தை இழந்துதான் நிற்கின்றன.

– மு செல்வம்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க