ர்நாடகா அரசு பசுக்களைப் பாதுகாப்பதற்காக புண்ணியகோடி (Punyakoti Dattu Yojane) என்ற பசுக்களை தத்தெடுத்து வளர்க்கும் திட்டத்தை ஜூலை 28 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோசாலைகளில் (goshalas) உள்ள பசுக்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

பொதுமக்களும் இத்திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கோசாலைகளின் நிதி நெருக்கடி குறையும் என்றும் கோசாலைகள் மக்களின் ஒத்துழைப்புடன் இயங்கும் என்றும் கர்நாடகா அரசின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான் கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில் கோசாலைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளைப் பராமரிக்கும் புண்ணியகோடி திட்டத்திற்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படவுள்ளது. இதற்கான உத்தரவை நவம்பர் 16 அன்று கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஒருமுறை நன்கொடையாக சுமார் ரூ.100 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களிப்புகள் ஆரம்பத்தில் தன்னார்வமானவை என்று கூறப்பட்டது. ஆனால், பங்களிக்க விரும்பாத ஊழியர்கள் நவம்பர் 25-க்குள் சம்பந்தப்பட்ட துறைகளின் சம்பளம் வழங்கும் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக தங்களின் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த உத்தரவு அச்சுறுத்துகிறது.

குரூப்-A ஊழியர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து ரூ.11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-B ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-C ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும். குரூப்-D ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட இத்தொகை பிடித்தம் செய்யப்படும்.

இத்திட்டத்திற்காக பிரத்தியேகமாக ஒரு இணையதளம் (Punyakoti Adoption Portal) தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.11,000 செலுத்துவதன் மூலம் ஒரு பசுவை பராமரித்துக் கொள்ளலாம். மேலும், இதில் “பசுவிற்கு உணவளி” (Feed a Cow) என்று ஒரு திட்டம் உள்ளது. இதன் கீழ் ரூ.70 செலுத்தி ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு உணவு வழங்கலாம். ஒருவர் தமது விருப்பத்திற்கேற்ப எத்தனை பசுக்களுக்கு வேண்டுமானாலும் உணவு வழங்கலாம்.


படிக்க: பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !


தற்போது கர்நாடகாவில் 215 கோசாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், 100 கோசாலைகளை கர்நாடகா அரசு உருவாக்க இருக்கிறது. மக்களிடம் நிதி வசூல் செய்து இந்த கோசாலைகளை இயக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் பிரபு செளஹான், மாவட்டத்திற்கு ஒரு பசு என்ற விகிதத்தில் 31 பசுக்களைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளார். அவர் தனது பிறந்த நாளன்று பசுக்களை தத்தெடுத்ததாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது பிறந்த நாளன்று 11 பசுக்களை தத்தெடுத்துக் கொண்டதாகவும் கூறினார்; இவ்வாறு மக்களும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் (Prevention of Slaughter and Preservation of Cattle Act, 2020) சனவரி 2021-இல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 இலட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பசுக்களைப் பாதுகாப்பதில் தாங்கள் குஜராத் மாடலையே பின்பற்றுவதாக அமைச்சர் செளஹான் தெரிவித்துள்ளார். அதாவது, போலீசு மற்றும் காவி குண்டர்களை வைத்து இசுலாமியர்களையும் தலித்துகளையும் தாக்குவதைத்தான் கூறுகிறார் போலும்.

இத்தடையால் விவசாயிகள் தங்களுக்கு பயன்படாத வயதான, நோயுற்ற மற்றும் ஊனமுற்ற பசுக்கள், காளைக் கன்றுகள் போன்றவற்றை விற்க முடியாமல் போனது. அவற்றைப் பராமரிக்க இயலாததால் அவை தெருக்களில் அவிழ்த்து விடப்பட்டன. அரசு உருவாக்கிய இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே கோசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்படும் பசுக்களும் கோசாலைகளில் வைத்து பராமரிக்கப்படும்.

மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதன் மூலம் மக்கள் எதை உண்ண வேண்டும் என்று பாசிச பாஜக அரசு தீர்மானிக்கிறது. இந்நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளை சரி செய்வதற்காக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து கோசாலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், அவற்றை இயக்குவதற்கும் மக்களிடம் இருந்தே நிதி வசூல் செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தனது இந்துராஷ்டிர திட்டத்திற்காக அரசு ஊழியர்களையும் உழைக்கும் மக்களையும் சுரண்டும் வேலையில் இறங்கியுள்ளது கர்நாடக பாஜக அரசு.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க