நேற்று (21-05-2024) கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் பதவி ஓய்வுப் பெற்றதையடுத்து அதற்கான விடைபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். சங்கி என்று நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விழாவில் பேசிய நீதிபதி சித்த ரஞ்சன், ”நான் சிலரின் வெறுப்புக்கு ஆளானாலும் பரவாயில்லை. இங்கே ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். நான் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தேன். சிறுவயது முதல் என் இளம் பருவம் வரை அதில்தான் கழித்தேன். அதற்காக நான் ஆர்.எஸ்.எஸ்-க்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில்தான் எனக்கான தைரியம், எல்லோரையும் சமமாக பார்க்கும் குணம், தேசபக்தி, வேலையில் முழுமையான ஈடுபாடு ஆகியற்றை கற்றுக்கொண்டேன்.
இப்போது எனக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மத்தியில் சுமார் 37 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. நான் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தேன் என்பதற்காக எந்த சலுகைகளையும் பெற்றதில்லை. அப்படி சலுகைகளை ஏற்றுக்கொள்வது அந்த அமைப்பின் கொள்கைக்கு எதிரானது. பணக்காரர், ஏழை, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் என யாராக இருந்தாலும் அனைவரையும் நான் சமமாகத்தான் நடத்தினேன்”.
குறிப்பிட்ட கட்சி, கொள்கைக்காக ஒருதலைபட்சமாக இருந்ததில்லை. ஏனென்றால் நீதிக்காக சட்டம் வளையலாம், சட்டடத்துக்காக நீதி வளைந்து கொடுக்கக்கூடாது. இப்போதுகூட என்னால் முடியும் வேலைகளை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ். என்னை அழைத்தால் அவர்களுக்காக உழைக்க சென்றுவிடுவேன். என் வாழ்வில் நான் எந்த குற்றத்தையும் செய்ததில்லை. எனக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பிருக்கிறது எனக் கூறுவதற்கு தைரியம் இருக்கிறது. அந்த அமைப்பில் இருப்பது ஒன்றும் தவறான விஷயமல்ல” எனப் பேசினார் .
படிக்க: இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை
பிறப்பின் அடிப்படையில் ஒருவரை இழிவாக நடத்த வேண்டும் என்ற மனுதர்ம கொள்கையை நிலைநாட்டுவதை தனது லட்சியமாக கொண்டு செயல்படும்வரும் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவ்வமைப்பு எல்லோரையும் சமமாக பார்க்க கற்றுக்கொடுத்தது என்று இந்த சங்கி நீதிபதி சொல்வது எவ்வளவு பெரிய பொய்?
இவர் தனது வேலையில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டார் என்பதும் இவரது தேசபக்தி என்பதும் இந்நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கானதன்றி வேறொன்றுமில்லை. தற்போது அரசு கட்டமைப்பில் தனது வேலை முடிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைக்கு வேண்டுகோள் விடுக்கிறார், இந்த சங்கி நீதிபதி.
மேலும், சித்த ரஞ்சன் தாஸின் இப்பேச்சானது, நீதித்துறை, போலீசுத்துறை, கல்வித்துறை, பத்திரிக்கைத்துறை, இராணுவம், நிர்வாகம் என நாட்டின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட்டுகள் திட்டமிட்டு நிரப்பப்பட்டிருப்பதை மீண்டும் நிரூபிக்கிறது. தேர்தலில் மட்டும் பா.ஜ.க-வை வீழ்த்துவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்திவிட முடியாது என்பதையும் அரசு கட்டமைப்பில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை களையெடுப்பது பாசிசத்தை வீழ்த்துவதில் தலையாய கடமை என்பதையும் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸின் இப்பேச்சு நமக்கு உணர்த்துகிறது. அந்தவகையில் இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியை கட்டி அமைப்பதன் மூலமே அரசு கட்டமைப்பில் ஊடுருவி இருக்கும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட்டுகளை ஒழித்துக்கட்ட முடியும்.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube