புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும்.

0

மீபத்தில் (ஜனவரி 18) உத்திர பிரதேசத்தின் முராதாபாத்தில் உள்ள “இந்து கல்லூரி”யில் புர்கா அணிந்து வந்த மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தின் (Mahatma Jyotiba Phule Rohilkhand University) உறுப்புக் கல்லூரிகளில் ஒன்று தான் இந்து கல்லூரி. இக்கல்லூரி அமைந்திருக்கும் முராதாபாத் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஆகையால் இங்கு அதிக மாணவிகள் பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 18) புர்கா அணிந்து வந்த பன்னிரண்டிற்கும் மேலான மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அம்மாணவிகள் அங்கேயே கிட்டத்தட்ட 40 நிமிடம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய தலைமை பிராக்டர் (chief proctor) ஏ.பி. சிங் “புதிய ஆடை விதிகள் ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 14 முதல் இவ்விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீருடையில் இல்லாத யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய விதிகளின்படி கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வளாகத்தின் உள்ளே வரும்போது புர்காவை அகற்றிவிட்டு வெளியே சென்றபிறகு வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம் என்று நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கல்லூரி ஆசிரியர்கள் புதிய ஆடை விதிகளுக்கு இணங்கி செல்லுமாறு மாணவிகளை கோரியுள்ளனர். ஆனால் போராடிய மாணவிகள் அதற்கு மறுத்து விட்டனர்.


படிக்க: ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !


சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அமைப்பு இம்மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியது. “சீக்கியர்கள் டர்பன் மற்றும் கிர்பன் (ஒரு குறு வாள்) வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்போது, இஸ்லாமிய மாணவிகள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். இது அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாகும்” என்று அவ்வமைப்பினர் கூறினர்.

இது காவிகளின் திட்டமிட்ட தாக்குதலே. முன்னதாக, டிசம்பர் 2021-இல், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பி.யூ.கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி விதிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்யவில்லை என்ற போதிலும் கல்லூரி நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் ஹிஜாபுக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்து கலகம் செய்தனர். ஆளும் கர்நாடக பாஜக அரசோ “சீருடை அணிவது அனைவருக்கும் கட்டாயம்” என்று கூறி கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.


படிக்க: ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!


உடுப்பியில் தொடங்கிய இப்பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதே காலகட்டத்தில் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ஜவுன்பூர்-இல் ஒரு கல்லூரியிலும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு தனியார் கல்லூரியிலும் ஹிஜாபுக்கு அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் காவி கும்பல் அரசியல் ஆதாயம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவே காவி பாசிஸ்டுகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க