இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது

ருகின்ற ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இது ‘இந்து’ மத மக்களின் உணர்வாக அன்றி பாசிசக் கும்பலின் கொண்டாட்ட நாளாகவே அமைந்துள்ளது. இந்நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலும் அதன் சங்கப்பரிவார அமைப்புகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதற்கான நாசகர வேலைகளை பார்த்துவந்துள்ளன. அதேசமயம் இன்று ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதற்கு பின்னால் வரலாறு நெடுக இந்திய நீதிமன்றங்களின் செய்துவந்த கரசேவை ஒளிந்துள்ளது.

1950-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது. 1949-இல் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது முதல் பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் கட்ட தாரைவார்க்கப்பட்டது வரை பாபர் மசூதி மீதான இந்துமதவெறியர்களின் ஆதிக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறையால் அது அங்கீகரிக்கப்பட்டது என்பதே உண்மை.

பைசாபாத் சிவில் நீதிமன்றத்தின் கரசேவை:

1949 டிசம்பர் 22 அன்று, பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நகர மாஜிஸ்திரேட் ஆகியோரின் ஒத்துழைப்போடு பாபர் மசூதிக்குள் இந்து மதவெறி கும்பலால் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது. இந்நிகழ்வுதான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை அப்புறப்படுத்திவிட்டு காவி குண்டர்களை தூக்கி சிறையில் வைப்பதற்கு பதிலாக, அயோத்தியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக்கூறி நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவின்பேரில் மசூதி வளாகம் முனிசிபல் வாரியத்தின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 1950-இல் மசூதியின் நுழைவாயில் நகராட்சி வாரியத்தால் பூட்டப்பட்டது. இந்நாளில்தான், பாபர் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு முடிவுரை எழுதப்பட்டது. அதன்பிறகு மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை.

1950-களில் மசூதி வளாகத்தில் ராமரை வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளே இருக்கும் சிலைகளை அகற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1951-ஆம் ஆண்டில் காவி குண்டர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பைசாபாத் சிவில் நீதிமன்றம், சிலைகளை அகற்றக்கூடாது என்றும் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யலாம் என்றும் அயோக்கியத்தனமாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை 1955-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இத்தீர்ப்பு பாபர் மசூதியை இஸ்லாமிய மக்களிடமிருந்து பிடுங்கி காவி பாசிஸ்டுகளின் கரங்களில் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது.

1959-ஆம் ஆண்டில், நிர்மோஹி அகாரா என்ற இந்து மதவெறி பிரிவினரும் சாமியார் ரகுநாத் தாஸும் பாபர் மசூதி நிலத்தின் உரிமையைக் கோரியும் அதனை கோயிலாக நிர்வகிக்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். 1961-ஆம் ஆண்டில், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டடத்தை மசூதியாக அறிவிக்க வேண்டும் என்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் கோரியது. அடுத்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன.

1986-ஆம் ஆண்டில், மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்து வளாகத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய மசூதியை திறந்துவிட்டு இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்தது. இதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக மசூதி வாயிலில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததையும் அந்தக் காலகட்டத்தில் (மசூதி பூட்டப்பட்டு வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட காலம்) முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதையும் கூறி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதித்த தனது தீர்ப்பை நியாயப்படுத்த முயன்றது நீதிமன்றம். மேலும், மசூதியின் பூட்டைத் திறப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்காது என்றும் மசூதி பூட்டப்பட்டிருப்பது கடவுள் சிலையிடருந்து பக்தர்களைப் பிரிக்கிறது என்றும் கரசேவை புரிந்தது.

பாபர் மசூதி இடிப்பும் உச்சநீதிமன்றத்தின் 1994 தீர்ப்பும்

இதற்கிடையே, டிசம்பர் 1990-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளால் பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டு அவ்விடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து 1993-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதே ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த அவசர சட்டம், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் தற்போதைய நிலை பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து வழக்குகளும் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு 1993-இல் 3:2 பெரும்பான்மையுடன் வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளைத் தடுக்கும் விதியை ரத்து செய்தது. இதன் விளைவாக, நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இதற்கிடையே பாபர் மசூதி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 1989-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வழக்குகளையொட்டி 2010-இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மோசடியான ஒரு தீர்ப்பை வழங்கியது. நிலத்தை மூன்றாகப் பிரித்து, சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா (இந்துமதவெறி அமைப்பு) மற்றும் ராமர் சிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையாளரான ராம் லல்லா விராஜ்மான் ஆகியோருக்கு தலா ஒரு பங்கைக் கொடுத்தது. இடிக்கப்பட்ட மசூதியின் பிரதான குவிமாடத்தின் கீழ் உள்ள நிலம் இந்துக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தின் வெளிப்புற முற்றமே வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முடிவை பலரும் விமர்சித்து எதிர்த்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலராலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, 2011-இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

ஜனவரி 2019-ஆம் ஆண்டு இவ்வழக்கை தூசிதட்டி எடுத்த அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த மோடி அரசின் சேவகனான ரஞ்சன் கோகோய் இவ்வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார்.

2019 மார்ச் மாதத்தில், இவ்விவகாரத்தில் தீர்வை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா, மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சு மற்றும் ஆன்மீகத் தலைவர் என்ற பெயரில் திரியும் மோசடிக்காரனும் சங்கியுமான ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை நீதிமன்றம் அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஏமாற்று முயற்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்கியது. இறுதியாக நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 1949-இல் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது மற்றும் 1992-இல் பாபர் மசூதியை இடித்தது ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டு, நிலத்தின் உரிமையை ராம் லல்லா விராஜ்மானுக்கு நீதிமன்றம் வழங்கி காவி பாசிஸ்டுகளுக்கு தங்களது உச்சக்கட்ட கரசேவையை புரிந்தது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு நாடகமாடியது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்று கூறிவிட்டு குற்றம் நடந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது அயோக்கியத்தனமானது என்றும் பாபர் மசூதியை இந்துமதவெறியர்கள் அபகரித்ததை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கிவிட்டது என்றும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீதிருந்த தங்களது கடைசி துளி நம்பிக்கையையும் இழந்தனர்.

மேலும், சட்ட ரீதியாகவும் இந்த தீர்ப்பில் பல்வேறு ஓட்டைகளும் குளறுபடிகளும் இருந்தன. இந்திய வரலாற்றில் தீர்ப்பு எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத ஒரே தீர்ப்பு இந்த தீர்ப்பேயாகும். மேலும், நீதிபதிகள் அமர்வில் பெயர் குறிப்பிடாத நீதிபதி ஒருவரின் கூடுதல் சேர்க்கையும் இத்தீர்ப்பில் இருந்தது. இதனை இந்தியாவிலுள்ள கணிசமான சட்ட வல்லுநர்கள் அம்பலப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பையடுத்துதான் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்துராஷ்டிரத்தின் திறவுகோலாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலின் இந்துமதவெறியாட்டங்களோடு பாசிச கும்பலுக்கு கரசேவையாற்றிய நீதிமன்றங்களின் துரோகமும் அயோக்கியத்தனங்களும் இணைந்துள்ளன.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க