த்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ய இந்துமதவெறி குண்டர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதேபோன்ற அழைப்பை விடுத்துள்ளார்.
பஜ்ரங் தளத்தின் உறுப்பினரான பூஜா (19 வயது)
கடந்த பிப்ரவரி 20 அன்று இரவு ஹிவமோக்காவில் ஒரு கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட ஹர்ஷாவுக்கு நீதி கோரி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அடுத்த நாள் மாவட்டம் முழுவதும் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் பதிவாகின. அதில், முஸ்லீம் பகுதிகளை சேதப்படுத்தி வாகனங்களுக்கு தீ வைத்தது இந்துத்துவக் கும்பல்.  அவரது மரணம் தொடர்பாக இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 25 அன்று சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில், பஜ்ரங் தளத்தின் உறுப்பினரான பூஜா (19 வயது), விஜயபுராவில் பஜ்ரங் தள்-ஐச் சேர்ந்த ஹர்ஷாவின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம் மக்களை கொலை செய்ய அழைப்பு விடுத்துப் பேசியுள்ளார்.
படிக்க :
ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
“தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்போம்; பால் கேட்டால் மோர் கொடுப்போம்; ஆனால், இந்தியா முழுவதும் ஹிஜாப் வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் (முஸ்லீம்கள்) சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
‘காவி இந்தியா’வில் செய்யப்பட்ட அனைத்து கைதுகளுக்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், அது போதாது. உங்களால் (அரசாங்கத்தால்) செய்ய முடியாவிட்டால் எங்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் கொடுங்கள் ஹிஜாப் அணிந்த 6 மாணவிகளை மட்டுமல்ல ஹிஜாப் அணிந்த 60,000 பேரையும் துண்டு துண்டாக வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
விஜயபுரா பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஸ்ரீநாத் பூஜாரி சங்கப்பா பூஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் “இந்த வகையான வெறுப்பு பேச்சு சரியானது அல்ல. உன்னை வெட்டுவோம்; கொல்வோம் என்ற இப்படிப்பட்ட பேச்சுக்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகரும் ஆர்வலருமான சேத்தன் பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டார். பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் செயற்பாட்டாளர் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், பிரமோத் முத்தாலிக் (ஸ்ரீ ராம் சேனை தலைவர்) போன்ற வெறுப்புப் பேச்சுகளை பேசிய இவர்கள் மீது போலீசு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. இதைக் கேட்டுவிட்டு நாம் அமைதியாக இருக்க முடியாது. அப்படிப் பேச அவருக்கு (பூஜா) பயிற்சி கொடுப்பது யார்? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
ஆர்வலரும் வழக்கறிஞருமான பூஜாரி “வரவிருக்கும் தேர்தல்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு (பாஜக) தேவை. ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் சரிந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. 2 கோடி வேலை வாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இப்போது வாக்குறுதிகளை கூற எந்த காரணமும் இல்லை. மக்கள் அவர்களை எதிர்க்கிறார்கள் இதன் காரணமாக பாஜக கவனத்தை திசை திருப்புகிறது.
படிக்க :
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
வகுப்புவாத  வன்முறையால் மோசமான நாட்கள் வரவுள்ளன. பஜ்ரங் தள் வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்தி மற்றவர்களைத் தூண்டுவதற்கு இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறது. அவர்களின் பேச்சுக்கு மக்கள் கைதட்டுகிறார்கள் என்றால் அவர்களின் வார்த்தைகளுக்கு முழு ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம். அதற்கான முழுப்பொறுப்பையும் அந்த அமைப்பு ஏற்க வேண்டும்” என்று கூறினார்.
இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் விடியோக்கள் இருந்தபோதிலும் பஜ்ரங் தள் ஆர்வலர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
நாடு முழுவதும் முஸ்லீம் மக்களை கொலை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் இந்து மதவெறி அமைப்புகள் வெறுப்பு பிரச்சாரத்தை துவங்கிவிட்டன. மீண்டும் ஓர் குஜராத் படுகொலை அரங்கேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முஸ்லீம் சிறுபான்மையின மக்களை காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றுவது நம் அனைவரின் கடமை.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்